உபநிஷத்தும் சங்கரரும் காட்டும் போலிகள்

உபநிஷத்தும் சங்கரரும் காட்டும் போலிகள்

ஆனால், தற்காலத்தில் தாங்களே படித்து, தங்கள் புத்தியாலேயே ஆலோசித்து 'ஜீவாத்ம - பரமாத்மாக்கள் வாஸ்தவத்தில் ஒன்றேதான்' என்ற அதை புத்தி மட்டத்தில் நிச்சயப்படுத்திக் கொண்டவர்களில் பல் பேர் 'குரு என்று ஒருத்தர் மூலம்தான் இதைத் தெரிந்து கொள்ளணும் என்றில்லை' என்கிறார்கள். அநேகமாக இப்படிப் பட்டவர்கள் சொந்த புத்தியின் பலத்தால் பெரிய தத்வார்த்தம் கண்டுவிட்டோம் என்பதில் 'வித்யா கர்வம்', என்கிற ஒருவகையான அஹங்காரத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். அஹங்காரம் அடியோடு நசித்தால்தான ஆத்மா அநுபவத்திற்கு வரும். இவர்களானால் அதற்கு மேலும் தடிப்பு ஏற்படுத்திக்கொண்டு விடுவதால் புத்தியினால் நிச்சயப்படுத்திய ஸத்தியம் ஹ்ருதயத்திற்குள் இறங்கி அநுபவத்திற்கு வர முடியாமல் குறுக்கே கருங்கல் சுவரே போட்டுக் கொண்ட மாதிரி ஆகி விடுகிறது. ஆனாலும் புத்திமான்களாயிற்றே தோல்வியை ஒப்புக் கொள்வார்களா? தங்களுக்கு ஜயம் ஏற்பட்டு, தாங்கள் ஆத்மாநுபூதி பெற்று விட்டதாகவே காட்டிக் கொள்வார்கள். யாரிடமும் உபதேசம் வாங்கிக் கொள்ள அவச்யமில்லை என்கிறவர்களே ஊருக்கெல்லாம் சின்முத்ரை காட்டிக் கொண்டு லெக்சர் கொடுப்பது, புஸ்தகம் எழுதுகிறது என்றிப்படி நிறையப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்டவர்கள் ஆசார்யாள் நாளிலும், ஆதி உபநிஷத் நாளிலுங்கூட இல்லாமல் போகவில்லை. இவர்களைக் 'கடோபநிஷத்', 'முண்டகோபநிஷத்' இரண்டும் ஒரே போல வர்ணித்திருக்கின்றன. ஒரே ஒரு வார்த்தைதான் வித்யாஸம். பாக்கி வர்ணனை முழுக்க இரண்டிலும் ஒன்றேதான். அது என்ன வர்ணனை? 'வாஸ்தவத்தில் இவர்கள் அஞ்ஞான இருள் சூழ்ந்தவர்கள்.. 'வேஷ்ட்யமாணா:' என்று ஆசார்யாள் பாஷ்யம். அதாவது நம்மைச் சுற்றி வேஷ்டி கட்டிக் கொள்கிற மாதிரி, (சிரித்து) 'Wrapped in ignorance' ஆக இருக்கிறவர்கள் ஆனாலும் தாங்களே தீரர்கள், தாங்களே பண்டிதர்கள் என்று தங்களைத் தாங்களே உசத்தியாகப் பாராட்டிக் கொள்கிறார்கள்.'

