சகல மார்க்க நிறைவான சரவணபவன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பரமாத்மாவை அடைய நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் இருக்கின்றன. சரீரம், மனசு, இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற, ஆத்மா என்ன என்கிற விவகாரத்திலேயே, எப்போதும் இருந்து கொண்டிருந்தால், கடைசியில் அது தானே பளிச்சிடுகிறது – Flash மாதிரி. இதுதான் ஞானம். அங்கே, அறிகிற ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்கும் பேதமே இல்லை. எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக அடங்கி விடுகிறது.

சிலருக்கு இந்த சாந்தியைவிட, பரமாத்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து கரைந்து விடுவதை விட, கொஞ்சம் பிரிந்து அவரிடம் அன்பாக இருந்து கொண்டிருப்பதில்தான் ருசி இருக்கிறது. இவர்கள் பக்தி செய்கிறார்கள். அதனால், பரமாத்மாவின் கருணையைப் பெறுகிறார்கள். இவர்கள் செய்யும் பக்தி, ஸ்வாமி திருப்பிச் செய்யும் கருணை, இரண்டும் அன்பு என்பதன் இரண்டு ரூபங்கள் தான். ஞானம் அறிவு வழி; பக்தி அன்பு வழி.

மனஸையும் கடந்து விட்டால் ஞானம்; மனஸை வைத்துக் கொண்டே பக்தி செய்ய வேண்டும். இதே மாதிரி சரீரத்தை வைத்துக் கொண்டு கர்மாக்களைச் செய்கிறேம். அப்போதும்கூட, நமக்கென்று பண்ணிக் கொள்ளாமல் லோக உபகாரமாகப் பண்ணி, அதன் பலனை ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்தால் அதிலேயே ஒரு ஆனந்தம், நிறைவு இருக்கிறது. இவ்வாறு பற்றில்லாமல் கடமையைச் செய்வது கர்ம மார்க்கம்.

மனஸை நிறுத்த முடியாததாலேயே, ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனசு கட்டுப்படாமல் ஓடுகிறது. ஆனால், மூச்சைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டால், மனசும் நின்றுவிடும். நமக்குப் பிராணன் என்று ஒன்று இருக்கிறது. பேருயிர் ஒன்றிலிருந்துதான் இந்தப் பிராணன் புறப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பிராணனை சில தினுசுகளில் கட்டுப்படுத்தி, சமநிலைக்குக் கொண்டுவந்து விட்டால் பிராண மூலமான பேருயிரை, பரமாத்ம சக்தியை அடைய முடிகிறது. இதற்கு யோகமார்க்கம் என்று பெயர்.

ஸுப்ரம்மண்ய சுவாமியைப் பற்றி நிறையக் கதை சொன்னேன். இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அவருடைய மகிமைக்கும் லீலைக்கும் முடிவேயில்லை. இத்தனை கதைகள், தத்வங்களிலிருந்தும் தெரிவது அவர் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார் என்பதுதான்.

முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார்.

நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க

ஏகபோகமாய் நீயு நானுமாய்

இறுகு வகை பரம் சுகமருள்

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே

பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம்! அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள், ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

கர்மா என்று எடுத்துக்கொண்டாலும், குமாரிலபட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் “தாஸமார்க்கம்” என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது! கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். ‘முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிறமாதிரி ‘நம் கடம்பன்’ என்று ஆரம்பத்திலிருக்கிறது!

கடைசியில் ‘யோகம்’ எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி. பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம். ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய’ என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே’ கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மண்யரை உத்தேசித்தே செய்கிறோம்.

தெலுங்கு தேசத்தில் சுப்ரம்மண்யரையே ஸர்ப்பமாகப் பாவிப்பதால்தான், பாம்பை, ‘சுப்பராயடு’ என்கிறார்கள்.

அவரே யோகத்தின் நிறைவு.

ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள். மூம்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்தி அநுக்கிரகத்துக்காக கருணையில் நனைந்திருந்தபோது “ஆர்த்ர”ராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில் ‘பட்ட கட்டை’யாயிருப்பார். அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?

பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம்’ என்றால் இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள். பர்வத ராஜ குமரியாகப் பிறந்து ஈஸ்வரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு. எனக்கென்னவோ ‘ஸ்தாணு’ வாக ஈசுவரன் இருக்கும்போதும், அவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா’ என்று தோன்றுகிறது.

ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸுப்ரம்மண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள். ‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.

