வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அப்புறம் அந்த ஊருக்கே வாதாபி கணபதி வந்து சேர்ந்தார். அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அஸுரனை ஜெரித்துக் கொள்வதற்காக அகஸ்த்யர் உபாஸித்த கணபதி அவர். திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே. வாதாபி என்ற அஸுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அஸுர வாதாபி வாழ்ந்துவந்த ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகராக ஆயிற்று.

சளுக்கிய ராஜாக்களின் புலகேசி என்று பேருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ‘புலிகேசி’ என்று தப்பாகச் சொல்கிறார்கள். புலியுமில்லை. எலியுமில்லை. சளுக்கிய சாஸனங்களில் செப்பேடுகள் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும். அப்படிக் கன்னடத்தில் ‘பொலெகேசி’ என்று சொல்லியிருக்கிறது. அதை பல பேர் பல தினுஸாக ரூபம் பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள். ‘பொலே’ என்பதற்குக் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வம்சத்தினர்களில் ராஜாவான பிறகு எல்லாருமே ஸம்ஸ்க்ருதப் பெயர்தான் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்தப் பெயரைப் ‘புலகேசின்’, ‘புலகேசி’ என்று ஸம்ஸ்க்ருதமாகவே சரித்ராசிரியர்கள் தீர்மானம் பண்ணி, இங்கிலீஷில் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

‘புலகேசி’ என்றால் புல[ள]காங்கிதம் அடைவதென்கிறோமே, அப்படி ஆனந்தத்தில் மயிர்க்கூச்சு எடுத்திருப்பவன் என்று அர்த்தம். ‘ரிஷிகேசன்’ என்று தப்பாகச் சொல்லும் ‘ஹ்ருஷீகேசன்’ என்ற பெயருக்கும் அப்படி ஒரு அர்த்தமுண்டு. ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றை அடக்கியாளும் ஈசன் ஹ்ருஷீகேசன் என்று ஆசார்யாள் [விஷ்ணு] ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் ஒரு அர்த்தம் சொன்னாலும், ஸுர்ய சந்திர ரூபங்களில் பகவான் உள்ளபோது அவற்றின் கேசம் போன்ற ரச்மி [கதிர்]களால் உலகத்தை மகிழ்விப்பதாலும், இப்படிப் பெயர் என்று இன்னொரு அர்த்தமும் கொடுத்திருக்கிறார். ‘ஹ்ருஷ்’ என்கிற தாது மயிர்க்கூச்செடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதைக் குறிக்கும். வீர தீர ஸாஹஸங்களை ஒரு ராஜா தானும் மயிர்க்கூச்செறிந்து செய்வான்; அதைப் பார்க்கிற, கேட்கிறவர்களும் மயிர்க்கூச்செறியும்படிப் பண்ணுவான். அப்படிப் புளகமடையச் செய்கிறவனே புலகேசி. ‘புலம்’ என்றாலே புளகம்தான். புளகமுற்ற கேசம் உடையவன் புலகேசி. ‘புலக + ஈச’ : ‘புகளமடைந்தவனும், ராஜாவாக இருக்கிறவனும்’ என்று பிரித்துச் சொல்லலாம்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் பார்க்கப்போகும் கதையிலே வரும் இரண்டாவது புலகேசிக்குப் போட்டியாயிருந்த இரண்டு பெரிய ராஜாக்களில் ஒருத்தன் மஹேந்த்ரவர்மப் பல்லவன். அவனைவிடப் பெரிய போட்டி வட தேசத்தில் ஸாம்ராஜ்யாதிபதியாயிருந்த ஹர்ஷவர்த்தனன். ‘ஹர்ஷ’ என்பதற்கும் ஆனந்தத்தில் மயிர் கூச்செடுத்திருப்பவன் என்பதுதான் அர்த்தம். அந்த ஹர்ஷனையே புறமுதுகு காட்டும்படி பண்ணினவன் புலகேசி. அதனாலேயே அந்த பெயரின் அர்த்தத்தைக் கொண்ட ‘புலகேசி’ப் பெயரைத் தானும் வைத்துக் கொண்டிருப்பான் போலிருக்கிறது! ராஜாவாவதற்கு முந்தி அவனுக்குப் பேர் எரெயம்மா என்பது. அது கன்னடப் பேர். ராஜாவான பிறகு ஸம்ஸ்கிருத பேர் வைத்துக் கொண்டபோது, தன் பாட்டனார் பேர் புலகேசி என்று இருப்பதையும் அது தன்னுடைய arch rival ஆன (முக்கியமான போட்டியாளனான) ஹர்ஷன் என்பதற்கே இன்னொரு வார்த்தையாகவும் இருப்பதைப் பார்த்து அந்தப் பேர் சூட்டிக் கொண்டிருப்பானோ என்று தோன்றுகிறது.

