“ஸ்வாமி” என்றால் குமாரஸ்வாமியே : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“ஸ்வாமி” என்பது கடவுளுக்குப் பொதுப் பெயர் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். பரமேசுவரனும் ஸ்வாமி, மகாவிஷ்ணுவும் ஸ்வாமி, விக்நேசுவரரும் ஸ்வாமி – எல்லா தெய்வங்களையும் “ஸ்வாமி” என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எந்த மூர்த்தியாகவும் இல்லாமல், இந்த எல்லாமாகவும் ஆகியிருக்கிற பரமாத்மாவை, பராசக்தியை கடவுள் (God) என்று எந்த மதஸ்தராலும் சொல்லப்படுகிறவரையும் “ஸ்வாமி” என்றே சொல்கிறோம்.

ஆனால் இந்த “ஸ்வாமி” என்கிற பெயர் வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான் அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் ஸுப்ரமண்யர் தான்; முருகன், முருகப் பெருமான் என்று இந்தத் தமிழ் தேசத்தில் தனியன்போடு சொல்லப் படுகிறவர்தான். அவர் குழந்தையாக இருக்கிற கடவுள்; குமாரஸ்வாமி.

‘இவர்தான் ஸ்வாமி என்று எதனால் சொல்கிறீர்கள்?’ என்று கேட்பீர்கள். ‘அமரகோச’த்தின் ஆதாரத்திலேயே இப்படிச் சொல்கிறேன்.

அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்கிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு ‘அமரகோசம்’ என்று பெயர். ‘அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப்பற்றியும், அதை எழுதினவனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். சுப்ரமணியர் விஷயத்துக்கு இது நேராக சம்பந்தமில்லைத்தான். இருந்தாலும் இதில் பல ரஸமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக்கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.

இந்த அகராதிக்குப் பேர் ‘அமரகோசம்’ என்றேன். ‘கோசம்’ என்றால் ‘பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் ‘கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும் ரொம்பவும் பிரசித்தமானது ‘அமரகோசம்’தான்.

‘அமர’ என்கிற பேர் எப்படி வந்தது? ஸம்ஸ்கிருதத்தை தேவபாஷை என்பார்கள்; தேவர்கள் அமிருதம் உண்பதால் அமரர் எனப்படுவார்கள்; எனவே தேவபாஷை அமரபாஷை என்றும் சொல்லப்படும்.

அதற்கேற்றாற்போல் “ஸம்ஸ்கிருதம் செத்த மொழி (dead language)” என்று சொல்லிக்கொண்டு, அதைச் சாக அடிக்க எத்தனையோ யத்தனம் செய்தாலும், எப்படியோ அதுவும் அமரமாக இருந்துகொண்டேதான் வருகிறது. ‘அமர பாஷையில் உள்ள கோசம்தான் அமர கோசமா?’ என்று தோன்றலாம்.

ஆனால் இந்தக் கோசத்துக்கு ‘அமரம்’ என்கிற பெயர் இப்படி வரவில்லை. அதை இயற்றியவனின் பெயரை வைத்தே அதற்கு ‘அமரம்’ என்று பெயர் வந்தது. அமர சிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால் அதற்கு ‘அமர கோசம்’ என்று பெயர்.

அமரசிம்மன் மகாபுத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால் அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிரமிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். இவன் ஹிந்து அல்ல. அமரசிம்மன் ஒரு ஜைனன்.

ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம். இலக்கியத்தில் அவர்களுக்கு விசேஷமான இடம் உண்டு, தமிழில் ஐம்பெரும் காப்பியங்களிலே ஜைன சம்பந்தம் அதிகம். காவிய ரசம் நிரம்பி மிக உயர்ந்த நூல்களாக உள்ள சிந்தாமணி, வளையாபதி எல்லாம் ஜைன நூல்கள்தாம். ஸம்ஸ்கிருதத்தில், ‘பஞ்ச காவியங்கள்’ என்று பொதுவாக இருப்பதைத் தவிர ஜைனர்களே தனியாக தங்கள் மத சம்பந்தமாக ஒரு பஞ்ச காவியம் வைத்திருக்கிறார்கள். இந்த அமரசிம்மனும் அநேக ஜைனமத புஸ்தகங்கள் எழுதினான். ஆனால் இன்று மிஞ்சியிருப்பது மதநூலாக இல்லாத இந்த அகராதி ஒன்றுதான் என்றால் ஆச்சரியமாயிருக்கும். இந்த ஒன்றாவது மிஞ்சியதற்குக் காரணம் ஜைனர்கள் பரம விரோதியாக நினைத்த நம் ஆதிசங்கரர்தான்.

