பதார்த்தம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நம்முடைய மத ஸித்தாந்தம், எல்லாப் பதார்த்தங்களையும் அடிமூலத்துக்குப்போய் நன்றாகத் தெரிந்து கொள்ளுவதால் ஸத்ய தத்வம் பிரகாசித்துவிடும் என்பது. எல்லாவிதமான பிரமாணங்களையும் உபயோகப்படுத்தி அப்படித் தெரிந்து கொள்ள வேண்டும். எதைக் கொண்டு பதார்த்தங்களைத் தெரிந்து கொள்ளுகிறோமோ அதுதான் பிரமாணம்.

பிரத்யக்ஷப் பிரமாணமான கண் காது முதலியவைகளுக்குள் அகப்படும் விஷயங்கள் கொஞ்சந்தான். அகப்படாதவை அதிகமாக இருக்கின்றன. அவைகள் அநுமானப் பிரமாணத்தில் அகப்படும். அந்த அனுமானத்தை விரிவு படுத்த வேண்டும். அது வேத தத்வத்தை அறியும் ஞானத்துக்கு உபயோகப்படுகிறது. அதனால்தான் நியாயம் ஓர் உபாங்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மீமாம்ஸை சிரவணத்திற்கு உபயோகம். மனனத்துக்கு சாதனமாக இருப்பது நியாயம்.

நியாயத்தில் பதார்த்தங்களை ஏழு விதமாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் தனியாக அறிய முடியாததால் மொத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த ஏழுவகைப் பதார்த்தங்களில் இரண்டு பிரிவு உண்டு. உள்ளது என்பது ஒன்று, இல்லாதது என்பது ஒன்று.

பாவோ அபாவச்ச

இந்த ஏழுவகைப் பதார்த்தங்களுள் ஏழாவது “இல்லாதது” என்பது. இருக்கிறது என்பது பாவம். இல்லாதது அபாவம். அபாவம் ஏழாவது. “பாவ”மாக இருப்பதை ஆறுவிதமாகப் பிரித்திருக்கிறார்கள்.

இல்லை என்பது எப்படிப் பதார்த்தமாகும்? பதார்த்தம் என்பது என்ன? பதத்தின் அர்த்தம்தான் பதார்த்தம். இல்லை என்னும் ஒரு பதத்திற்கும் அர்த்தம் இருக்கிறதல்லவா?

பாவம் சில இடத்தில் இருக்கிறது; சில இடத்தில் இல்லை. இங்கே புஷ்பம் இல்லை. அதாவது புஷ்பத்தின் அபாவம் இங்கே இருக்கிறது! அங்கே பூஜாமண்டபத்தில் புஷ்பம் இருக்கிறது; புஷ்பத்தின் அபாவம் அங்கு இல்லை. இப்படி அபாவமானது சில இடங்களில் இருக்கிறது; சில இடங்களில் இல்லை. அப்படியே சில ஸமயத்தில் இருக்கிறது; சில ஸமயத்தில் இல்லை. இப்படி, சில கால தேசங்களில் அபாவம் இருப்பதனால் அது பதார்த்தம் ஆகிறது.

