“உம்மாச்சி” : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்குமுன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியிலே திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ர-தோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது:

“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.”

ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். “அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்ப பரமேசுவரனை (ஸ + அம்ப = ஸாம்ப; அம்பளோடு கூடியாவனாக) தியானிக்க வேண்டும். சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்துச் சேர்த்தே ஈசுவரனைச் சொல்கிறது வழக்கம்.

வேதம் சிவனோடு சிவாவையும் சேர்த்து சொன்னது மட்டுமல்ல. நம் தேசக் குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன? குழந்தைகள் ஸ்வாமியை ‘உம்மாச்சி’ என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, “உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்” என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ‘இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் “உம்மாச்சு” என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழம் காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த விநாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஓடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் ‘குழந்தையாக இரு’ என்று உபதேசிக்கின்றன. ‘குழந்தையே தெய்வம்’ என்பார்கள். அந்தக் குழந்தை, தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேதத்தின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாயங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா!

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சகல மார்க்க நிறைவான சரவணபவன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பசுபதி
Next