'தீரர்' என்ற வார்த்தையை நாம் வீரத்தோடு சேர்த்து 'வீர தீர பராக்ரமசாலி' என்கிறோம். 'தீர'த்திலிருந்துதான் 'தைர்யம்' என்பதாக வீர ஸம்பந்தமுள்ள ஒரு குணத்தைச் சொல்கிறோம். அந்த அர்த்தம் ஸரிதான். ஆனாலும் உபநிஷத்துக்கள் போன்ற சாஸ்திரங்களில் ப்ரஹ்மவித்யா ஸாதகர்களையும் ஸித்தர்களையும் 'தீரர்' என்கிறபோது அதை வீரத்தின் Counterpart -ஆக (பிரதி அங்கமாக) ச் சொல்வதில்லை. உத்தமமான புத்தி வன்மையையே இங்கே தீரம் என்றும், அப்படிப்பட்ட குண ஸம்பன்னர்களையே தீரர் என்றும் சொல்வதாகப் பார்க்கிறோம். 'தீரர்' என்றால் கிட்டத்தட்ட 'ஞானி' என்றே இங்கே அர்த்தம். கீதையில்கூட பகவான், 'சரீரத்தின் சாவோடு எல்லாம் போய்விட்டது என்று ஞானி மயங்குவதில்லை' என்பதற்கு, 'தீரஸ்தத்ர ந முஹ்யதி' என்றே சொல்லியிருக்கிறார். நாம் பார்க்கிற இடத்திலும் அப்படித்தான் அந்த வாய்வேதாந்திகள் தாங்கள் ஞானி என்ற அர்த்தத்திலேயே 'தீரர்கள்' என்று சொல்லிக் கொள்வது, (சிரித்து) புரட்சிக் கருத்துச் சொல்பவர்களானதால் பொது அர்த்தப்படியும் 'தீரர்' என்று

சொல்லலாம்

அப்புறம் 'பண்டிதர்' என்று வருகிறது. பண்டிதர் என்றால் பெரிய படிப்பாளி, 'ஸ்காலர்' என்று மாத்திரம் அர்த்தமில்லை. 'பண்டா' என்று பரம ஞானத்திற்கே பெயர். அதனால் 'பண்டிதர்' என்றாலும் ஞானி என்றே இங்கே அர்த்தம்.

வாஸ்தவத்தில் ஞானம் பெறாத அந்த (சற்று யோசித்து) 'வெற்றறிவாளர்கள்' தங்களை தீரராகவும் பண்டிதராகவுமே 'ஷோ' பண்ணிக் காட்டிக்கிறார்களாம்

என்ன உசத்தி சொல்லிக் கொண்டு என்ன? யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள்? பல தினுஸிலும் கோணாமாணாவாகத் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஒரு இடத்தில்தான் அந்த இரண்டு உபநிஷத்துக்கள் வெவ்வேறு வார்த்தைகளைப் போட்டிருக்கின்றன. இரண்டுமே அபூர்வமான வார்த்தைகள். நிகண்டு (அகராதி) களில்கூட இருக்குமா என்று ஸந்தேஹம். ஆனாலும் அகராதி பார்க்காமலே, 'உழப்பிண்டு குழப்பிண்டு திரிஞ்சுண்டிருக்கா' என்று நாம் புரிந்து கொள்ளும்படியாக அந்த வார்த்தைகளின் சப்த விசேஷமே இருக்கிறது!...

'பள பள', 'தொள தொள', 'கண கண', 'டும் டும்' என்றிப்படி சப்தமே அர்த்தத்தைத் தெரிவித்து விடுகிறதோல்லியோ? இதற்கு 'சப்தாநுகரணம்' என்று பெயர். இங்க்லீஷில் (எழுத்தெழுத்தாகக் குழந்தை போல் சொல்கிறார்:) ஆ-ன-ம-டோ-பி-யா (onoma top oeia) ...

தங்களுக்குத் தாங்களே பண்டித பட்டம் கொடுத்து கொண்டவர்கள் வாஸ்தவத்தில் இழுபறி வழிகளில் போய்த் திண்டாடுபவர்கள் என்பதற்கு சப்தாநுகரணமாக ஒரு உபநிஷத் போட்டிருக்கிற வார்த்தை 'தந்த்ரம்யமாணா:' என்பது இன்னொன்றில் போட்டுள்ள வார்த்தை 'ஜங்கன்யமானா:' என்பது. 'வாய் வேதாந்தம் ப்ரமாதமாகப் பேசினாலும் யதார்த்தத்தில் ஜரா-மரண-ரோகாதிகளால் பீடிக்கப்படும் நானா தினுஸுக் கோணல் வழியிலும் போய் அவர்கள் விணாகப் போகிறார்கள்' என்று ஆசார்யாள் பாதி கோபமும், பாதி அங்கலாய்ப்புமாக இங்கே பாஷ்யத்தில் சொல்கிறார்.

