பண்டிதருலகில் மீமாம்ஸையின் மதிப்பு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேத அர்த்த நிர்ணயத்தில் மீமாம்ஸை செய்கிற பெரிய உபகாரத்தினால் அதனுடைய கர்மாக் கொள்கையை ஆக்ஷேபிப்பவர் உள்பட எல்லாப் பண்டிதர்களும், வித்வான்களும் இந்த சாஸ்திரத்தை அப்யஸித்தும், தாங்களே இதில் புதுப் புஸ்தகங்கள் எழுதியும் வந்திருக்கிறார்கள். தேர்ந்த வேதாந்தியான மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள் (பெயரைச் சொல்லாமல் ‘மன்னார்குடிப் பெரியவாள்’ என்றே அவரைச் சொல்வது வழக்கம்), திருவிசநல்லூர் வேங்கடஸுப்பா சாஸ்திரிகள், அதே ஊரைச் சேர்ந்த நீலமேக சாஸ்திரிகள், ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரியார், கிருஷ்ண தாதாசாரியார், மண்டகுளத்தூர் சின்னஸ்வாமி சாஸ்திரிகள் முதலான பண்டித சிம்மங்கள் மீமாம்ஸையில் நிரம்ப ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். இதிலே ஒரு வேடிக்கை! வேங்கடஸுப்பா சாஸ்திரிகளுக்கும் நீலமேக சாஸ்திரிகளுக்கும் குருவாக இருந்த திருவிசநல்லூர் ராமஸுப்பா சாஸ்திரிகள் யாக கர்மாக்களை பலமாகக் கண்டனம் பண்ணியவர்*. மீமாம்ஸகர்களுக்கு முக்யமான ச்ரௌத கர்மாவை இவர் ஆக்ஷேபித்த போதிலும், ‘தியரி’யில் மீமாம்ஸா சாஸ்திரத்தின் உயர்வைப் பார்த்து அதை நன்றாக அப்பியாஸம் பண்ணி மீமாம்ஸையில் ஒரு ‘அதாரிடி’யாக இருந்தார்.

மயிலாப்பூரிலுள்ள ஸம்ஸ்கிருத காலேஜ் ஏற்பட்ட பிறகு இதில் பிரின்ஸிபல்களாகவும், வாத்தியார்களாகவும் இருந்திருக்கிற பல பேர் நல்ல மீமாம்ஸா பண்டிதர்களாக இருந்து வந்து கொண்டிருப்பதால் இந்த சாஸ்திரம் தற்போது விருத்தியாகி வருகிறது.


* “பசுமாரக மர்த்தனம்” என்று யாகத்தைக் கண்டித்தே இவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதாந்த மதங்களும் மீமாம்ஸையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அநுமானம் முக்யமான பிரமாணம்
Next