நமது பாரம்பரியம்
தர்மத்திற்கு அடிப்படையானது வேதங்கள். தர்ம சாஸ்திரங்கள், உலகம் ஆகியவை. மனித சமூகத்தின் வாழ்க்கைக்கு அடிப்படையும் தர்மமே. இந்த உலகம் தர்மத்தின் ஆதாரத்தில்தான் செயல்படுகிறது.
தர்ம வழியில் ஈடுபட்டுள்ள மக்களைக் கொண்டுதான் நமது பாரம்பரியமும் கலாசாரமும் நிர்ணயிக்கப்படுகிறது. உலகம் சுமூகமாக செயல்பட நிரந்தரமான விதிமுறைகள் வகுக்கக்ப்பட்டுள்ளன. இதனைத் தான் 'தர்மம்'என்று சொல்வது. இது உலகில் வேறு எந்த மதத்திற்கோ அல்லது கலாசாரத்திற்கோ உரித்தான சொல் அல்ல.
உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை ஒன்று உளது எனில் யாவருக்கும் மிஞ்சிய ஒரு தெய்வீக சக்தி மக்களின் வாழ்வினை நிர்ணயிக்கிறது என்பதுதான். இந்த சக்தி கோயில்களிலும், புனித தலங்களிலும், நிறைந்து இருக்கிறது. கோயில்கள் ஆகம சாத்திரங்களின் அடிப்படையில் நிர்மாணம் செய்யப்படுகின்றன.கோயில் வழிபாட்டு முறையும், வழிபடும் பக்தர்கள் நடந்து கொள்ளும் முறையும், நன்கு விளக்கப்பட்டுள்ளன. இதனைப் பின்பற்றி நடைமுறையில் கொணர்வதில்தான் பாரம்பரியமும் கலாசாரமும் சிறந்து விளங்குகிறது.
கோயில்கள் நான்கு வகையாக உள்ளன.
1. ஸ்வயம் வ்யக்தம் - தானாகவே இறை சக்தி மிகுந்து இருக்கிற தலங்கள்.
2. ஆரிஷம் - ரிஷிகள் தவம் செய்து தெய்வீக சக்தியினை வரவழைத்த தலங்கள்.
3. தைவதம் - தேவர்கள் தவம் செய்து பாவம் தொலைந்து விடுதலை பெற்ற தலங்கள்.
4. மானுஷம் - மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
முதல் மூன்று வகையான கோயில்களில் தெய்வீக சக்தி தானாக தோன்றியபின் பிற்காலத்தில் அரசர்கள், நிலச்சுவான்தார்கள், பக்தர்கள் மூலமாக ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்பட்டு, ஆகம சாஸ்திர முறைப்படி பெரிய கோபுரங்கள், கர்ப்பகிரகங்கள், மண்டபங்கள் ஆகியவை எழுப்பப் பட்டு, சிற்பசாஸ்திரப்படி தகுந்த சிற்பங்கள் அங்கங்கு தேவைக்கு ஏற்ப வைக்கப் பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
நான்காவது வகையில் கோயில்கள் எழுப்பப்பட்டு, விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம, சிற்ப சாத்திரப்படி செய்யப்பட வேண்டிய கும்பாபிஷேகம் போன்றவை நிறைவேற்றப்பட்டபின் தெய்வீக சக்தி அந்த பிம்பத்தில் வந்தடைகிறது.
தர்ம சாத்திரத்தில் இறப்பிற்குப்பின் ஆன்மா நற்கதி அடைவதற்கு கோயில் எழுப்புதல் போன்ற பூர்த்த தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
எல்லா உயிரினங்களும் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்ற ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டவை என்கின்றது வேதம். இந்த ஐந்து பூதங்களும் பரமாத்மாவின் பகுதி. ரிஷிகள் தங்களின் தவ வலிமையினால் பரமாத்மாவை கண்டனர். இவற்றை 'இயற்கை'என அழைக்கின்றனர். இந்த ரிஷிகள் 'மந்த்ரத்ரஷ்டாக்கள்'எனப்படுவர். ஏற்கனவே உள்ள அசைவுகளைக் கண்டு உணர்ந்து அவற்றினை வேத வடிவில் அளித்தனர். அவர்கள் எவரும் வேதத்தினை படைத்தவர்கள் அல்ல.
எங்கனம் ந்யூடன் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பூ ஆகர்ஷன சக்தி இருந்து வந்ததோ அதே போன்று 'மந்திரங்கள்'அல்லது ஒலி அசைவுகள் ரிஷிகள் உணர்வதற்கு முன்பும் இருந்து வந்தன.