ஒரு லக்ஷ்யத்துக்கும் வராமல் செக்கு மாடு மாதிரி புத்தி வாதத்திலேயே இவர்கள் சுற்றிச் சுற்றி வருவதையும் உபநிஷத் சொல்கிறது. சுற்றிச் சுற்றி வந்தால் தலையும் சுற்றி ப்ரமை, சித்த ப்ரமை ஏற்படத்தானே செய்யும்? அப்படி இவர்களுக்கு ஏற்படுவதையும் ஆசார்யாள் 'விப்ரமந்தி' என்கிறார்.

ஒரே லக்ஷ்யமாகக் குறிக்கோளுக்கு அழைத்துப் போகிறவன்தான் நிஜமான குரு. குரு இல்லாத இந்தப் போலிப் பண்டிதர்கள் லக்ஷ்யத்துக்கு வராமல் எங்கேயோ சுற்றுகிறார்கள். இந்த மாதிரியே இவர்களுக்கு முந்தியும் கதை பண்ணிக்கொண்டு திண்டாடியவர்கள்தான் இவர்களுக்கு 'குரு ஸ்தூனம்'!பூர்வகாலத்தில் அசாஸ்த்ரீயமாகப் போனவர்களைச் சொல்லி, 'அவர்கள் மாதிரி நாங்களும் independant' என்று பெருமையாகச் சொல்கிறவர்களை இன்றைக்கும் நாம் பார்க்கிறோமல்லவா? இதைக் 'குருடர் வழி காட்ட, அவர்களுக்குப் பின்னே குருடர் போகிறமாதிரி' என்று உபநிஷத்துக்கள் ஒரு படமாகப் பிடித்துக் காட்டுகின்றன. இதையே விதேச பாஷையிலே படம் பிடித்த மாதிரி பைபிளிலும் 'blind leading the blind', அந்த மாதிரிப் போய் இரண்டு பேரும் குழியில் விழுவது

என்று சொல்லியிருக்கிறது.

இப்போது பின்னே போகிற குருடர்களையே வழிகாட்டியாகக் கொண்டு வருங்காலத்திலும் ஒரு குருட்டுக் கூட்டம் தோன்றி, அதே ரீதியில் பாரம்பர்யமாகப் போய்க் கொண்டிருக்கும் என்பதையும் உபநிஷத் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. 'குரு பரம்பரை' என்கிற மாதிரி, 'குரு வேண்டாம்' என்கிறவர்களே போலி குருமார்களாகி அவர்களுக்கும் ஒரு பரம்பரை!

இந்தப் பேச்செல்லாம் எதற்கு வந்ததென்றால், தானாகவே ஒருத்தன் மஹாவாக்யத்தை புத்தியால் அலசி அந்த மட்டத்தில் நிர்தாரணம் பண்ணிக் கொள்வது மட்டும் 'ரியலைஸேஷ'னுக்குப் போதாது, குருவின் கருணை இல்லாமல் 'ரியலைஸேஷன்' ஸாத்யமே இல்லை என்று ஆசார்யாள் ('தத்வோபதேச'த்தில்) சொல்லும் போது உபநிஷத்துக்கள் காட்டும் அந்த 'ஸ்வயம் ஸம்பாவித' (தங்களைத் தாங்களே போற்றிக் கொள்ளும்) பண்டிதப் போலிகளை மனஸில் கொண்டே பேசுவதால்தான். அந்த இடத்தில் அவர் அந்த இரண்டு உபநிஷத்துக்களிலும் 'பண்டிதம் மந்யமானா:மூடா:' என்று முதல் வேற்றுமையில் வருவதையே மூன்றாம் வேற்றுமையில் 'பண்டிதமாநிபி:மூடை:' என்று சொல்லியிருக்கிறார். லோகத்தில் மஹாபுத்தி மான்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களுக்கு உபநிஷத்தும் ஆசார்யாளும் கொடுக்கும் பட்டம் 'மூடர்' என்பதுதான் கோபத்தில் திட்டுவதாக அர்த்தமில்லை, உள்ளதை உள்ளபடிச் சொல்வதுதான்

