அநுமானம் முக்யமான பிரமாணம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ந்யாய சாஸ்திரம் தர்க்க சாஸ்திரம் என்றும் வழங்கும். இது கௌதம மஹரிஷியால் செய்யப்பட்டது. இதன் முக்கிய உத்தேசம், இந்த உலகத்துக்கெல்லாம் கர்த்தா பரமேச்வரன் என்பதை யுக்திகளைக் கொண்டு தீர்மானிப்பதுதான். அது அநுமானத்தால் ஈச்வரனை ஸாதித்துக் கொடுக்கிறது. ஆகவே அது யுக்திப் பிரதானமான சாஸ்திரம்.

யுக்தி அவசியம் வேண்டும். வேதம் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது. அதனுடைய அர்த்தத்தை மீமாம்ஸை நிர்ணயிக்கிறது. நாம் வேதத்தை நம்புகிறோம். நம்பினாலும் மனசு ஸந்தேஹப்படும். ஆகையினால் அந்த ஸந்தேஹத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு வேதம் சொன்னதைப் பலவித யுக்திகளைக் கொண்டு தீர்மானப் படுத்தினால் அந்தத் தீர்மானம் த்ருடமாயிருக்கும். பந்தற்கால் நடும் பொழுது அதை ஆட்டி அசைத்துப் பார்த்து வைத்தால்தான் உறுதியாக நிற்கும். அம்மாதிரி யுக்தியால் நன்றாக ஆட்டி உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும். யார் யுக்திவாதம் பண்ணினாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் யுக்திகள் எல்லாம் ஸரியான ஆதாரத்தை வைத்துக்கொண்டு பண்ண வேண்டும். குயுக்திகள் பண்ணக்கூடாது.

ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் லோகத்தை விட்டுப் போகும்போது சிஷ்யர்களெல்லாம் சேர்ந்து ஸங்கிரஹமாக [சுருக்கமாக] ஒரு உபதேசம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்படிப் பிரார்த்தித்த பொழுது “உபதேச பஞ்சகம்” அல்லது “ஸோபான பஞ்சகம்” என்று ஐந்து ச்லோகத்தை ஆசாரியர்கள் சொன்னார்கள். அதிலே துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்; ச்ருதிமதஸ் தர்க்கோ(அ)நுஸந்தீயதாம் என்று வருகிறது. அதாவது, விதண்டாவாதங்களை விட்டு, வேதக் கருத்தை மதித்து அநுஸரிக்கும் நல்ல யுக்திகளையே உபயோகப்படுத்த வேண்டும்.

யுக்திகளினால் நிர்ணயம் பண்ணிக் கொள்ளாவிட்டால் காட்டிலே போவது போன்றதுதான். ஆனால் அந்த யுக்திகளை ஓர் ஆதாரம் வைத்துக் கொண்டு செய்யவேண்டும். இப்படி யுக்திகளைக் கொண்டு வேதார்த்தத்தை நிர்ணயம் பண்ணுவதுதான் “ந்யாயம்”. அந்த சாஸ்திரம் கௌதமரால் செய்யப்பட்டது என்றேன். கணாதர் என்பவர் ஒரு விதமான ந்யாய சாஸ்திரம் பண்ணியிருக்கிறார். அது “வைசேஷிகம்” என்று தனியாகப் பிரித்துச் சொல்லப்படும்.

ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்குக் காரணம் அதிலுள்ள விசேஷத் தன்மை (particularity) தான். இந்த விசேஷத் தன்மையையே முக்யமாக விசாரிப்பதால் கணாத சாஸ்திரத்துக்கு வைசேஷிகம் என்று பெயர் வந்தது. ரொம்பவும் ஸயன்ஸாகவே போகிற நியாய சாஸ்திரமானது, அத்யாத்ம விஷயங்களான ஜீவன், ஜகத், ஈச்வரன், மோக்ஷம் (மோக்ஷம் என்பதை அவர்கள் ‘அபவர்க்கம்’ என்று சொல்வார்கள்) இவற்றை ஜாஸ்தி விசாரிக்கிற வைசேஷிகத்தோடு போய்ச் சேர்ந்து கொள்கிறது. இவை இரண்டிலும் logic (தர்க்கம்) , philosophy (தத்வம்) இரண்டும் இருக்கின்றன. ‘லாஜிக்’ மூலமாகவே ‘பிலாஸஃபி’ சொல்லப்படுகிறது.