ஏழு பதார்த்தங்களாவன: திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் என்பவை. திரவியம், குணம், கர்மம் இந்த மூன்றும் ஸத்தான பதார்த்தம். அவற்றை இருக்கிறதென்று நம்மால் காட்ட முடியும். அதுதான் ஸத். பாக்கி நான்கும் அப்படிக் காட்ட முடியாதது. “ஸத்தை”யோடு கூடியது முதல் மூன்றுதான். இவற்றில் முதலாவதான த்ரவ்யம் ஸ்தூலமாக காட்டக் கூடியது. ஞானம், ஆசை, ஸந்தோஷம், துக்கம் முதலிய குணங்களைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இவைகளெல்லாம் ஒன்றை ஆசிரயித்தே இருக்கும், தனியாகப் பிரிக்க முடியாது. தாமரை சிவப்பாக இருக்கிறது. சிவப்பு தாமரையினுடைய குணம். அந்தச் சிவப்பைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இப்படி ஒரு ஆசிரயத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதுதான் குணம். அது எதை ஆசிரியத்திருக்கிறதோ அந்த ஆசிரியந்தான் த்ரவ்யம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனியாகக் காட்ட முடியாவிட்டாலும் ஒருத்தன் ஸந்தோஷமாகவும் துக்கமாகவும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? அப்போது ஸந்தோஷம், துக்கம் இவற்றையும் தெரிந்துகொண்டு விடுகிறோம். சிவப்புத் தாமரையைப் பார்க்கும்போது சிவப்பு என்னவென்று தெரிந்து கொண்டு விடுகிறோம். கர்மம் என்பது காரியம். சலனம், போதல், ஓடுதல் முதலிய வேலைகள் கர்மாக்கள். அவைகளும் திரவியத்தை ஆசிரயத்தே நிற்கும். ஒருவன் ஓடுகிறான், ஓடுதலை அவனிடத்திலிருந்து பிரிக்க முடியாது. அவன் ஓடுகிறான் என்பதைப் பார்க்க முடிகிறது. அப்போது அவன் உட்கார்ந்திருக்கவில்லை, படுத்திருக்கவில்லை என்ற வித்யாஸம் தெரிகிறது. அதனால் ஓட்டத்தை நாம் பார்க்கிறோம் என்று அர்த்தம். ஸாமான்யம் என்பது நாலாவது பதார்த்தம். அது ஜாதியைக் குறிப்பது. பல மாடுகள் இருக்கின்றன. அவைகளுக்குள் மாட்டுத்தன்மை என்னும் ஒரு பொதுமை இருக்கிறது. அதை நாம் ஜாதி என்கிறோம். அது எல்லாப் பசுக்களிடத்திலும் இருக்கிறது. அதுதான் “ஸாமான்யம்”. ஒரே மாதிரி இருந்தும் வெவ்வேறாக இருப்பது “விசேஷம்”. பசுக்கள் ஒரே ஜாதியாக இருந்தும் அப் பசுக்களிடத்தில் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துக் காட்டக்கூடிய சில ‘விசேஷ’ அடையாளங்கள் இருக்கின்றன. திரவியத்தையும் குணத்தையும், திரவியத்தையும் அதன் காரியத்தையும், தனித்தனியானவற்றையும் பொதுமையையும், ஒரு முழு வஸ்துவையும் அதன் அவயவங்களையும் பிரிக்க முடியாமல் ஒட்டி வைத்திருப்பதுதான் “ஸமவாயம்” எனப்படுகிறது. அக்னியில் பிரகாசமான ரூபம் இருக்கிறது. அந்தப் பிரகாசத்தையும் ரூபத்தையும் பிரிக்க முடியாது. அது ஸமவாயம். திரவியமும் திரவியமும் சேர்ந்தால் அதை ஸம்யோகம் என்று சொல்வார்கள். இவை ஒன்றோடொன்று சேராமல் தனித்தும் இருக்க முடியும். திரவியமும் குணமும் சேர்ந்தால் அது ஸமவாயம்; திரவியமும் கர்மாவும் சேர்ந்தால் அதுவும் ஸமவாயந்தான். குணமும் கர்மாவும் ஒரு திரவியத்தைச் சேராமல் தனித்தும் இருக்க முடியாது.

கடைசியாக வரும் அபாவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.

 

இப்படிப் பதார்த்தங்களை ஏழுவகையாகப் பிரித்தது போல ஒவ்வொரு பதார்த்தத்தையும் பலவகையாகப் பிரத்திருக்கிறார்கள். திரவியம் ஒன்பது விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம், காலம், திக்கு, ஆத்மா, மனது என்பவை. இவைகளில் முதலில் சொல்லப்பட்ட ஐந்துக்குப் பஞ்ச பூதங்களென்று பெயர். பிருதிவி என்பது பூமி, அப்பு ஜலம், தேஜஸ் அக்னி, வாயு காற்று, ஆகாசம் என்பது எல்லாவற்றிற்கும் இடம் கொடுப்பது.