கேசத்திற்கு ‘அளகம்’ என்று ஒரு பேர். யக்ஷராஜனும், பணத்துக்குத் தேவதையுமான குபேரனுக்கு அளகேசன் என்று பேர். அவனுடைய ராஜதானி அளகாபுரி. ரோமாஞ்சம் உண்டாக்கும் சிறப்பை அளகேசன். ஹ்ருஷீகேசன், புலகேசி முதலிய பெயர்கள் காட்டுகின்றன.

இரண்டாவது புலகேசி ஸமாச்சாரத்திற்கு வருகிறேன். முதலில் சிற்றப்பாவால் வஞ்சிக்கப்பட்டு ராஜ்யாதிகார உரிமையை இழந்து கஷ்டப்பட்டான். அப்புறம் புஜ பல பராக்ரமத்தால் சிற்றப்பாவை வீழ்த்தி ஸிம்ஹாஸனம் ஏறினான். சளுக்ய ராஜாக்களுக்குள்ளேயே தலைசிறந்த இடம் பெற்றான். ‘ஸத்யத்திற்கு புகலிடமாயிருப்பவன்’ என்ற அர்த்தமுள்ள ‘ஸத்யாச்ரயன்’ என்ற பட்டத்தோடு ஆட்சி நடத்தினான். ராஜாதிராஜ ஹர்ஷவர்த்தனனும் தன்னை எதிர்த்துப் போராட முடியாதபடி கலங்க அடித்து, அவன் நர்மதைக்கு வடக்கோடு ராஜ்யத்திற்கு எல்லை கட்டிக் கொண்டு திரும்பும்படிப் பண்ணினான்.

அப்போது தமிழ் தேசத்தில் பெரிய ராஜ்யாதிபதியாக இருந்தவன் பல்லவ ராஜாவான மஹேந்த்ர வர்மா. ‘மஹேந்த்ர விக்ரம வர்மன்’என்பது அவனே. அவன் எழுதிய “மத்த விலாஸ ப்ரஹஸனம்” என்ற ஹாஸ்ய நாடகத்தில் சொல்லிக் கொள்ளும் பெயர். சில்பக் கலையும், ஸங்கீதக் கலையும் எந்நாளும் கொண்டாடத்தக்க பெரிய கலைஞனாகவும், ரஸிகனாகவும் இருந்தவன். அவன் மேல் புலகேசி படையெடுத்து, பல்லவ ஸைன்யம் காஞ்சீபுரம் கோட்டைக்குள்ளேயே முடங்கிப் போகும்படிச் செய்து ஜயித்துவிட்டான். இது தீர்மானமாக சாஸன ஆதாரங்களில் தெரிவதாகச் சரித்ராசிரியர்கள் சொல்கிறார்கள். மஹேந்த்ர வர்மாவுக்கு சில தலைமுறைகளுக்கு அப்புறம் ராஜ்யாதிகாரம் அந்த வம்சாவளியின் நேர் வழியில் போகாமல், தாயாதி வம்சாவளியில் வந்த நந்திவர்மா என்பவனுக்குப் போயிற்று. அவன் ஸோமயாகம் செய்த பாரத்வாஜ கோத்ர ப்ராம்மணன் ஒருவனுக்கு பூதானம் செய்யும்போது சாஸனம் பண்ணிய செப்பேட்டுக் கொத்தை ‘காசாக்குடி ப்ளேட்ஸ்’ என்று விசேஷித்துக் சொல்வார்கள். ஏனென்றால் அதில் தானம் தரும் ராஜாவான பல்லவனின் வம்ஸ பூர்விகர்கள் பற்றி அநேக விவரங்கள் இருக்கின்றன. அதில் மஹேந்த்ரவர்மா புள்ளலூரில் ஒரு பெரிய வெற்றி அடைந்ததாக இருக்கிறது. வெற்றி அடைந்தாக இருக்கிறதேயொழிய, யார்மேல் (வெற்றி) என்று அதில் இல்லை. பல்லவர்களின் ஜன்ம சத்ருவான சளுக்யர்களின் மேல்தான் இருக்க வேண்டுமென்று ஊஹம். ஊஹம்தானேயொழியத் தீர்மானமாக முடிவாகவில்லை. ஆனால் புலகேசியிடம் மஹேந்த்ர வர்மா அபஜயம் அடைந்தது தீர்மானமாகத் தெரிகிறது என்கிறார்கள். புள்ளலூரில் பல்லவ ஸைன்யம் சளுக்ய ஸைன்யத்தை ஜயித்திருந்தால்கூட, அது நம் எல்லைக்குள் வந்தவர்களை அவர்களுடைய ராஜ்யத்திற்குத் திரும்பிப் போகும்படிச் செய்வதோடு முடிந்து போயிருக்க வேண்டும். சளுக்யர்கள் பல்லவ எல்லைக்குள்ளேயே வந்து ஜயித்த மாதிரி அப்போது பல்லவர்கள் சளுக்கிய எல்லைக்குள்ளேயே தொடர்ந்து போய் அவர்களை ஜயிக்கவில்லை. அன்னிய ராஜா ஒருத்தனை அவன் ஊருக்குள்ளேயே போய் வெற்றி கொள்வதற்குத்தான் பெருமை அதிகம்.

