ச்ரத்தை:வேதத்திடமும் குருவிடமும்

ச்ரத்தை வேதத்திடமும் குருவிடமும்

நடுவிலே ஒன்று சொன்னேன். ஏதாவது ஒன்றுக்கு ஸ்வயபுத்தியைக் கீழ்ப்படியப் பண்ணி நம்பிக்கையோடு அடக்கமாக ஏற்றுக்கொள்கிறதே ஒரு உசந்த அநுபவத்தைக் கொடுத்துவிடும் என்று. இத்தனை நீட்டிச் சொன்னதற்குத்தான் சின்னதாக ஒரே வார்த்தை, 'ச்ரத்தை' என்று இருக்கிறது. வேதத்திலும், அதை அநுஸரித்த தர்ம சாஸ்த்ரத்திலும், அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லும் ஆசார்யனிடமும் நமக்கெல்லாம் அது ஒன்று இருந்து விட்டால் போதும், வேறே ஒன்றுமே வேண்டாம். புத்தியால் தான் நாம் வெளிலோகத்தில் ஸகலமும் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அதே புத்திதான் உள்லோகத்தில் பரம தத்வத்தை நாம் தெரிந்து கொள்ள முடியாமலும் குறுக்கே நிற்கிறது அம்பாள் அதை இப்படிப் பண்ணி போட்டிருக்கிறார். இப்படி சோதனை ஒரு பக்கம் பண்ணினாலும், இன்னொரு பக்கம், (சிரித்து) அந்த புத்திக்கு புத்தி சொல்லி, 'உனக்கு உள்லோகத்தில் பிரவேசித்து தத்வார்த்தம் தெரிந்து கொள்ள அதிகாரம் - 'அதாரிடி, அதாரிடி' என்றேனே, அது -இல்லை. அந்த லோக ஸமாசாரம் ஈச்வரனே வேதமாகக் கொடுத்து ரிஷிகள் மூலம் வெளி வந்திருப்பதில்தான் இருக்கிறது. ஆகவே உள்லோக வழிக்குக் குறுக்கே நிற்கிற புத்தியைப் படுக்கப் போட்டு வேத சாஸ்திரங்களைப் பிடித்துக் கொண்டு போ', என்று எடுத்துக் கூறி நல்லபடியாகத் திரும்பிவிட மஹான்களை, ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வேதப் பிரமாணம்;பிற மதங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சரணாகதி
Next