கண்ணும் சுழன்று

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

கண்ணும் சுழன்று

திருநறையூர் -- 1

பரமபதம் செல்ல விரும்பிய திருமங்கையாழ்வாருக்குப் பகவான், 'திருநறையூரின் சிறப்பைப் பாரும். இதைவிடப் பரமபதத்தில் என்ன இருக்கிறது?'என்று கூறினார் போலும்!திருநறையூரின் பெருமை ஈண்டுப் பாடப்பட்டுள்ளது. திருநறையூருக்கு நாச்சியார்கோயில் என்று பெயர். நீளாதேவிக்குச் சிறப்பைத் தருகிறது இவ்வூர்.

கலிநிலைத்துறை

கிழப்பருவம் வருமுன் திருநறையூர் தொழுக

1478. கண்ணும் சுழன்று பீளையோ

டீளைவந் தேங்கினால்,

பண்ணின் மொழியார் 'பைய

நடமின்'என் னாதமுன்,

விண்ணும் மலையும் வேதமும்

வேள்வியு மாயினான்,

நண்ணு நறையூர் நாம்தொழு

தும்மெழு நெஞ்சமே! 1

மனமே!விரைவில் திருநறையூர் தொழு

1479. கொங்குண் குழலார் கூடி

யிருந்து சிரித்து,'நீர்

இங்கென் னிருமி யெம்பால்

வந்தª 'தன் றிகழாதமுன்,

திங்க ளெரிகால் செஞ்சுட

ராயவன் தேகடை

நங்கள் நறையூர் நாம்தொழு

தும்மெழு நெஞ்சமே! 2

முதுமை கண்டு பலர் சிரிப்பர்:விரைவில் தொழு

1480. கொங்கார் குழலார் கூடி

யிருந்து, சிரித்து,'எம்மை

எங்கோலம் ஐயா!என்னினிக்

காண்படுª 'தன் னாதமுன்,

செங்கோல் வல்லன் தான்பணிந்

தேத்தித் திகழுமூர்,

நங்கோன் நறையூர் நம்தொழு

தும்மெழு நெஞ்சமே! 3

நறையூர் நம்பனை இப்பொழுதே தொழு

1481. கொம்பும் அரவமும் வல்லியும்

வென்றநுண் ணேரிடை,

வம்புண் குழலார் வாச

லடைத்திக ழாதமுன்,

செம்பொன் கமுகினந் தான்கனி

யும்செழுஞ் சோலைசூழ்

நம்பன் நறையூர் நாம்தொழு

தும்மெழு நெஞ்சமே! 4

மனமே!விலைமகளிர் இகழுமுன் நறையூர் தொழு

1482. விலங்கும் கயலும் வேலுமொண்

காவியும் வென்றகண்,

சலம்கொண்ட சொல்லார் தாங்கள்

சிரித்திக ழாதமுன்,

மலங்கும் வராலும் வாளையும்

பாய்வயல் சூழ்தரு,

நலங்கொள் நறையூர் நாம்தொழு

தும்மெழு நெஞ்சமே! 5

மனமே!தாமதியாமல் நறையூர் தொழு

1483. மின்னே ரிடையார் வேட்கையை

மாற்றி யிருந்து,

'என்நீ ரிருமியெம் பால்வந்த

ª 'தன்றிக ழாதமுன்,

தொன்னீ ரிலங்கை மலங்க

இலங்கெரி யூட்டினான்,

நன்னீர் நறையூர் நம்தொழு

துமெழு நெஞ்சமே! 6

பிறர் பரிகாசஞ் செய்யுமுன் நறையூர் தொழு

1484. வில்லேர் நுதலார் வேட்கையை

மாற்றிச் சிரித்து, 'இவன்

பொல்லான் திரைந்தான்'என்னும்

புறனுரை கேட்பதன்முன்

சொல்லார் மறைநான் கோதி

யுலகில் நிலாயவர்,

நல்லார் நறையூர் நாம்தொழு

துமெழு நெஞ்சமே! 7

நரை திரை மூப்பு வருமுன் நறையூர் தொழு

1485. வாளண்கண் ணல்லார் தாங்கள்

மதனனென் றார்தம்மை,

'கேளுமின் ஈளையோ டேங்கு

கிழவன்'என் னாதமுன்,

வேள்வும் விழவும்வீதியி

லென்று மறாதவூர்,

நாளு நறையூர் நாம்தொழு

துமெழு நெஞ்சமே! 8

நெஞ்சே!உடனே நறையூர் தொழு

1486. கனிசேர்ந் திலங்குநல் வாயவர்

காதன்மை விட்டிட,

குனிசேர்ந் துடலம் கோலில்

தளர்ந்திளை யாதமுன்,

பனிசேர் விசும்பில் பான்மதி

கோள்விடுத் தானிடம்,

நனிசேர் நறையூர் நம்தொழு

துமெழு நெஞ்சமே! 9

இவற்றைப் படிப்போர் தேவர்க்கு அரசாவர்

1487. 'பிறைசேர் நுதலார் பேணுதல்

நம்மை யிலாதமுன்,

நறைசேர் பொழில்சூழ் நறையூர்

தொழுநெஞ்ச மே!'என்ற,

கறையார் நெடுவேல் மங்கையர்

கோன்கலி கன்றிசொல்,

மறவா துரைப்பவர் வானவர்க்

கின்னர சாவரே. 10

அடிவரவு:கண்ணும் கொங்குண் கொங்கார் கொம்பு விலங்கு மின் வில் வாள் கனி பிறை -- கலங்க.




 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is துறப்பேன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கலங்க
Next