ஆனபடியால், புலகேசியிடம் பட்ட பரிபவம் [தோல்வி] பல்லவ வம்சத்திற்கு ஆறாக புண்ணாகிவிட்டது. ராஜ ரத்தமா? பழிக்குப் பழி வாங்கணும் என்ற வர்மம் உண்டாயிற்று. ஆனாலும் அது நிறைவேறாமலே மஹேந்த்ர வர்மா கண்ணை மூடிவிட்டான். அவன் பிள்ளை நரஸிம்ஹ வர்மா. மாமல்லன் என்று பேர் வாங்கின அந்த வீராதி வீரன் காலத்தில்தான் பழிவாங்க முடிந்தது. அவன் வாதாபி மேலே படை எடுத்துப் போய் ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட்டான். புலகேசி நேரே பல்லவ ராஜதானியான காஞ்சிக்கு உள்ளே போய் அதை ஜயிக்கவில்லை. மஹேந்திரனை காஞ்சிக்கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும்படிப் பண்ணி, வெளியில்தான் ஜயித்தான். மாமல்லனோ பதிலடி என்று அதைவிட உக்ரமாக சளுக்கிய ராஜதானியான வாதாபிக்கு உள்ளேயே போய் அதோடு நகரத்தையே நாசப்படுத்தி விட்டான்.

“க்ஷாத்ரம் க்ஷாத்ரம்” என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். “ஆத்திரம், க்ஷாத்திரம்” என்று சேரத்துச் சொல்கிறோம். ஒருத்தரிடம் தீராத பகையோடு, பழிக்குப் பழி வாங்கணும் என்று இருப்பதை “க்ஷாத்ரம்” என்கிறோம். அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் ‘க்ஷத்ரிய குணம்’ என்பதுதான். க்ஷத்ரியனின் தன்மை க்ஷாத்ரம். அந்த ஜாதிக்காரர்களிடம் எத்தனையோ உயர்ந்த தன்மைகளும் பண்புகளும் இருந்துங்கூட தீராத த்வேஷம்தான் க்ஷாத்ரம் என்றாகியிருப்பதிலிருந்து ஆட்சியதிகாரம் எப்படி ஒருத்தரைக் கெடுக்கிறது, கத்தி பிடித்துவிட்டால் எப்படித் தலையைச் சீவுவதில் புத்தி போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

க்ஷத்ரிய ஜாதிக்காரர்கள் போட்டுக் கொள்ளும் அடைமொழி ‘வர்மா’ என்பது. ‘வர்மம்’ என்றால் நேர் அர்த்தம் ‘கவசம்’ என்பது. க்ஷத்ரியர்கள் கவசதாரிகளாக இருப்பதால் வர்மா ஆகிறார்கள். அது மாத்திரமில்லை. கவசம் எந்த அடியையும் தான் வாங்கிக் கொண்டு ஒரு தேஹத்தை ரக்ஷிக்கிற மாதிரி ஒரு தேசத்தை ஆபத்துக்களிலிருந்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து ரக்ஷிப்பது க்ஷத்ரியர்களேயாகையாலும் அவர்கள் வர்மா ஆகிறார்கள். ஆனாலும் நாம் ‘வர்மம் பாராட்டுவது’ என்று சொல்லும்போது இந்த நல்ல விஷயங்களை நினைத்தா சொல்கிறோம்? பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று கறுவிக்கொண்டு இருப்பதைத்தானே வர்மம் என்கிறோம்? க்ஷாத்ரம், வர்மம் என்ற வார்த்தைகளின் நடைமுறை வழக்குகள் பதவியும் ஆயுதபலமும் மிதமிஞ்சினால் உண்டாகக்கூடிய க்ரூர குணத்தைக் காட்டுவதாக இருக்கின்றன.