ஆதிசங்கரர் பாரததேசம் முழுவதும் சஞ்சாரம் பண்ணி பல மதங்களைக் கண்டனம் செய்து, வைதிக மதத்தை ஸ்தாபித்தார் அல்லவா? இந்த திக்விஜயத்தில் அவர் அமர சிம்மனையும் சந்தித்தார். பகவத்பாதரின் கொள்கை, ‘ஒரே ஒரு சத்தியம்தான் இருக்கிறது! அதுவே பலவிதமாகத் தெரிகிறது. அந்த ஒன்றிலேயே கரைந்து அதுவாகவே ஆகிவிட வேண்டும்’ என்பது. பௌத்தர்கள் பொதுவாக எல்லாமே சூனியம், மாயை என்பார்கள். ஆதி ஆசார்யாளும் ‘மாயையால்தான் ஒரே பரம்பொருள் பலவாகத் தெரிகிறது. இந்தப் பார்வை போனால் இது அத்தனையும் போய்விடும்’, என்று சூனிய நிலையையே சொல்கிற மாதிரி தோன்றினாலும், அவர் முக்கியமாகச் சொன்னது ‘இல்லாத (சூனிய) மாயை’ அல்ல; ‘இது போனபின் எப்போதும் நிலைத்து இருக்கிற, அழிவே இல்லாத பூரணமாக ஒரே சத்தியம் இருக்கிறது’ என்பதைத்தான் நம் ஆசாரியாள் முடிந்த நிலையாக அவலம்பித்தார் (நிலை நாட்டினார்) . பௌத்தம் சூன்யத்தோடு நிற்கிறது. பூரணமாக ஒன்று இருக்கிறது என்பது ஆசாரியாளுக்கு முக்கியம். ஒன்றும் இல்லை என்பது புத்தருக்கு முக்கியம். ஒன்று இருக்கவும் இருக்கலாம் (அஸ்தி) ; இல்லாமலும் இருக்கலாம் (நாஸ்தி); இருந்தும் இல்லாமலும்கூட இருக்கலாம் (அஸ்தி நாஸ்தி); என்பது ஜைன மத ஸ்தாபகரான ஜினருக்கு (மகாவீரர்க்கு) முக்கியம்.

இப்படிப்பட்ட கொள்கையை உடைய ஜைனனான அமரசிம்மன் ஆசாரியாளிடம் வாதப் போருக்கு வரும்போது, “நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்” என்றான்.

ஆசாரியாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.

அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக் கொண்டு அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆச்சாரியாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான். அவன் என்னதான் மகாபுத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்பது ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷணகாலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும் ஸ்ர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால் இவன் அப்படிச் செய்திருக்கவே கூடாது. ஏனென்றால் இவனுடைய ஜைனமதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை. அதை பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில் ஆராதிப்பதை ஜைன தத்வம் ஒப்புக் கொள்ளக்கூடாது. அப்படியிருந்தும் இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப்பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால் வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்; மாரியம்மனுக்கும் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், “வீட்டில் இப்படி அபிப்பிராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி ( feeling) க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்” என்று ஜம்பமாகச் சொல்லிக்கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான் ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத்தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய வேண்டும் என்று, ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கி விட்டான் என்றால், அதற்குண்டான ஒரு பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து, இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்து விட்டாள்.

இப்போது இவன் திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தான் எத்தனை புத்திசாலியானாலும் ஆசாரியாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவர்த்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால் முன்னமேயே வாக்குத்தேவியைத் தஞ்சம் புகுந்திருந்தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள். எனவே, “என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரைபோட்டுக் கொண்டு, நீ அதற்குள் இரு, சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்” என்று வாக்குத் தந்தாள் வாக்தேவி.

அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆச்சர்யாளும் துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்து விட்டார்.

உடனே அவர், “அம்மா, உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே இப்படி அநுக்கிரகம் செய்யலாமா?அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்ய வேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?” என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமர சிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்து கொண்டாள்.

உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது.

அப்புறம் அமரசிம்மனால் ஆசாரியாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டான்.

ஸரஸ் – அதாவது நீர் நிலையில் – இருக்கிறவள் ஸரஸ்வதி. அறிவுதான் அந்த நீர்நிலை. அது கொஞ்சம்கூடக் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதற்குள் அவள் இருக்க முடியும். ஆனால், ஆசாரியாள் அவதரித்த காலத்தில் எப்படியிருந்தது? ஏகப்பட்ட மதங்கள் – எழுபத்திரண்டு என்று சொல்வார்கள் – விதண்டாவாதங்களைச் சொல்லிக் கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸரஸானது ஒரே சேற்றுக் குட்டை மாதிரி ஆகிவிட்டது. அப்போது அத்வைத உபதேசத்தால், ஆசாரியாள்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடியோடு வாரி அப்புறப்படுத்தி, ஸரஸைத் தெளியவைத்து, ஸரஸ்வதியை நிஜமான ஸரஸ்வதியாக்கினார். இப்படி ஒரு சுலோகம் உண்டு. (‘வக்தாரம் ஆஸாத்ய’ என்று ஆரம்பிக்கும்) .

இம்மாதிரி ஸரஸ்வதியை ஸரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ஸரஸ்வதியை அப்புறப்படுத்தும்படியாயிற்று. பிறகு அவர், ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கு தாமும் அநுக்கிரகத்தைச் செய்தார். அதைச் சொன்னால் அதுவே ‘அமரகோச’த்தின் கதையும் ஆகும்.

ஆசாரியாளிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டான் அமரசிம்மன்.

அதற்கப்புறம் அவனுக்குத் தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசாரியாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.

எந்த மதஸ்தரானாலும் நேர்மை, சத்தியம் உள்ளவர்கள் எதிலும் இருப்பார்கள். ஜைனர்களுக்கு சத்தியம், நேர்மை மிகவும் அதிகம். அவர்கள் ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுடன் வாதத்துக்கு வந்தபோது, தாங்களாகவே “நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துப்போவோம்” என்றார்கள். அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ஆனால், கருணை மிகுந்த சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அவர்களைக் கழுவேற்ற நினைக்கவில்லை. ஆனாலும் அவர்களாகவே பிடிவாதமாக “நாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு கழுவேறினார்கள். ஞானசம்பந்தர் சமணர்களை இரக்கமில்லாமல் தண்டித்ததாகச் சிலர் நினைப்பது தப்பு. இவர் வாதத்தில் ஜெயித்து, அதனால் பாண்டியராஜா இவர் பக்கம் சேர்ந்து, எதிராளிகளுக்கு எந்த சிட்சை தரவும் இவருக்கு அதிகாரம் தந்தும் கூட, அவர் ஜைனர்களை மன்னித்ததே அவருடைய பெருமை. அப்படியும் வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமை.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமரசிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வந்து விட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று, எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன் கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான்.

இதை ஆசாரியாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூட சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார். “அடடா, என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? லோகம் என்று இருந்தால் நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். எதிர்க்கட்சி இருந்தால்தான் நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ள முடியும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்துவிட்டுப்போ. ஆனாலும் நீ மகா புத்திமான் என்று நான் உன்னை கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்து சொல்ல முடியுமோ அத்தனை நன்றாக செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்த சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?” என்று ஆசார்யாள் அவனிடம்சொல்லி, அவன் கையை பிடித்து, அவன் கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போடவொட்டாமல் தடுத்தார். அப்போது அவன் கையில் இருந்ததுதான் ‘அமர கோசம்’. ஆசாரியாள் தடுத்திருக்காவிட்டால் அதுவும் “ஸ்வாஹா” வாகியிருக்கும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆச்சாரியாளின் கருணையால் பிழைத்தது. ‘அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும், அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.

