கபிலர் : திருச்செங்கட்டான்குடி விநாயகர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

மூன்றாவது நாமா — ‘கபிலர்’. பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம்.

பல ரூப பேதங்களில் வெவ்வேறு நிறங்களாக விக்நேச்வரர் இருக்கிறார். “சுக்லாம்பரதரம்” ச்லோகத்தில் ‘சசிவர்ணம்’ என்று நிலா மாதிரி வெளுப்பாகச் சொல்லியிருக்கிறது. கும்பகோணத்திற்கு கிட்டே திருவலஞ்சுழியிலும் திருத்துறைப்பூண்டிக்குக் கிட்டே இடும்பாவனத்திலும் வெள்ளைப் பிள்ளையார் — ச்வேத விநாயகர் — இருக்கிறார். ஒளவையார், ‘அகவ’லிலோ அவரை “நீலமேனி” என்று சொல்லியிருக்கிறாள். அவளே “வாக்குண்டாம்” பாட்டில் “துப்பார் திருமேனி” என்று பவள வர்ணமாகவும் பாடியிருக்கிறாள். பல ரூபங்களிலும் குழந்தை ஸ்வாமி அந்தக் கிழப்பாட்டிக்கு தர்சனம் தந்திருப்பார்!

வடக்கேயெல்லாம் விக்நேச்வரர் என்றாலே ஒரே சிவப்பாக ஸிந்தூரத்தைப் பூசித்தான் வைத்திருப்பார்கள்.

நம் சோழ தேசத்தில் “கணபதீச்சுரம்” என்றே பேர் பெற்றிருக்கிற கோவில் இருக்கிற ஊருக்கு செங்காடு — முன்னே ‘திரு’வும் பின்னே ‘குடி’யும் சேர்த்துக்கொண்டு திருச்செங்காட்டாங்குடி என்று பேர். ‘டா’வைக் குறிலாக்கித் திருச்செங்காட்டங்குடி என்று தமிழ் நூல்களில் இருக்கும். அது செங்காடு ஆனதற்குக் காரணம் விக்நேச்வரர் கஜமுகாஸுரனை ஸம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் அந்தக் காடு முழுதும் பாய்ந்ததுதான். அப்போது பிள்ளையாரும் செக்கச்செவேலென்று ஆகிவிட்டார். இல்லை. ‘செக்கச் செவேல்’ இல்லாமல் கறுப்பான ஆனை உடம்பில் ரத்த வர்ணம் தோய்ந்து ‘கபில’ நிறமாகி விட்டாரென்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மஹாவீரனை அடியோடு ரத்தம் போகப் பண்ணிக் கொன்றதால் தமக்கு வீரஹத்தி தோஷம் வந்ததாக விக்நேச்வரர் நினைத்தாராம். அவருக்கேது தோஷம்? நமக்கு வழிகாட்டத்தான் தெய்வங்களும் இப்படியெல்லாம் நடிப்பது! ராவணனைக் கொன்றதால் ராமர் தோஷம் வந்துவிட்டதாக நினைத்து ப்ராயச்சித்தமாக ராமலிங்கம் ஸ்தாபித்தாரல்லவா? அந்த மாதிரி பிள்ளையாரும் இந்தச் திருச்செங்காட்டாங்குடியில் லிங்கம் ஸ்தாபித்து சிவ பூஜை பண்ணி தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். அதனால் ராமர் சிவ பூஜை பண்ணிய இடம் ராமேச்வரம் ஆனது மாதிரி அந்தக் கோயிலுக்கு கணபதீச்வரம் (தமிழிலக்கணப்படி ‘கணபதீச்சுரம்’) என்று பேர் ஏற்பட்டுவிட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விக்நேச்வர காயத்ரீ
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள்
Next