நாலு பிரமாணங்களை வைத்துக் கொண்டு உண்மையை ஆராய்கிறது நியாய சாஸ்திரம். அவை ‘பிரத்யக்ஷம்’, ‘அநுமானம்’, ‘உபமானம்’, ‘சப்தம்’ என்பவையாகும்.

பிரத்யக்ஷமாகக் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது முதலியனதான் முதலில் சொன்ன பிரத்யக்ஷப் பிரமாணம்.

அடுத்து வருகிற அநுமானம் என்ற பிரமாணந்தான் நியாயத்துக்கு ரொம்பவும் முக்கியமானது.

அநுமானம் என்பது என்ன? தூரத்தில் மலையிலே புகை தெரிகிறது. புகை மட்டும்தான் தெரிகிறது. நெருப்பு தெரியவில்லை. முன்னே இருக்கிற பாறைகள் நெருப்பை மறைக்கின்றன. அதனால் மேலே புகை மாத்திரம் தெரிகிறது. ஆனாலும் நாம் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மலையிலே இருக்கிற காட்டில் நெருப்புப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று ஊகித்து விடுகிறோம். இதுதான் ‘அநுமானம்’ என்பது. இங்கே நெருப்புக்கு ‘ஸாத்யம்’ என்றும், அதை நாம் அநுமானிப்பதற்கு அடையாளமாயிருக்கிற புகைக்கு ‘ஸாதனம்’, ‘லிங்கம்’, ‘ஹேது’ என்றும் பெயர்.

இப்போது நாம் அநுஸரிக்கிற மதமான வேதாந்தத்தின் படி குருவிடமிருந்து சிரவணம் என்பதாக உபதேசம் பெற்றபின் அதை மனனம் பண்ண வேண்டும். மனனம் என்பது ஆசாரியர் மூலமாகக் கேட்டதைப் புத்தியில் ஏற்படும் யுக்தியைக் கொண்டு நினைத்து நினைத்துப் பார்ப்பது. இதிலே அநுமானம்தான் விசேஷமாகக் கை கொடுக்கிறது. அநுமானத்தால்தானே பிரத்யக்ஷமாக அறிய முடியாததை வேறு காரணங்களைக் கொண்டு அறிய முடிகிறது? பரமாத்ம, ஜீவாத்ம ஸ்வரூபங்கள் நம் கண் முதலியவற்றுக்குப் பிரத்யக்ஷமாகத் தெரியவில்லை. மூக்காலோ, வாயாலோ அவற்றை அறிய முடியவில்லை. மோக்ஷ ஸ்வரூபமும் தெரியவில்லை. கடைத்தேறுவதற்குரிய வழியும் தெரியவில்லை. இவைகளையெல்லாம் அநுமானத்தால்தான் தெரிந்த கொள்ள வேண்டும். தெரிந்த ஒன்றை வைத்துக் கொண்டு தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளுவது அநுமானம். இடி இடிப்பதால் மேகம் உண்டென்று அநுமானிக்கிறோம். அதுபோல.

வைதிக கர்மாக்களால் சித்த சுத்தி உண்டாயிற்று. நல்ல ஆசாரியரை அடைந்தோம். அவர் ஒன்று சொன்னார். அதை நம்பி விட்டோம். பின்பு வேறு ஒருவர் வித்தியாஸமாக ஒன்று சொன்னால் நமக்கு ஸந்தேஹம் உண்டாகும். எத்தனை தினுஸான ஆக்ஷேபணைகள் உண்டோ அவ்வளவையும் பண்ணித் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானிக்க அநுமானம் முதலான பிரமாணங்கள் உபயோகப்படும். அந்த அநுமானத்தைப் பிரதானமாக வைத்துக் கொண்டு ஆராய்வது நியாயம். வைசேஷிகமும் அப்படியே.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பண்டிதருலகில் மீமாம்ஸையின் மதிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பதார்த்தம்
Next