அகராதியில் அதை எழுதியவன் தன்னுடைய சித்தாந்தம் முதலான எந்த சொந்தக் கொள்கைக்கும் பட்சபாதம் காட்டக்கூடாது. பிற மதங்களைச் சேர்ந்த வார்த்தைகளானாலும், இங்கே அகராதியில் அவற்றை விட்டுவிடாமல், ஆட்சேபிக்காமல், அவற்றுக்கு அந்தந்த மதஸ்தர்கள் என்ன அர்த்தம், என்ன பெருமை என்று நினைக்கிறார்களோ அதைத்தான் கொடுக்க வேண்டும். வேண்டுமானால், இப்படி இன்னாருடைய நம்பிக்கை (belief) என்று பட்டும் படாமலும் சேர்க்கலாமே தவிர, கண்டனம் ஒன்றும் பண்ணக்கூடாது. எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்கத்தான் வேண்டும் – அது எந்தக் கட்சியாளரின் கொள்கை என்று பார்ப்பது அகராதிக்காரனின் வேலை இல்லை.

இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் அமரசிம்மன் ஜைனனாக இருந்தபோதே இந்த ‘அமர கோச’த்தை எழுதி இருக்கிறான். இன்றைக்கும் சகல ஸம்ஸ்கிருத மாணவர்களும் நெட்டுருப் போடுகிற மாதிரி, பொது நோக்கோடு எழுதியிருக்கிறான்.

‘அகராதியையா, நெட்டுருவா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி நெட்டுருப் போடுவது?’ என்று தோன்றும். ஆனால், அமரகோசம் அழகான சுலபமான ஸ்லோகங்களாக, காவியம் மாதிரி, ஸ்தோத்திரம் மாதிரி, அப்படியே நெட்டுருப்போட வசதியாகத்தான் இருக்கிறது. அதை மனப்பாடம் செய்வது வழக்கமாகி விட்டிருக்கிறது.

அந்தக் காலத்தில் எல்லா சாஸ்திரங்களும் – வேதாந்தம், வைத்தியம், சங்கீதம், டிக்ஷனரிகூடத்தான் – சுலோகங்களாகத்தான் செய்யப்பட்டன. காரணம் என்ன? அப்போது அச்சு போட்டுப் புஸ்தகம் தயாரிக்கத் தெரியாது. எனவே கடைக்குப் போய்க் விலை கொடுத்து எத்தனை பிரதி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால் முடியாது. அத்தனை வித்தியார்த்திகளுக்கும் ஏட்டுச் சுவடியில் எழுதிக் கொடுப்பது என்றால் அதற்கே ஆயுசுக்காலம் போதாது. எனவே எதையும் மனப்பாடம் (memorise) பண்ணுகிற மாதிரி கொடுப்பதே யுக்தம் என்று கண்டார்கள். பேச்சு நடையில் (prose) இருப்பது மறந்துபோகும். எப்போதும் நாம் பேசிக்கொண்டே இருப்பதால், அதே நடையில் இருக்கிற பாடம் தனியாக மனஸில் நிற்காமல் உதிர்ந்து போய்விடும். ஆனால், அதுவே ஒரு சந்தம், எதுகை, மோனை முதலானவைகளோடு சேர்ந்து செய்யுளாக (poetry) வந்து விட்டால் மனப்பாடம் செய்து மனஸில் மறக்காமல் பதித்துக் கொள்ளலாம். இதனால்தான், எந்த சாஸ்திரத்தையும் சுலோகங்களாகச் செய்து உருப்போட வைத்தார்கள். அச்சுப் புஸ்தகங்கள் வருகிற வரையில் மகா பண்டிதர்களாக இருந்த பலர், ஒரு ஏட்டுச்சுவடிகூட இல்லாமல், ஞாபக சக்தியிலிருந்தே சகல சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு சொல்லி வந்தார்கள். இப்போது புஸ்தகம் என்று ஒன்று இருப்பதால், ‘பார்த்துக் கொள்வதற்குத்தான் (for ready reference) புஸ்தகம் இருக்கிறதே’ என்று எவரும் எதையும், இப்படி மனசுக்குள் ஆழமாக வாங்கிக் கொள்ளாத நிலைமையையே பார்க்கிறோம். இன்று வெளியே லைப்ரரிகள் அதிகம். அக்காலத்திலோ எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்பப் பேர் தாங்களே ‘வாக்கிங் லைப்ரரி’களாக (நடமாடும் வாசக சாலைகளாக) இருந்து வந்தார்கள். காரணம் நெட்டுருப் பழக்கம்தான். இப்படி நெட்டுருப் பண்ணுவதாலேயே புத்திக்கு ஒரு பலம் ஐகாக்ரியம் ( concentration) ஒழுக்கம் (mental discipline) இவையும் மாணாக்கருக்கு உண்டாயிற்று. நிறைய நேரம் இதே காரியமாக உட்கார்ந்தால் தானே, ஒரு விஷயம் மனப்பாடம் ஆகும்? ஆதலால் மாணாக்கர்களின் புத்தியை கன்னாபின்னா என்று பல விஷயங்களில் போகாமல் கட்டிப்போட்டுப படிப்பிலேயே வைத்திருப்பதற்கு, இப்படி மனப்பாடம் பண்ணுவது ரொம்ப சகாயம் செய்தது. இதற்கு வசதியாக சகல சாஸ்திரங்களையும் ஸ்யன்ஸ்களையும் பத்யமாக (poetry) எழுதி வைத்தார்கள். கத்யம், பத்யம் என்று இரண்டு – கத்யம் ‘ப்ரோஸ்’; பத்யம் – ‘பொயட்ரி’.

