சித்திர ஆதிசங்கரர்
பூவுலகில் ஒரே பரம் பொருளே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று காரியங்களுக்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று மூர்த்திகளாக இருக்கின்றன. ஒவ்வொரு யுகத்திலும் உலக நலனைக் குறித்து விஷ்ணு பகவான் பூலோகத்தில் அவதாரம் செய்கிறார். அது போல் பிரம்மாவிற்கு அவதாரம் இல்லை. சிவனுக்கும் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் கிடையாது. கலியுகத்தில் அவருடைய அம்சமாக, ஞானோபதேசம் செய்வதற்காக ஸ்ரீ சங்கரர் என்னும் திருநாமம் பூண்டு அவதாரம் நிகழ்ந்தது. சிவபெருமான் ஞானோபதேசம் செய்யும் பொழுது தக்ஷிணாமூர்த்தி என்னும் திருநாமத்துடன் விளங்குகிறார். அவருடைய உபதேசம் வாய்மொழியாக இல்லாமல் கையில் சின்முத்திரையின் மூலமாகவே உபதேசம் செய்கிறார். முதிர்ந்த மக ரிஷிகள் உட்பட பலரும் தங்கள் சந்தேகங்களை சின் முத்திரையின் முலமாகவே தெளிவு படுத்திக் கொள்கிறார்கள். சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஞானமார்க்கம் குறைந்து நிரீசுரவாதம் தலை தூக்கி நின்றது. அந்தச் சமயத்தில் சகல தேவர்களும், மகரிஷிகளும் கைலாயம்பதியில் வசிக்கும் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியை அடைந்து, பூலோகத்தின் நிலையை எடுத்துக்கூறி மானிடர்களுக்கு நல்ல அறிவையும் ஞானத்தையும் அருள்பாலிக்க வேண்டினர். கருணைக்கடலான தக்ஷிணாமூர்த்தி அவர்களும் பூவுலகில் அவதாரம் செய்வதற்கு இசைந்தார். அவருடைய அவதார கார்யத்திற்கு உதவியாக பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களும் பூலோகத்தில் பிறவி எடுக்கச் சம்மதித்தார்கள். தேவரும் முனிவரும் உள்ளம் குளிர்ந்தனர். இதே சமயத்தில், பாரத தேசத்தில் எழிலார்ந்த கேரளத்தில் உள்ள காலடி என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்ப்போம். காலடியில் சிவகுரு என்று ஒர் அந்தணப் பெரியார் வாழ்ந்து வந்தார். ஆர்யாம்பாள் என்பவர் அவரது மனைவி. |
|