இந்த பஞ்ச பூதங்களிலும் ஒரு வேடிக்கை இருக்கிறது. இவைகளுக்கு ஸரியாக உடம்பில் ஐந்து தினுசான அறிவுகள் இருக்கின்றன. பார்க்கிற சக்தியுள்ள கண், கேட்கும் காது, ருசிக்கும் நாக்கு, உஷ்ணம் சீதம் தெரிந்துகொள்ளும் ஸ்பரிசேந்திரயம், கந்தம் தெரிந்துகொள்ளும் மூக்கு என்பவை ஐந்து. ஸ்பரிச இந்திரியம் என்பது வெளித்தோலான சர்மம் மட்டும் இல்லை. உடம்பு முழுவதிலும் ஸ்பரிச உணர்ச்சி இருக்கிறது. உடம்புக்கு உள்ளேயும் இருக்கிறது. வயிற்று வலி, மார்(பு) வலி முதலியவை அதனால்தான் தெரிகின்றன. இந்த ஐந்து விதமான அறிவும் ஒவ்வொன்றால் அறியப்படுகிறது. ஒவ்வொரு விஷயம் ஒவ்வோர் இடத்தில் தான் உணர்ச்சியைத் தருகிறது. பார்வை கண்ணில்தான் இருக்கிறது; காதினால் பார்க்க முடியாது. காதினால் கேட்கிற ஸங்கீதத்தை கண்ணினாலோ மூக்கினாலோ கேட்க முடியாது. நாக்கிலே ஒரு பதார்த்தத்தைப் போட்டால் அதனுடைய ருசியைத் தெரிந்து கொள்ள முடியுமேயொழிய வாஸனையை அறிய முடியாது. கற்கண்டு தித்திக்கிறது என்று மூக்கு தெரிந்து கொள்ளாது. இப்படி ஐந்து திநுஸான குணங்களை ஐந்து இந்திரியங்களில் ஒவ்வொன்றுதான் தெரிந்து கொள்ள முடியும். ரூபம் என்னும் குணத்தைக் கண் அறிகிறது. நிறம், அளவு முதலியவைகள் ரூபம். சுக்ல, பீத, நீல, ஹரித, ரக்த, கபிசம், அதாவது [முறையே] வெள்ளை, மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு, காப்பி நிறம் (brown) என்பவை நிறங்கள். சப்த பேதங்களைக் காது அறிகிறது. கெட்ட வாஸனை, நல்ல வாஸனைகளை மூக்கு அறிந்து கொள்கிறது. ஆறுவகை ரஸங்களை நாக்கு உணர்ந்து கொள்கிறது. உஷ்ணம், சீதம் முதலியவைகளை ஸ்பரிசேந்திரியம் தெரிந்து கொள்ளுகிறது. இப்படி ஐந்து இந்திரியங்கள் ஐந்து வகையான குணங்களை உணர்ந்து கொள்ளுகின்றன. இவைகளுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். இந்திரியம் இல்லாவிட்டால் குணம் தெரியாது. நமக்கு இந்திரியங்கள் ஆறாக இருந்தால் ஆறு வகையான குணங்களை நாம் அறியக் கூடுமாயிருக்கும். ஆயிரம் இந்திரியங்கள் இருந்தால் ஆயிரம் குணங்கள் அறியப்படக் கூடலாம்! உலகத்தில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றனவோ, தெரியவில்லை! நமக்கு ஸ்பரிசேந்திரியம் கொடுக்காவிட்டால் சீதம், உஷ்ணம் முதலியவை உண்டு என்று அறிய முடியாது தானே? அந்த இந்திரியம் கொடுத்ததனால் சீதோஷ்ணங்கள் அறியப்படுகின்றன. சீதோஷ்ணங்கள் வெளியில் இருப்பதனால் மட்டும் நமக்குத் தெரிகின்றன என்று சொல்லக்கூடாது. வெளியில் இருப்பதை அறிய நமக்கு இந்திரியம் இருந்தால்தான் அவை தெரியும். குருடர்களுக்கும் செவிடர்களுக்கும் ரூபம், சப்தம் என்பவை வெளியில் இருந்தபோதிலும் தெரியாததைப் பார்க்கிறோமல்லவா?

கண், நாக்கு, மூக்கு, தொடு உணர்ச்சிப் புலன் (த்வக்), காது என்னும் ஐந்து இந்திரியங்களுக்கும் ரூப, ரஸ, கந்த , ஸ்பரிச, சப்தங்கள் முறையே விஷயமாகின்றன.