சுலோக ரூபத்தில் வெகு அழகாக ‘அமர கோச’த்தைத் எழுதினான் அமரசிம்மன். அதிலே ஹிந்துமத தெயவங்களின் பெயர்கள் வருகிறபோது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு என்னென்ன முக்கியமான பெயர்கள் உண்டோ அத்தனையையும், கொஞ்சம்கூட மதபேத புத்தியில்லாமல், அடுக்கிக் கொண்டு போவான். அதைக் கேட்டாலே, அகராதியாகத் தோன்றாது; அர்ச்சனை போல – நாமாவளி போல – தோன்றும். உதாரணத்திற்கு இதோ, ‘சம்பு’ என்ற வார்த்தைக்கு பிரதிபதங்களாக, ‘அமரம்’ சொல்வதைக் கேளுங்கள்;

சம்பு: ஈச: பசுபதி : சிவ: சூலீ மஹேஸ்வர: |

ஈசுவர: சர்வ ஈசான: சங்கர: சந்த்ரசேகர: ||

பூதேச: கண்டபரசு: கிரீசோ கிரிசோ ம்ருட: |

ம்ருத்யுஞ்ஜய: க்ருத்திவாஸா: பினாகீ ப்ரமதாதிப: ||

அமரசிம்மன் பகவந் நாமாக்களை ரொம்பவும் ஆசையோடு சொல்லிக்கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. ஆரம்ப மாணவர்களும் நினைவு வைத்துக் கொள்கிற மாதிரி சுலபமாக லலிதமாகப் பதங்களைப் போட்டிருக்கிறான்.

‘இந்திரா’ என்ற வார்த்தை வந்தவுடன் இப்படியே மகாலக்ஷ்மியைப் பற்றிப் பொழிகிறான்; கேட்கவே லக்ஷ்மிகரமாக இருக்கும்.
இந்திரா லோகமாதா மா க்ஷீரோததனயா ரமா

பார்கவீ லோகஜனனீ க்ஷீரஸாகரகன்யகா

லக்ஷ்மீ: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீ: ஹரிப்ரியா
இப்படிப் போகிறது. டிக்ஷனரி மாதிரி இல்லை; ஸ்தோத்திரமாக இருக்கிறது!

இப்படிப் பக்ஷபாதமில்லாமல் அர்த்தம் சொன்ன அமர சிம்மனுக்கும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பக்ஷபாதம் வந்ததுதான் வேடிக்கை. ‘பௌத்த மதம்’ என்று வந்தால் மட்டும் கொஞ்சம் மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குப் போகவில்லை. நியாயமாகப் பார்த்தால் பௌத்தத்தை விட ஹிந்து மதத்திடம்தான் அவனுக்கு விரோதம் அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளைப்பற்றிச் சொல்லாமலிருப்பது, ஹிம்ஸை இருப்பதால் யக்ஞம் கூடச் செய்யக்கூடாது என்பது ஆகிய கொள்கைகளில் ஜைனம், பௌத்தம் இரண்டுமே வைதிகத்துக்கு விரோதமானவை. அவற்றுக்குள் இம்மாதிரி ஒற்றுமை அம்சங்கள் நிறைய இருக்கின்றன.