உலகத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட அத்வைத சித்தாந்தத்தை ஆதிசங்கரர் பரப்பினார். இதன்படி பரமாத்மா ஒருவரே. நாம் யாவரும் அவரின் பகுதிகளே. ஆனால் இந்த நிலையினை அடைவதற்கு பல்வேறு கட்டங்களை கடந்து செல்லவேண்டும். ஆகவே இந்துக்களால் வணங்கப்பட்ட பல்வேறு கடவுளர்கள் மீது அவர் பதிகங்கள் (ஸ்லோகங்கள்) அருளினார். மனித சமுதாயத்தின் நலனுக்காக அவர் ஆறு தெய்வீகக் கொள்கைகளை உண்டாக்கினார்.
காணாபத்யம் : ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை களையும் கடவுள் கணபதி. இவருக்கு நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு ஏற்றவாறு மரத்தடியிலோ, நதிக்கரையிலோ அல்லது குளக்கரையிலோ ஒரு கூரையும் கூட இல்லாமல் இவரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கௌமாரம் : சுப்ரமணியர் அல்லது குமரன் சிவசக்தியின் வடிவாக வணங்கப்படுகிறார். உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் காக்கின்றார்.
சைவம் : இது சிவனின் வழிபாட்டை குறிப்பது. சக்தியினை வழிபடுவதற்கு சாக்தம் என்பர். சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவ என்பதற்கு அமைதி என்று பொருள்.
வைஷ்ணவம் :லக்ஷ்மியுடன் கூடிய விஷ்ணுவை வழிபடும் ஒரு பிரிவு. விஷ்ணு லக்ஷ்மியுடன் கூடி செல்வத்தையும் மேன்மையையும் தந்து உலகினை காத்து ரக்ஷிக்கிறார்.
சௌரம் :சூரியனை வழிபடும் பிரிவு. சக்தியின் உருவாகவும், மழை அளிப்பவராகவும், உடல் நலத்தை அருள்பவராகவும், பயிர்கள் வளர்ந்து செழிக்க உதவுபவராகவும் வணங்கப்படுகிறார்.
சாக்தம் : அம்பாள் வழிபாடே சாக்தம் என்பது ஒவ்வொரு பெண் வடிவம் உயிருள்ள பெண் தெய்வம். இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக கன்யா பூஜை அல்லது சுகாஸினி பூஜை என்று வணங்கி வழிபடுகின்றனர்.
மனித உடல் ஐந்து பூதங்களால் ஆனது என்பதால் இந்துக்கள் இந்த ஐந்து பூதங்களையும் பரமேஸ்வரனாக பஞ்சலிங்க க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்ற தலங்களில் வழிபடுகின்றனர்.
மற்றவை யாவையையும் காட்டிலும் உயிர் மிகவும் முக்கியம் என்பதால் சிவனை சிவன் கோயில்களில் ஜ்யோதிர்லிங்க வடிவில் வழிபாடு செய்யப்படுகிறது. ஜ்யோதிர் லிங்க க்ஷேத்திரங்கள் என்று முக்கியமாக பன்னிரெண்டு தலங்கள் உள்ளன.
காக்கும் தொழில் கொண்ட விஷ்ணு பல அவதாரங்களை மேற்கொண்டுள்ளார். அதனை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய பல அவதாரங்களுக்காக பல ஆலயங்கள் அவருக்காக உள்ளன.
ஒவ்வொரு கிராமம் அல்லது நகரம் தனக்கென ஒரு கோயிலை கொண்டிருக்க வேண்டும் என்று இந்துக்கள் நம்புகின்றனர். நம்மிடையே வாழ்ந்த மகான்களில் சிறந்தவரான பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஒவ்வொரு தெருவின் ஒரு கோடியில் சிவனுக்கு ஒரு கோயிலும், கணபதி, குமரன், சக்தி, நவக்கிரகங்கள் முதலியவர்காக கோயில்களும் மறு கோடியில் விஷ்ணுவிற்காக ஒரு கோயிலும் இருக்கும் எனக் கூறியுள்ளார்கள்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனவும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று எனவும் பழமொழிகள் உள்ளன.
இந்த தொகுப்பில் இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களைப் பற்றி அந்த கோயில்களின் மூர்த்திகளுடைய படங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளது. நமது மதத்தைப் பற்றி பக்தர்கள் தெரிந்து கொள்ளவும், மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தி நமது கலாசாரத்தினை அறிந்து கொள்ள உதவும் என நம்புகிறோம்.
| காணாபத்யம் |
| கௌமாரம் |
| சைவம் |
| வைஷ்ணவம் |
| சௌரம் |
| சாக்தம் |