இந்த ஐந்து குணங்களையும் பகவான் பஞ்ச பூதங்களில் வைத்திருக்கிறார். மண்ணில் ஐந்து குணங்களும் இருக்கின்றன. அதற்கு ரூபம் இருக்கிறது; ருசி இருக்கிறது. நம் உடம்பு, கத்திரிக்காய், வெல்லம் எல்லாம் மண்தான்! மண்ணுக்கு வாஸனை இருக்கிறது. வாஸனை உள்ள புஷ்பம் மண்தான். கடினம், சீதம் உஷ்ணம் முதலியதான ஸ்பரிசத்தால் அறியும் குணங்களும் மண்ணுக்கு இருக்கின்றன. சப்தமுங்கூட இருக்கிறது. நூலைக் கட்டிக் கேட்டால் சப்தம் கேட்கிறது. கட்டையைத் தட்டினால் சப்தம் உண்டாகிறது. ஜலத்தில் கந்தத்தைத் தவிர மிகுதியுள்ள நான்கு குணங்களும் இருக்கின்றன. நாம் வாஸனைப் பதார்த்தங்களைக் கலந்தால்தான் ஜலத்தில் கந்தம் உண்டாகிறது. ஜலத்திற்கு ரூபம், ரஸம், சப்தம், ஸ்பரிசம் என்னும் நான்கும் இருக்கின்றன. ஜலத்தை அடித்தால் சப்தம் உண்டாகிறது. மண்ணில் ஐந்து குணங்களும் இருந்தாலும் மற்ற நான்கிலும் இல்லாமல் அதில் மட்டும் இருப்பது கந்தம். அது அதனுடைய விசேஷ குணம். ஜலம் இல்லாமல் போனால் ரஸம் இல்லை. அதனால்தான் ரஸேந்திரியமாகிய நாக்கில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது. நாக்கில் நீர் வற்றி மரத்துப் போனால் ருசியை அறிய முடியாது! ரஸம் என்பதற்கே ஜலம் என்று ஒரு அர்த்தம் உண்டு. தேயுவுக்கு (நெருப்புக்கு) ரஸமும் இல்லை, கந்தமும் இல்லை. ரூபம், சப்தம், ஸ்பரிசம் என்ற மூன்றுதான் இருக்கின்றன. அதற்கு ரூபம் விசேஷ குணம். வாயுவில் ரூபம் இல்லை. சப்தமும் ஸ்பரிசமும் மாத்திரம் இருக்கின்றன. அதற்கு ஸ்பரிசம் விசேஷ குணம். அதனால்தான் நம் மேலே காற்று பட்டால் தெரிகிறது. ஆகாசத்திற்கு சப்தம் மட்டுமே உண்டு. வாயுவினால்தான் சப்தம் உண்டாகிறதென்று முதலில் நவீனர்கள் கருதியிருந்தார்கள். கம்பியில்லாத் தந்தி முதலியவை ஏற்பட்ட பிறகு காற்றினுடைய மாறுதல்களுக்கு உட்படாமல் சப்தம் கேட்பதால் ஆகாசத்தினுடைய குணம் அது என்று தெரிந்து கொண்டு வருகிறார்கள்.

சப்தம் என்ற ஒரே குணமுள்ள ஆகாசம்; சப்தத்தோடு நம் மேலே படுவதால் தெரிந்துக்கொள்ளக் கூடிய ஸ்பரிசமும் உள்ள வாயு; சப்தம், ஸ்பரிசம் என்ற இரண்டோடு கண்ணுக்குத் தெரிகிற ரூபமும் உள்ள அக்னி; இந்த மூன்றோடு ரஸமும் சேர்ந்த ஜலம்; இந்த நாலு குணங்களோடு கந்தமும் உள்ள பிருத்வி – என்று பஞ்ச பூதங்கள்.

ஐந்து குணங்களுக்கு ஆசிரியங்களாக பஞ்ச பூதங்களாகிய திரவியங்கள் இருக்கின்றன.

நியாய சாஸ்திரம் சொல்லும் ஒன்பதில் மிகுதியுள்ள திரவியப் பிரிவுகள் காலம், திக்கு, ஆத்மா, மனது என்பவை. மணி, நேற்று, இன்று, நாளை, வருஷம், யுகம் முதலியவை காலம். அதாவது Time என்ற தத்வம். திக்கு என்பது தேசம் – மேல் கீழ், அங்கே, இங்கே என்பனவெல்லாம்! அதாவது Space என்ற தத்துவம். இவ்வளவையும் அறிவும் மனத்தை உடையவனே ஆத்மா. மற்ற எல்லாம் அவனுக்காகத்தான் இருக்கின்றன! அவன் இரண்டு விதம். அசட்டு ஆத்மா ஒருவன். அசடாயில்லாத ஆத்மா ஒருவன். இவர்கள் முறையே ஜீவாத்மா, பரமாத்மாவென்று சொல்லப் படுவார்கள்! லோகத்தில் நடப்பதையெல்லாம் வெறுமே பார்த்துக் கொண்டிருப்பவன் ஒருவன் (பரமாத்மா) . இதிலே மாட்டிக் கொண்டு துக்கப்படுபவன் மற்றவன் (ஜீவாத்மா) . ஜீவாத்மா பலர்; பரமாத்மா ஒருவர். இவ்விருவரும் சைதன்ய [அறிவுள்ள ஜீவ] வஸ்துக்கள். வேதாந்தம் அறிவே ஆத்மா என்று சொல்லுகிறது. நியாய சாஸ்திரமானது அறிவை உடையவனான ஞானவான் ஆத்மா என்று சொல்லுகிறது. சிறிய அறிவை உடையவன் ஆத்மா என்று த்வைதமாகத்தான் நியாயம் பேசுகிறது. வேதாந்தப் படியோ ஏகமான பேரறிவே ஆத்மா; அதற்கு வேறாக அறியப்படும் ஒன்றே இல்லை; பல ஜீவாத்மாக்கள் என்று கூட இல்லை. ஆனால் நியாயப்படி அறிவு குணத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது; ஆத்மா திரவியம்; ஞானம் அதன் குணம்; ஞானாச்ரயன் ஆத்மா.