ராஜாக்கள் ஒரே ஸத்வமாக, ஸாதுவாக இருக்க முடியாதுதான்; நம்முடைய ராஜ நீதி சாஸ்திரங்களின்படி அப்படி இருக்க கூடாதும்தான். தர்ம யுத்தம், தங்களை ஜயித்தவனைத் திரும்பப் தாக்கி ஜயிப்பது எல்லாம் அவர்களுக்கு வீரக் கடமையாகவே சொல்லியிருக்கிறது. ஆனாலும் அதில் கட்டுப்பாடு வேண்டும். சத்ரு ராஜாவின் மேல், ஸைன்யத்தின் மேல் ராக்ஷஸத்தனமான நடவடிக்கை எடுக்கக் கூடாது. யுத்தத்தில் சேராத ஊரார் மேல், ஊர் மேல், ராக்ஷஸத் தாக்குதல் பண்ணவே கூடாது. லங்காபுரி வாஸிகள் அஸல் ராக்ஷஸர்களேயானதால் அந்த ஊரை ஹநுமார் தஹனம் பண்ணியது. அது மற்ற ஊர்களுக்கும் ‘ஸிவிலியன் பாபுலேஷ’னுக்கும் [படையில் சேர்ந்திராத ஏனைய பிரஜைகளுக்கும்] பொருந்தாது.

வேத ப்ராம்மணர்களை நிரம்ப ஆதரித்தவனும், ஸம்ஸ்கிருத கடிகைகளை நிரம்பப் போஷித்தவனும், தெய்வ வழிபாட்டை நன்றாக வளர்த்தவனும், அதன் உபாங்கமாக லோகமெல்லாம் புகழும்படி சில்பக்கலைக்கு விசேஷ முன்னேற்றம் கொடுத்தவனுமான நரஸிம்ஹவர்மா மாதிரியான ராஜாவைக்கூட க்ஷாத்ரம், வர்மம் என்பது விட்டு வைக்கவில்லை. அதனால்தான் அவன் சளுக்கியர்களின் தலைநகரமான வாதாபியை த்வம்ஸம் பண்ணித் தரைமட்டமாக்கினான். ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ என்று பட்டப் பேர் சூட்டிக் கொண்டான். வாதாபியிலேயே அவன் அந்த ஊரை ஜயித்ததைப் பெருமையாக ப்ரகடனம் பண்ணிக் கொண்ட ஒரு சிலா சாஸனம் இன்றைக்கும் இருக்கிறது.

சளுக்கியர்கள் மாத்திரம் சளைப்பார்களா, க்ஷாத்ரத்தில்? பல்லவர்கள் மண்ணைக் கவ்வும்படிப் பண்ணி, பதிலடியாக, அவர்களுடைய ராஜதானியான காஞ்சீபுரத்தை மண்ணோடு மண்ணாக்கணும் என்பதே அந்த ராஜ வம்ஸத்துக்கு ஸதா சிந்தனையாயிற்று. நரஸிம்ஹ வர்மாவுடைய வெற்றிக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு அப்புறம் சளுக்கிய ராஜாவாக இருந்த [இரண்டாவது] விக்ரமாதித்தன் ஆசைப்பட்டபடியே பல்லவர்களை ஜயித்துவிட்டான். காஞ்சீபுரத்தையும் அவன் பிடித்து விட்டான். அப்போது மட்டும் விக்ரமாதித்யன் தன் க்ஷாத்ரத்தை நன்றாக தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாயிருந்திருந்தால் காஞ்சியை தரைமட்டமாக, மண்ணோடு மண்ணாகவே பண்ணியிருக்க முடியும். அல்லது ‘எரியூட்டு விழா’ நடத்திச் சாம்பலே ஆக்கியிருக்க முடியும்.

