திரைலோக்கிய சுந்தரம்

திருவிசைப்பா

திரைலோக்கிய சுந்தரம்

திருலோக்கி

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பாத்தலம்.

மக்கள் வழக்கில் 'திருலோக்கி' என்று வழங்குகிறது.

1) திருப்பனந்தாளிலிருந்து, கும்பகோணம் - பூம்புகார்ச் சாலையில் கோட்டூர் என்று வழங்கும் 'துகிலி' ஊரையடைந்து, அதைத் தாண்டி, "திருலோக்கி 5 A.e" என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இவ்வூரையடையலாம். ஒருவழிப்பாதை, பேருந்து செல்லும். பாதையில் செல்லும்போது அங்கங்கே நின்று விசாரித்துச் செல்ல வேண்டும்.

தனிப்பேருந்தில் யாத்திரையாகச் செல்வோர், மேற்குறித்த இருபாதைகளில் ஏதேனும் தடங்கலங்கள் உள்ளனவா, பாதை சீர்கெட்டுப் பழுதுப்பார்க்கும் பணி நடைபெறுகிறதா என்று திருப்பனந்தாளிலேயே விசாரித்துக் கொண்டு வசதிப்படி உரிய பாதையிற் செல்வது நல்லது. (மழைக்காலத்தல் செல்வதற்குப் பொதுவாகச் சோழநாட்டு உட்பாதைகள் ஏற்றவையல்ல. இப்பாதைகளும் அத்தரத்தனவே) இத்திருக்கோயில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் அருளாட்சிக்கு உட்பட்டது.

இவ்வூரில் 1) சுந்தரேஸ்வரர் கோயில் 2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.

கோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திரைலோக்கிய சுந்தரமும் முதல் இராஜராஜன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும். கருவூர்த்தேவர் இக்கோட்டூரைக் (இன்று 'துகிலி' என்று வழங்குகிறது) 'கோடை' என்று கொண்டு திருலோக்கியைச் சிறப்பித்து "கோடை திரைலோக்கிய சுந்தரனே' என்று பாடுகின்றார். இத்தொடர் இப்பதிகம் லோக்கிய சுந்தரனே" என்று பாடுகின்றார். இத்தொடர் இப்பதிகம் முழுவதும் வருகிறது. தற்போது திருலோக்கி, தனி ஊராக உள்ளது.

திரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராஜராஜனின் மனைவியர்களுள் ஒருத்தியாவாள். சுவாமி பெயர் சுந்தரேசுவரர். இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும்.

முதலாம் இராஜேந்திரச் சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

சிறிய கோயில். கோயிலுக்கு முன்பு (ஸ்ரீ காசிமடத்தின்) இக்கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. முகப்பு வாயிலைத் தாண்டி உட்சென்றால் முன் மண்டபத்திலிருந்து நேரே மூலவரைக் காணலாம். இடப்பால் பிராகாரத்தில் சென்றால் (முன் மண்டபத்தில்) திருவிசைப்பா பதிகமும் காசிக் கலம்பகப் பாடலும் பொறித்த கல்வெட்டு கண்ணிற்படுகிறது. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானை, சுப்பிரமணியர், நடராஜசபை, பைரவர், பிட்சாடனர், சனிபகவான், சூரியன், சந்திரன் ஆகிய சந்நிதகளும் திருமேனிகளும் கண்டு தொழலாம்.

வலம் முடித்து உட்புகுந்து மூலவரைத் தரிசிக்கலாம்.


இறைவன் - சுந்தரேஸ்வரர், சுந்தரம்.


இறைவி - அகிலாண்டேஸ்வரி.


தலமரம் - சரக்கொன்றை.


தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம்.


பிருகுமுனிவர், தேவகுரு முதலியோர் வழிபட்ட தலம்.

மூலவருக்கு முன்னால் வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். சற்று உயர்வான ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர் தரிசனம் தருகின்றார். அம்பாள் அழகிய கோலம்.

மூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கணமூர்த்தி சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு - கண்டு மகிழ வேண்டும். அதற்கு நேர் எதிரில் இடப்பால்.

ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும் வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வியப்பூட்டும் இப் புதுமையான சிலாரூபம் வேறெங்கும் காண முடியாதது.

கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

குருக்கள் வீடு கோயிலுக்கு முன் பக்கத்திலேயே உள்ளது.

கருவூர்த்தேவர் பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில் முதலிரு பாடல்கள் தலைவிகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம் கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.


"நையாத மனத்தினனை நைவிப்பாள் இத்தெருவே

ஐயா c உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை

கையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும்

செய்யாயோ? அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே."


"ஆரணத்தேன் பருகி அருந் தமிழ்மாலை கமழவருங்

காரணத்தின் நிலை பெற்ற கருவூரன் தமிழ்மாலை

பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்

சீரணைத்த பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே."


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

திருலோக்கி - அஞ்சல்

(வழி) துகிலி - 609804.

திருவிடை மருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருமுகத்தலை
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருப்பூவணம்
Next