சுப்ரம்மண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வல்லீ தேவசேனா சமேதராகக் கல்யாண சுப்ரம்மண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழிகாட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.

பாமர ஜனங்களிலிருந்து தேவர் வரையில் எல்லோரையும் ஒரேபோல் அநுக்கிரகிக்கிறவர் அவர். வேட ஸ்திரீயான வள்ளியை ஒரு பத்தினியாகவும், தேவ ராஜகுமாரியான தேவசேனையை இன்னொரு பத்தினியாகவும் கொண்டவர். பார்வதீ பரமேசுவரர்களின் கடைக்குட்டியான அவர்தான் தேவர்களில் ரொம்பவும் குழந்தை; அவரே தேவநாயகனாக இருக்கிறார். தேனாம்பேட்டையில் சுப்ரம்மண்ய ஸ்வாமி கும்பாபிஷேகம் நடந்தபோது, ‘தேவநாயகன் பேட்டை’தான் ‘தேனாம்பேட்டை’ ஆயிற்றோ என்று தோன்றிற்று. “தேவாதிதேவப் பெருமாளே” என்று அருணகிரி சொல்வார்.

அவரை நாம் எல்லோரும் பக்தி செய்து, இகபர க்ஷேமத்தைப் பெற வேண்டும். இவ்விதம் பக்தி செய்வதற்காக நம்மை நக்கீரர் ‘ஆற்றுப்படுத்திய’ நூல்தான் திருமுருகாற்றுப்படை. ஆற்றுப் படை உடைய முருகன் கங்கை ஆற்றில் பிறந்தவர். ஆறு தாங்கிய ஜோதியான அவர், ஆறெழுத்து மந்திர மூர்த்தி; ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகர்; ஆறுபடை வீரர். அவரது வெற்றி நாளான மகாஷஷ்டி துலா மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாள். துலா என்பது அவரது சமநிலையாம். தராசு முனையைக் காட்டுவது. ஞானத்தில் எங்கும் சமமாக இருந்து கொண்டே லோகாநுக்கிரகத்துக்காக அசுரர்களை வென்று பக்தர்களை ரக்ஷிப்பார். வெளிப்பகையோடு உட்பகைவர் அறுவரையும் அழித்து நம்மை ஜோதி ஸ்வரூபமாக்குகிற சிகரஜோதி அவர். மலைகளில் எல்லாம் மணிவிளக்காக மேலே நிற்பவர் அவர். கைலாஸ மலையில் ஜோதிப் பொழிவாய் உதித்தார். திருப்பரங்குன்ற மலையிலும் திருத்தணிகை மலையிலும் தேவயானை வள்ளியரை மணந்தார்; பல மலைகளில் சேனையை வகுத்தார்; கந்தமாதன மலையில் சூரனை வதைத்தார்; பழனி மலையில் ஆண்டியாய் நின்றார்; ஸ்வாமி மலையில் ஞானமொழி பேசினார்.

தேவாதி தேவப் பெருமாளான அவர் பெரியரில் பெரியவர். நாம் சின்னஞ் சிறியர். சின்னஞ் சிறிய நாம், தானியங்களுள் சின்னஞ் சிறிய தினையைக் காட்டி அழைத்தால், அந்தப் பெரியோன் வருவான். சின்னச் சின்ன தேனீக்கள் சின்ன மலர்களிலிருந்து எடுத்த தேனை விட்டு, தினை மாப்பிசைத்து அவருக்கு நிவேதனம் செய்தால், நமக்கு மன மலர்ச்சி என்ற தேனின் இனிமையைத் தருவார். தூய பசு மேய்ந்த தாவர லோகம் – இயற்கை – அழகு – முழுவதற்கும் சாரமாகத் திரண்டு வந்த பசு நெய்யை மாவில் வார்த்து, ஜோதி விளக்கேற்றினால் நம் மனத்திலும் அவர் ஞானச் சுடரை ஏற்றி வைப்பார்! மாவிளக்கு என்று நாம் மா விளக்கை அவருக்கு அர்ப்பணம் செய்தால், மா விளக்கான – அதாவது மகா தீபமான – அவர் நமக்கு ஞான ஜோதியைத் தருவார்.

பரமேசுவர ஸ்வரூபமான அவருக்கு, “அரன் நாமம் சூழ்க” என்று அவரே ஞானசம்பந்தராக வந்து சொன்னதற்கேற்ப, “அரஹரோ ஹரா” சொல்லி நம் பாபத்தையெல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக!

அரஹரோ ஹரா!

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is முருகனின் பூர்வ அவதாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  உம்மாச்சி
Next