அப்போது அங்கே சில்ப விசேஷத்துக்கு இதைவிட ஒரு கோவில் இருக்கமுடியாது என்று இன்றைக்கும் நாம் சொல்கிற கைலாஸநாதர் கோவிலும் முளைத்துவிட்டது. [இரண்டாவது] பரமேச்வரவர்மாவுக்கு predecessor- ஆக [முந்தைய அரசனாக] இருந்த ராஜஸிம்ஹன் காலத்திலேயே அந்த அற்புதமான கோவில் எழும்பிவிட்டது. விக்ரமாதித்தன் நினைத்திருந்தால் அதைத் தரைமட்டமாகப் பண்ணியிருக்கலாம்.

அப்படிக்கூட ஒரு ஹிந்து ராஜாவே ஒரு ஹிந்து கோவிலை இடிப்பானா? என்றால், க்ஷாத்ரம் என்று சொன்னேனே, அதில் கண்மூடிப் போய் இப்படியும் சில நடந்துதானிருக்கிறது. நம் [சங்கர] மடங்களில் ஒன்றிலேயே இந்த மாதிரி நடந்திருக்கிறது — நம்புவதற்குக்கூட முடியாமலிருக்கும். ஒரு துருக்க ராஜா அந்த மதத்திடம் ரொம்ப அபிமானம் – பக்தியே – வைத்திருந்தான். அவனுக்கு சத்ருவாக இருந்த ஹிந்து ராஜாவின் ஹிந்து கமான்டர் என்ன பண்ணினானென்றால், ‘இந்த மடாதிபதி நம் விரோதி ராஜாவின் பக்தி விச்வாஸத்தைப் பெற்றிருப்பவரல்லவா? அதனால் இந்த மடத்தையும் தாக்க வேண்டும்’ என்று முடிவு பண்ணி அப்படியே படைகளை ஏவி விட்டான்! அவர்களும் – எல்லோரும் ஹிந்துக்கள்தான் – ‘நம்முடைய மதத்திற்கே புத்துயிர் தந்த பகவத்பாதாள் பெயரிலுள்ள மடமாச்சே’ என்றுகூடப் பார்க்காமல் மடத்திலே புகுந்து சூறையாடினார்கள். ‘ஒரு புண்ய ஸ்தலத்திற்கு, குரு பீடத்திற்கு இப்பேர்ப்பட்ட அபச்சாரம் பண்ணினவர்கள் வாழமாட்டார்கள் அழிந்துதான் போவார்கள்!’ என்று அப்போது அந்த துருக்க ராஜா அந்த மடத்து ஸ்வாமிகளுக்கு எழுதிவிட்டு, தானே திரவ்யம் அனுப்பி மடத்தை ஜீரணோத்தாரணம் செய்வதற்கு உபகரித்திருக்கிறான். ஆத்திர க்ஷாத்திரங்கள் எதுவரைக்கும் கொண்டுவிடுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

