வேதப் பிரமாணம்;பிற மதங்கள்

வேதப் பிரமாணம், பிற மதங்கள்

"வேதந்தான் 'அதாரிடி', நம் ஸ்வய புத்தி (அதாரிடி) இல்லை" என்கிறதை ஏன் ஒப்புக்கணும்? - இப்படிக் கேள்வி கேட்டால் அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே பதில்:அப்படி (வேதமே 'அதாரிடி', ஸ்வயபுத்தி இல்லை என்று) இருந்தவர்களில் தானே இத்தனை மஹான்கள், அநுபூதிமான்கள் தொடர் சங்கிலியாக அநாதி காலம் முதற்கொண்டு தோன்றி இன்றைக்கு வரையில் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி வேறே எந்த மதத்திலும் காணாமே!வேதம் ப்ரமாணமில்லை என்று சொன்ன இரண்டொருத்தர் மஹான்களாக ஆன மாதிரித் தெரிந்தாலும், தனிப்பட அவர்கள் அப்படி ஆனதாகவே வைத்துக் கொண்டால்கூட, அவர்களுடைய ஸித்தாந்தம் ஸரியில்ல என்றுதான் ஆசார்யாள் நன்றாக நிலைநாட்டி ஒன்று அந்த மதங்கள் இந்த தேசத்தைவிட்டே ஓடும்படியாகவோ, அல்லது இந்த தேசத்திலேயே ஆதியிலிருந்ததை விட நூறில் ஒரு பங்காக க்ஷீணிக்கும் படியாகவே ஆக்கிவிட்டாரே!போகப்போக அந்த மதங்களும் அவற்றின் மூல புருஷர்கள் கொடுத்த ரூபத்திலிருந்து மாறி மாறி, வேத மதத்திலிருந்தே அநேக அம்சங்களை எடுத்துக் கொண்டும், பலதைக் கலந்து வேறே ரூபமாக்கிச் சேர்த்துக்

கொண்டுந்தானே வெளி தேசங்களிலோ இந்த (நம்முடைய) தேசத்திலேயோ இருந்து வருகின்றன?

அவற்றின் மூலபுருஷர்கள், "ஸ்வய புத்தியே ப்ரமாணம், வேறே வெளிப் புஸ்தகமோ, உபதேசமோ, குரு என்ற ஆளோ இல்லை" என்று சொன்னாலும் அப்படிச் சொன்ன அவர்களையே குருவாகவும், அவர்கள் சொன்னதே ப்ரமாணம் என்றுந்தான் அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆக்கிக்கொண்டு, கேள்வி கேட்கக் கூடாத மதக் கோட்பாடுகளாக ப்ரமாணப் புஸ்தகங்கள் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த மதம் என்று இருந்தாலும் ஸரி, அதில் இப்படி 'ஃபாலோ' பண்ணியே ஆகவேண்டும் என்பதான கோட்பாடுகளைக் கொண்ட 'அதாரிடி'யாக 'பேஸிக் ஸக்ரிப்சர்' என்று ஒன்று இருக்கிறது. ஒரு ராஜாங்கம் என்றால் அதற்கு கான்ஸ்டிட்யூஷன் இருந்தேயாகவேண்டும் என்கிற மாதிரிதான் இது. அப்படி வேத அதாரிடியை ஆக்ஷேபிக்கும் மதஸ்தர்களும் தங்களுக்கு அதாரிடியாக ஸ்க்ரிப்சர்கள் வைத்துக்கொண்டு அதைப் பின்பற்றுவதால்தான் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல ஸமுதாயத்தார் இருப்பதே!

இப்படி 'அதாரிடி' ஒன்றுக்கு ஸ்வய புத்தியைக் கீழ்ப் படிந்திருக்குமாறு செய்து, அடக்கத்தோடு, நம்பிக்கையோடு, தாங்கள் பெரியவர் என்று நினைக்கிற ஒருவரின் கொள்கையை அந்தப்புர மதஸ்தர்களும் ஏற்றுக் கொள்கிறார்களல்லவா? அதுவேதான் அவர்களிலும் பல பேருக்கு மஹான்கள் என்னும்படி ஏதோ ஒரு உசந்த அநுபவத்தைக் கொடுத்து, அந்த மதங்களும் ஜீவித்திருக்கும் படியாகச் செய்துவந்திருக்கிறது.

ஆனாலும் நம்முடைய வைதிக ஸம்ப்ரதாயத்தில் கூட்டங்கூட்டமாக ஆதியிலிருந்து வந்திருக்கிற ஞானிகள், யோகிகள் - ராஜயோக ஸித்தர்கள், மந்த்ரயோக ஸித்தர்கள் - இதெல்லாவற்றுக்கும் மேலாக, அத்தனை அநுபவத்தையும் பக்தியினாலே பெற்ற பக்தர்கள் மாதிரி வேறே எங்கேயுமே

இல்லை என்று நன்றாக 'ஸ்டரிடிஸ்டிக்ஸ்' காட்டியே 'ப்ரூவ்' பண்ணலாம். தத்வ

சாஸ்த்ரப் புஸ்தகங்களும் கணக்கு வழக்கில்லாமல் இந்த மதத்திலேயே தோன்றியிருக்கின்றன. ரொம்பவும் நுணுக்கமாக, பல தினசு மக்களுக்கும் வழி சொல்லிக் கொடுக்கப் பலவிதமான ஸாதனா மார்க்கங்களும் இங்கதோன் தோன்றி, இன்றுவரை இருந்து வருகின்றன. இத்தனையும் வேத ப்ராமாண்யத்தை (வேதத்ததின் பிரமாணத்தை) ஏற்றுக்கொண்டு அந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பினவைதான்.

இதைவிட என்ன காரணம் வேண்டும், நாமும் அந்த ப்ரமாணத்தையே மனஸார ஏற்றுக்கொண்டு, அடக்கத் தோடு பின்பற்றுவதற்கு? - எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is உபநிஷத்தும் சங்கரரும் காட்டும் போலிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ச்ரத்தை:வேதத்திடமும் குருவிடமும்
Next