பரமாத்மாவினுடைய ஞானத்தில் தெரியாத ஒன்றும் இல்லை என்பதாக அவரை மட்டுமே நியாயத்தில் பேரறிவாகச் சொல்லியிருக்கிறது. ஜீவாத்மாக்கள் கொஞ்சம் ஞானம் உடையவர்களே. அதனால் நமக்கு “கிஞ்சித்ஞர்கள்” என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. ‘கிஞ்சித்’ என்றால் கொஞ்சம். பரமாத்மாவே ஸர்வக்ஞர். நாம் ஞானாச்ரயமாகவும் அஞ்ஞான ஆச்ரயமாகவும் கலந்து இருக்கிறோம். பரமாத்மா பூர்ண ஞானாச்ரயமாக இருக்கிறார். ‘ஆத்மா விபு, அதாவது அது எங்கும் நிறைந்திருக்கிறது; பரமாத்மாவும் எங்கும் நிறைந்திருக்கிறது’ என்று நியாய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டாலும் ஜீவாத்ம பரமாத்ம அபேதம் சொல்லப்படவில்லை. ஏனென்றால் இந்த சாஸ்திரத்தின் நோக்கில் அறிவு என்பது ஒவ்வொரு ஜீவரிடத்திலும் தனித்தனியாக ஏற்பட்டிருக்கிறது. அந்த இடம் தான் மனது. அந்த மனதினால்தான் சுகமும் துக்கமும் உண்டாகிறது.

குணம் 24 பிரிவாகவும், கர்மம் 5 பிரிவாகவும் நியாய சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட பதார்த்த ஞானம் இருந்தால் உண்மையை அறிந்து, மற்றவற்றில் வைராக்கியம் உண்டாகி மோக்ஷம் வரும் என்கிறது நியாய சாஸ்திரம். துக்கம் ஸுகம் எதுவுமில்லாத வெறுமையாகவே அது மோக்ஷத்தைச் சொல்லும்.

வேதாந்த மார்க்கத்தின்படியே நாம் மோக்ஷத்தைச் அபேக்ஷித்தாலும் அந்த வழியிலும் உபதேசத்தை ஆராயும் மனனத்திற்கு நியாயம் மிகவும் உபயோகப்படும்.

பஞ்ச பூதங்களையும், ஜீவாத்மாவையும், மனஸையும் நாம் தெரிந்து கொள்கிறோம். பரமாத்மாவை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அவன் ஒருவன்தான் அறிய முடியாதவன். அவனை அறிவதற்காகத்தான் அநுமானம் வேண்டும். மற்றவைகளை அறிவதற்குப் பிரத்யக்ஷப் பிரமாணமே போதும். ச்ருதி வாக்கியமானது ஈச்வரன் இருக்கிறான் என்று சொல்லுகிறது. இருந்துதான் ஆகவேண்டும் என்று அநுமானத்தால் ஸித்தாந்தம் செய்வது நியாயம்.

ஒரு சின்ன அநுமானத்தை இப்பொழுது பார்க்கலாம். நான் உட்கார்ந்துள்ள இந்த ஸிம்மாஸனம் ஒருவன் பண்ணித்தான் ஆகியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பண்ணினவனை நேரில் தெரியாததால் இது பண்ணப்பட்டது என்பதே பொய் என்று சொல்லலாமா? வேறு ஸிம்மாஸனங்களைப் பண்ணி நாம் பார்த்திருக்கிறோம். அதைக் கொண்டு இதையும் பண்ணினவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவனுக்கு இதைப் பண்ணுகின்ற சக்தியுண்டு என்பதையும் அறிந்து கொள்ளுகிறோம். அதைப் போல ஜகத்து எல்லாவற்றையும் பண்ணுகிறவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஸர்வஜ்ஞன், ஸர்வசக்திமான். எல்லாரையும் ரக்ஷிக்கின்றமையால் கருணாநிதியாகவும் அவன் இருக்க வேண்டும். இம்மாதிரி விஷயங்களை ஆக்ஷேபணை, ஸமாதானங்களோடு ஸரியான அநுமானத்தைக் கொண்டு நிர்ணயிப்பது நியாய சாஸ்திரம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அநுமானம் முக்யமான பிரமாணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிரமாணங்கள்
Next