க்ஷாத்ரத்தை மனஸாரத் தீர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாகக் காஞ்சிபுரம் சளுக்கிய விக்ரமாதித்தனிடம் பிடிபட்டு விட்டது. வாதாபியை தரை மட்டமாக்கினதற்கு அவன் பழி தீர்த்துக் கொள்ள நல்ல ஸந்தர்ப்பம். சத்ரு வம்சம் கட்டிய முதல் கட்டிடக் கோவிலான கைலாஸ நாதராலயம்* சில்ப ஸெளந்தர்யம் அத்தனையையும் சொரிந்து கொண்டு அவனுக்கு முன்னாடி நின்றது. அவன் ஒரு ‘ஹூம்’ போட்டிருந்தால் ஸேனா வீரர்கள் அதைத் தூள் பண்ணியிருப்பார்கள். அப்படிப்பட்ட அந்த ஸமயத்தில்தான் அவனுக்கு ஆச்சர்யமாக மனஸு மாறிற்று. திடீரென்று…, அவன் ஏற்கெனவே சிவ மந்த்ர தீக்ஷை பெற்றிருந்ததால் அதன் விளைவாக சிவ பக்திதான் பெருக்கெடுத்ததோ, அல்லது கலா ரஸிக உணர்ச்சிதான் பெருக்கெடுத்ததோ, அல்லது இரண்டும் சேர்ந்து வந்ததோ, “கோவிலைத் தொடப்படாது” என்று ஆக்ஞை பண்ணிவிட்டான். ஏதோ கல்லிலே செதுக்கி வைத்த சில்பங்களிடம் மட்டும்தான் அவனுக்கு இப்படி நல்ல எண்ணம் வந்ததென்று இல்லை. சத்ரு பட்டணத்தில் ஜனங்கள் இருந்தார்களே, அவர்களிடமே நல்ல மனுஷ்யாபிமானம் உண்டாகிவிட்டது. “நாம் இந்த ஊரை எப்போது ஜயித்தோமோ, அப்போது இந்த ஊர்வாசிகள் நம் பிரஜைகளாகி விட்டார்கள். நம்முடைய பிரஜைகளுக்கே நாம் ஹிம்ஸை கொடுப்பதா?” என்ற உசந்த நினைப்பு அவனுக்கு உண்டாயிற்று. அதனால், நெருப்பை வைத்துக் கொளுத்திக் கதறக் கதற அடிப்பதற்கு நேர் மாறாகக் காஞ்சீபுர வாஸிகளுக்கு யதேஷ்டமாக தான தர்மங்கள் செய்தான். கைலாஸநாதர் கோவிலுக்கும் நிறையச் செய்தான். புதுசாகப் புகுந்து கொள்ளையடிக்காமல் விட்டதோடு, ஏற்கெனவே கொள்ளையடித்திருந்ததையெல்லாம், கூட நிறையப் போட்டு, அந்தக் கோவிலுக்குத் திருப்பி விட்டான். கைலாஸநாதர் கோவிலுக்கு முன்னாலுள்ள மண்டபத்தின் தூண் ஒன்றிலேயே இந்த விபரங்களை அவன் கன்னடத்தில் பொறித்து வைத்திருக்கிறான்.

கலிங்க யுத்தத்திற்கு அப்புறம் அசோகர் மனஸ் மாறினது எல்லோருக்கும் தெரியும். அதோடு சேர்த்து நினைக்கிற விதத்தில் இப்படி ஒன்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

கைலாஸநாதர் கோவிலின் அழகில் சொக்கிய விக்ரமாதித்யன் அதை இருக்க விட்டது மட்டுமில்லை. அதற்கு ஜோடி சேர்க்கிற மாதிரி, ஏறக்குறைய அதன் அச்சாகவே தன் ஊருக்குத் திரும்பின பிறகு பட்டடக்கல்லில் விரூபாக்ஷர் கோவில் என்று கட்டினான். அதற்காகத் தமிழ்நாட்டுச் சில்பிகளை மரியாதை பண்ணி அழைத்துக் கொண்டு போனான்.

வாதாபி (இப்போது பாதாமி என்று சொல்லுகிறார்கள்) ஐஹொளெ, பட்டடக்கல் என்று மூன்று ஊர்கள் கிட்டக் கிட்டக்க கன்னட தேசத்தில் பீஜப்பூர் ஜில்லாவில் இருக்கின்றன. ஐஹொளெதான் சளுக்கியர்களின் முதல் தலைநகரம், அப்புறம் வாதாபி தலைநகரமாயிற்று என்றுகூடச் சொல்லுகிறார்கள். பக்கத்திலேயே இருந்த பட்டடக்கல்லையும் ‘ஸெகன்ட் காபிட’லைப் போல மதித்தார்கள். சில புது ராஜாக்கள் பட்டத்துக்கு வந்தபோது பட்டாபிஷேகங்களைப் பட்டடக்கல்லில் பண்ணியிருக்கிறார்கள். அந்த ஊர் பேரே அதனால்தான் அப்படி ஏற்பட்டதோ என்னவோ?

பிள்ளையாரைப் பற்றி ஆரம்பித்துவிட்டு வாதாபி, கீதாபி என்று எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறேனே, என்ன ஸம்பந்தம் என்றால், ரொம்ப ஸம்பந்தம் இருக்கிறது.


*இதற்கு முன் தமிழகத்தில் கருங்கல்லில் குடைவரைக் கோயில்களே இருந்தன. மேல் விவரங்கள் ‘தெய்வத்தின் குரல்’ நான்காம் பகுதியில், ‘குருகுலம்; கடிகா ஸ்தானம்’ என்ற பேருரையில் ‘கற்கோயிலின் தோற்றம்‘ என்ற பிரிவில் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கபிலர் : திருச்செங்காட்டாங்குடி விநாயகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஆனைமுகரும் அகத்தியரும்
Next