விக்நேச்வர காயத்ரீ : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரியதாக ஒரு காயத்ரீ மந்த்ரமுண்டு. உபநயனம் பண்ணி, ப்ரஹ்மோபதேசம் என்று செய்கிற காயத்ரீ மந்த்ரம் ஸூர்ய ஜ்யோதிஸ்ஸில் இருக்கப்பட்ட பரமாத்ம சக்தியான ஸவிதா என்கிற தெய்வத்திற்கான காயத்ரீ. காயத்ரீ என்பது 24 எழுத்துக் கொண்ட ஒரு மந்த்ரம். அந்த எண்ணிக்கையில் எல்லா தேவதைகளுக்கும் மந்த்ரங்கள் இருக்கின்றன. இந்த மந்த்ரங்கள் எட்டெட்டு எழுத்துள்ள மூன்று பாதங்களாகப் பிரியும். ஒவ்வொரு பாதத்திலும் அந்த மந்த்ரம் எந்த தேவதைக்கானதோ அந்த தேவதையின் ஒவ்வொரு பெயரைச் சொல்லியிருக்கும். முதல் பாதத்தில் ஒரு பெயரைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவரை அறிவோம்’ என்று வரும். இரண்டாம் பாதத்தில் அந்த தெய்வத்திற்கே இன்னொரு பெயரைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவரை தியானிப்போம்’ என்று வரும். மூன்றாம் பாதத்தில் மூன்றாவதாக இன்னொரு பெயரைச்சொல்லி, ‘அப்படிப்பட்டவர் நம்மை நல்ல வழியில் தூண்டி விடட்டும்!’ என்று பிரார்த்தனை வரும்*. மஹா நாராயணோபநிஷத்தில் உள்ளபடி, லோக வழக்கில் பிரஸித்தமாகவுள்ள இந்த காயத்ரி மந்த்ரங்களில் பரமசிவன், விக்நேச்வரர், ஸுப்ரம்மண்யர், நந்திகேச்வரர் ஆகிய நாலு பேரின் காயத்ரிகளிலும் முதல் பெயராக ‘தத்புருஷ’ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது. ஆனால், விக்நேச்வரரைக் குறித்ததாகவே அதர்வ வேதத்தில் ஒரு உபநிஷத் இருக்கிறது. ‘கணபத்யதர்வசீர்ஷம்’ என்று அதற்குப் பெயர். அதில் ஒரு கணபதி காயத்ரீ கொடுத்திருக்கிறது! இந்த காயத்ரீயில் முதல் பெயராக ‘ஏகதந்த’ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது.


* ஸவிதாவுக்கான காயத்ரியில் முதலிரு பாதங்களுக்குமாகச் சேர்த்து ‘தியானிப்போம்’ என்று வரும். மூன்றாம் பாதத்தில் இன்னொரு பெயர் சொல்லாமலே, ‘நம் அறிவைத் தூண்டட்டும்’ என வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பெண்ணாகவும் இருப்பவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கபிலர் : திருச்செங்காட்டாங்குடி விநாயகர்
Next