பொதுவாக அடுத்த ஊரில் அல்லது அடுத்த தெருவில் நம் பரம விரோதியிருக்கிறான் என்றால்கூட அவனிடம் அதிகப் போட்டியிராது; அதிக வயிற்றெரிச்சல் இராது; ஆனால் பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டில் நமக்குக் கிட்டத்தில் இருக்கிறானே, இவனுக்கு நம்மிடத்தில் அத்தனை விரோதம் இல்லாவிட்டால்கூட, இவனைப் பார்த்துத்தான் நமக்கு அசூயை, ஆத்திரம் ஜாஸ்தியாக இருக்கும். இவனை எப்படி மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருப்போம். இதே மாதிரி தன் மதத்துக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிற வைதிக மதத்தைவிட, அதற்கு ரொம்ப ஒற்றுமை உள்ள பௌத்தத்தை மட்டம் தட்டுவதிலேயே அமரசிம்மனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தாற்போலிருக்கிறது. அமரசிம்மன் தன் நிகண்டுவில் ஹிந்து மத வார்த்தைகளுக்கு நியாயமாக அர்த்தம் பண்ணிவிட்டு, புத்த மத வார்த்தைகள் என்று வருகிறபோது என்ன பண்ணினான்?

புத்தரைக் குறிப்பிடும் வார்த்தை வரிசையாகச் சொல்ல நேர்ந்தபோது, அவருக்கென்றே பிரசித்தமாக இருக்கிற பெயர்களை – “ததாகதர்”; (லக்ஷியத்திலேயே செல்கிறவர்) போன்ற பெயர்களை அமரசிம்மன் சொல்லவேயில்லை. பொதுவான பெயர்கள் சிலவற்றை மட்டும், “இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியிருக்கட்டும்” என்கிற மாதிரி சொல்லிவிட்டான். அதோடு நிற்கவில்லை, ‘ததாகதர் சாக்யமுனி’ முதலான பெயர்களை எல்லாம் ஜீனருடையதாக (மகாவீரருடையதாக) ஆக்குகிறான்! புத்தருடைய ‘பாடி-கார்ட்’ ஆக (மெய்க்காவலராக) ஸுகதர் என்று இருந்தார். அவர் பெயரைக்கூடத் தன் மதாசாரியரான ஜினருடைய பெயர்களில் ஒன்றாகவே கொடுக்கிறான்.

ஆனால், ஹிந்து மதத்திடம் இப்படியெல்லாம் மனக்கோணல் (prejudice) எதுவும் காட்டவில்லை. ஹிந்துக்களுக்குள்ளேயே வைஷ்ணவர்கள், சைவர்களுக்கிடையில் இருக்கக் கூடிய பரஸ்பர ‘ப்ரெஜுடிஸ்’ கூட இவனுக்கு இல்லை. ஈஸ்வரன் பெயர்களைச் சொல்கிறமாதிரியே மகாவிஷ்ணுவின் நாமாக்களைக் கொடுக்கிறான். அதனால்தான் சைவ, வைஷ்ணவ பேதமில்லாமல் எல்லா மாணவர்களும் ‘அமர’த்தை நெட்டுருப்போடும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது.

இப்படி எந்த ஸ்வாமிக்கும் ஏற்றத்தாழ்வு சொல்லாத பரமதஸ்தனான அமரசிம்மன், தன்னுடைய கோசத்தில் வேறெந்த தெய்வத்துக்கும் “ஸ்வாமி” என்ற பெயரைத் தராமல் ஸுப்ரம்மண்யரையே “ஸ்வாமி” என்கிறான் என்றால், அதை நாமெல்லாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?

தேவஸேனாபதி: சூர: ஸ்வாமீ கஜமுகாநுஜ.
என்கிறது அமரகோசம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஐயப்பன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அருள் மின்னல்
Next