பெண்ணாகவும் இருப்பவர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈச்வர தத்வம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்பது) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி [பாதிப் பாதி] ஸ்திரீ புருஷர்களாக அர்த்தநாரீச்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே ‘காப்பி’ பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்!

முதலில் ஸுமுகர் — அழகான வாய் உள்ளவர்; அடுத்தாற் போல ஏகதந்தர் — அந்த வாயிலே உள்ள தந்தத்திலே ஒன்று இல்லாதவர். குழந்தை என்றால் அதற்குப் பல் விழுந்திருக்கணும்தானே? பொக்கை வாய்ச் சிரிப்பு என்று அதைத் தான் விசேஷித்துச் சொல்வது. ஜகத்தின் மாதா பிதாக்களான பார்வதீ – பரமேச்வரர்களின் முதல் குழந்தை ஒரு தந்தம் போன பொக்கை வாயுடன் ஸுமுகமாகச் சிரித்துக் காட்டுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஏகதந்தர் : ' என்பும் பிறர்க்குரியர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  விக்நேச்வர காயத்ரீ
Next