இந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மையினரின் விசித்திர நிலைமை

இந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மையினரின் விசித்திர நிலைமை

ஆதிகாலம் தொடங்கி இங்குள்ள பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர் பெரும்பாலும் சாத்துவீகர்களாகவும் ஏனையோர் அவர்களைக் காட்டிலும் வன்மை படைத்தவராகவுட்ம இருந்துள்ளதைப் பிற நாட்டினரில் பலரும் கண்டு கூறியுள்ளனர். அதோடுகூட, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முக்கியமான ஹிந்துத் தலைவர்கள் சமரஸம் என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு மிகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டே போயிருப்பதில், இன்று அத்தலைவர்களே வருத்தப்படும்படியாக இத்தேசத்தைப் பிளந்து ஒரு பகுதியை ஒரு சிறுபான்மை மதத்தோர் தங்களது தனிநாடாக ஆக்கிக் கொள்ளுமளவுக்கு அவர்கள் வன்மையில் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மதஸ்தரோ தங்களது நியாயமான உரிமைகளுக்கு அரசாங்கத்திடம் மன்றாடவும் போராடவும் வேண்டிய விபரீதமான நிலை இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நமது யோசனைக்குச் சம்மதிக்கவியலாமல், 'ஆதியிலிருந்தே இந்நாட்டிற்கேயான மதத்தை, இன்றைக்கும் இங்கு மிகவும் பெரும்பான்மையாயுள்ள மதத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் பிற மதங்களிடம் முதலடி வைத்துத் தங்களது உரிமைகளின் நியாயத்திற்கு அவர்களிடம் ஒப்புதல் கோருவதாவது?' என்று ஒரு சாரார் கருதக் கூடியது இயற்கையே. எனினும், நமது சீர்தூக்கிப் பார்த்த முடிவு யாதெனில், எவராயினும் எவரிடமாயினும் பிற காரணம் யாவற்றையும் ஒதுக்கி, முதற்கண் அன்பால் பரஸ்பர நல்லிணக்கம் கொள்ள முயலுவதே நமக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. அது பயன்தராத போதே பிற உபாயங்களை மேற்கொள்ள வேண்டும். தேவையாயின் அப்போது அதனை வலியுறவே செய்யலாம்.

இங்கு கூறவிரும்பியது, மத வளர்ச்சிக்கு அரசாங்க உதவி பெறமுடியுமாயின் அப்போது ஹிந்து மதத்திற்கே அதில் அதிகமான பங்கு அளிக்கப்படவேண்டும் என்பதன் நியாயத்தைப் பிறருக்கு அன்புடன் எடுத்துச் சொல்லி அவர்களது சம்மதத்தைப் பெற முயல வேண்டுமென்பதுதான்.

எனினும், அரசாங்கம் எல்லா மதங்களையும் ஒன்று போலவே கருத வேண்டுமாதலால், அதைக் காட்டப் பிற மதங்களுக்கும் அன்பின் அடையாளமான 'டோகன்' என்பது போலத் திரவிய சகாயம் செய்யலாம்;செய்ய வேண்டுவதே!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அனைத்து மத மக்களும் சகோதரச் சமூகமாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரசு ஆதரவு தரவேண்டிய இனங்கள்
Next