துறப்பேன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

துறப்பேன்

திருவிண்ணகர் -- 3

பரமபதத்திற்கு வந்து, திருத்தொண்டு செய்யும் வாழ்வைத் தமக்கு அளிக்குமாறு திருவிண்ணகர்ப் பெருமாளை ஈண்டு ஆழ்வார் வேண்டுகிறார்.

கலிநிலைத்துறை

திருவிண்ணகரானே!நின்னுருவத்தை மறவேன்

1468. துறப்பேன் அல்லேனின் பம்துற

வாது, நின்னுருவம்

மறப்பே னல்லேனென் றும்மற

வாது, யானுலகில்

பிறப்பே னாகவெண் ணேன்பிற

வாமை பெற்றது,நின்

திறத்தே னாதன் மையால்

திருவிண் ணகரானே! 1

திருமாலே!நான் உனக்கு அடிமை

1469. துறந்தே னார்வச் செற்றச்சுற்

றம்து றந்தமையால்,

சிறந்தேன் நின்னடிக்கே

யடிமை திருமாலே,

அறந்தா னாய்த்திரி வாய்உன்

னையென் மனத்தகத்தே,

திறம்பா மல்கொண் டேன்திரு

விண்ண கரானே! 2

திருநறையூர்த்தேனே!நின்னை அடைந்தேன்

1470. மானேய் நோக்குநல்லார்

மதிபோல்மு கத்துலவும்,

ஊனேய் கண்வாளிக் குடைந்தோட்

டந்துன் னடைந்தேன்,

கோனே!குறுங்குடியுள்

குழகா!திருநறையூர்த்

தேனே, வருபுனல்சூழ்

திருவிண் ணகரானே! 3

உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்

1471. சாந்தேந்து மென்முலை யார்தடந்

தோள்புண ரின்பவெள்ளத்

தாழ்ந்தேன், அருநரகத்

தழுந்தும் பயன்படைத்தேன்,

போந்தேன், புண்ணியனே!

உனையெய்தியென் தீவினைகள்

தீர்ந்தேன், நின்னடைந்தேன்

திருவிண் ணகரானே! 4

நின்னை நினைந்து பிறவாமை பெற்றேன்

1472. மற்றோர் தெய்வமெண்ணே

னுன்னையென் மனத்துவைத்துப்

பெற்றேன், பெற்றதுவும்

பிறவாமை யெம்பெருமான்,

வற்றா நீள்கடல்சூ

ழிலங்கையி ராவணனைச்

செற்றாய், கொற்றவனே!

திருவிண் ணகரானே! 5

திருவிண்ணகரானே!பிழைக்கும் வகை உணர்ந்தேன்

1473. மையண் கருங்கடலும்

நிலனு மணிவரையும்,

செய்ய சுடரிரண்டும்

இவையாய நின்னை, நெஞ்சில்

உய்யும் வகையுணர்ந்தே

னுண்மையாலினி யாது,மற்றோர்

தெய்வம் பிறிதறியேன்

திருவிண் ணகரானே! 6

திருவிண்ணகரானே!நீயே என் தெய்வம்

1474. வேறே கூறுவதுண்

டடியேன் விரித்துரைக்கு

மாறே, நீபணியா

தடைநின் திருமனத்து,

கூறேன் நெஞ்சுதன்னால்

குணங்கொண்டு,மற் றோர்தெய்வம்

தேறே னுன்னையல்லால்

திருவிண் ணகரானே! 7

நான் பரமபதம் அடைவது எப்பொழுது?

1475. முளிந்தீந்த வேங்கடத்து

மூரிப்பெ ருங்களிற்றால்,

விளிந்தீந்த மாமரம்போல்

வீழ்ந்தாரை நினையாதே,

அளிந்தோர்ந்த சிந்தைநின்பா

லடியேற்கு, வானுலகம்

தெளிந்தேயென் றெய்துவது?

திருவிண் ணகரானே! 8

நம்பீ!என் தீவினைகளை நீக்கு

1476. சொல்லாய் திருமார்வா!

உனக்காகித் தொண்டுபட்ட

நல்லே னை,வினைகள்

நலியாமை நம்புநம்பீ,

மல்லா!குடமாடி!

மதுசூத னே,உலகில்

செல்லா நல்லிசையாய்!

திருவிண் ணகரானே! 9

துன்பம் நீங்கிவிடும்

1477. தாரார் மலர்க்கமலத்

தடஞ்சூழ்ந்த தண்புறவில்,

சீரார் நெடுமறுகில்

திருவிண் ணகரானை,

காரார் புயல்தடக்கைக்

கலிய னொலிமாலை,

ஆரா ரிவைவல்லார்

அவர்க்கல்லல் நில்லாவே. 10

அடிவரவு:துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்து சொல் தாரார் -- கண்ணும்.



 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பொறுத்தேன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணும் சுழன்று
Next