தொடர்ந்து ஆசார்யாள், இக்கால வாய்வேதாந்திகள் மாதிரியே அவர் காலத்திலிருந்து சில பேரும், "சுத்தமான மனஸோடு கூட ஆராய்ந்து பார்த்தால் தன்னால் மஹாவாக்யத்தின் தாத்பர்யமாக ப்ரஹ்மஞானம் ஏற்பட்டுவிட்டுப் போகிறது. குரு என்று ஒருத்தர் என்னத்துக்கு?" என்று கேட்டதைச் சொல்கிறார்.

அந்தஃகரண ஸம்சுத்தென ஸ்வயம் ஜ்ஞாநம் ப்ரகாசதே 1

வேதவாக்யை:அத:கிம் ஸ்யாத் குருணா?...

இப்படி அவர்களுடைய கேள்வியைச் சொன்னவர், அதற்குத் தம்முடைய பதிலாக "இதி ந ஸாம்ப்ரதம்" என்று சொல்லி ச்லோகத்தின் அந்தப்பாதியைப் பூர்த்திப் பண்ணுகிறார்:

'வேதவாக்யை - ரத:கிம் ஸ்யாத் குருணேதி ந ஸாம்ப்ரதம்'.

'இதி'-இப்படிச் சொல்வது, அதாவது, போலிப் பண்டிதர்கள் சொல்வது, 'ந ஸாம்ப்ரம்' - 'உசிதமில்லை' 'ஸாம்ப்ரதம் என்றால் உசிதமானது என்று அர்த்தம் போட்டதால் அதற்கு 'ஆப்போஸிட், அதாவது, 'உசிதமில்லை'.

ஏன் உசிதமில்லை? ஏனென்றால் நமக்கு ப்ரமாணம் வேதந்தான். வேதம் சொல்வதுதான் நமக்குவழி. அந்த வேதம், உபநிஷத் வாயிலாக, 'ஆசார்யவானான, அதாவது, குருவை உடையவனான, மனிதனே ஸத்யத்தை அறிகிறான்' என்று சொல்லியிருக்கிறது என்று ஆசார்யாள் மேற்கொண்டு அந்தப் புஸ்தகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால் அந்தப் போலிப்பண்டிதர்கள், 'வேதம் ஏன் ப்ரமாணம்? நம்முடைய

புத்தி, நம்முடைய மனஸ் ஸாக்ஷியேதான் ப்ரமாணம்' என்றுந்தான் சொல்வார்கள். அவர்களுக்கு, அவர்களுடைய பகுத்தறிவு லெவலிலேயே என்ன பதில் சொல்லி 'கன்வின்ஸ்' பண்ணுவதோ, தெரியவில்லை

ஆசார்யாளுக்கு வேதம் முக்யம், அதுவே அவருக்கு மூச்சு. வேதத்திடம், வேதமாதாவின் கருணையிடம் அவர் பரமபக்தியோடு "மாத்ரு பித்ரு ஸஹஸ்ரேப்யோபி ஹிதைஷிணா வேத" என்று - அதாவது 'வேதம் ஆயிரம் அம்மா - அப்பாவைவிட ஹிதத்தையே எண்ணுகிறது, செய்கிறது' என்று பாஷ்யத்தில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். அதிலே விதித்த குரு முக உபதேசந்தான் அவர் எந்நாளும் வலியுறுத்துவது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சீடனின் யோக்யதையும் குருவின் கருணையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வேதப் பிரமாணம்;பிற மதங்கள்
Next