ஐயப்பன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பரமாத்மா ஒன்றே சிவனாகவும் நாராயணனாகவும் ரூபம் தரிக்கிறது. சிவனாக இருக்கும்போது ஞான மூர்த்தியாக இருக்கிறது. நாராயணனாக இருக்கும்போது லோக ஸம்ரக்ஷணம் செய்கிறது. இப்படிச் சொல்வதால் சிவனும் விஷ்ணுவும் முற்றிலும் வேறு வேறு என்றோ, அல்லது தொழிலை ஒட்டிக் கொஞ்சம் வேறுபட்டாற் போலிருக்கிற நிலையில் சிவனுக்குப் பரிபாலன சக்தி இல்லை என்றோ, விஷ்ணுவுக்கு ஞான சக்தி இல்லையென்றோ அர்த்தமில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் முக்கியமாகச் செய்கிற அநுக்கிரகத்தையே குறிப்பிட்டேன்.

ஆல விருக்ஷத்தின் கீழோ, பனிமலை உச்சி மீதோ சிவபெருமான் வீற்றிருக்கிறார். உடலெல்லாம் விபூதிப் பூச்சு. புலித்தோலை இடுப்பில் கட்டி, யானைத் தோலைப் போர்த்தியிருக்கிறார். தலையிலே ஜடாமுடி. அவரது ஸ்வரூபம், அலங்காரம், வாசஸ்தானம் எதைப் பார்த்தாலும் ஞானிகளுக்கு உரியதாக இருக்கிறது. அவர் கரத்திலேயே ஞான முத்திரை தாங்கியிருக்கிறார். ஆத்ம தியானத்தில் ஆழ்ந்திருக்கிற அவரது சந்நிதி ஒரே சாந்தமாக இருக்கிறது. பரம சத்தியத்தைப் போதிக்கிற பரமகுரு அவரே. அந்தப் பரம சத்தியமும் அவரன்றி வேறில்லை. இந்த உபதேசம் ஞானியின் தொழில்.

லோக ரக்ஷணம் என்பது ராஜாவின் கடமை. அதனால் தான் நாராயணனை ஸ்ரீ வைகுண்டத்தில் சக்கரவர்த்திபோல் தியானிக்கிறோம். பீதாம்பரம், கௌஸ்துபம், வனமாலை, கிரீட குண்டலங்கள் தரித்து, சாக்ஷாத் மகாலக்ஷ்மியை மார்பிலே வைத்துக்கொண்டு, ராஜாதிராஜனாக இருக்கிறார் ஸ்ரீ மகா விஷ்ணு.

ஆசார சீலராக ரிஷிகளைப் போல் ஈசுவரனுக்கு எப்போது பார்த்தாலும் ஸ்நானம் செய்வதில் பிரியம். அதனால் தான் வடதேசத்தில் ஈசுவரன் கோயில்களில் எல்லாம் சிவலிங்கத்தின் மேல் எப்போது பார்த்தாலும் ஜலம் கொட்டிக் கொண்டிருக்கும்படி “தாரா பாத்திர”த்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். சக்கரவர்த்தி போன்ற மகாவிஷ்ணுவுக்கோ அலங்காரத்தில் பிரியம் அதிகம். அவருக்குப் பட்டும் பொன்னும் புனைந்து மகிழ்கிறோம்.

அலங்காரப் ப்ரியோ விஷ்ணு :

அபிஷேகப்ரியோ சிவ:

என்றே சொல்வார்கள்.

ஈசுவரனின் அழகு மனத்தை அடங்கச் செய்கிற சாந்த ஸ்வபாவம் வாய்ந்தது. ஸ்ரீ மந் நாராயணனின் சௌந்தரியமோ மனத்தை மோகிக்கச் செய்து ஆனந்தக் கூத்தாடச் செய்வது. விஷ்ணுவின் திவ்விய ரூபத்திலிருந்து வைத்த கண்ணை வாங்க முடியாமல் எவரும் சொக்கிக் கிடக்க வேண்டியதாகிறது. ஸ்ரீ ராமனாகவும், கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்த போதும், இந்த ஜகன்மோகன சௌந்தரியம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது. இப்படிப்பட்டவர் மோஹினி என்றே ஓர் உருவம் கொள்ளும்போது எத்தனை அழகாக இருந்து, எல்லோர் உள்ளங்களையும் மோஹிக்க வைத்துக் கொள்ளை கொண்டிருப்பார்? பரம ஞானியாக, தபோமயமாக ஜ்வலித்துக் கொண்டிருந்த பரமேசுவரனின் மனத்தைக்கூட மகாவிஷ்ணுவின் மோகினி ரூபம் மயக்கிவிட்டது என்று புராணங்கள் சொல்கின்றன. மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும் பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு மகா தேஜஸ் – ஒரு பெரும் ஜோதி – பிறந்தது. இந்தத் தேஜஸே ஐயப்பனாக உருக் கொண்டது.

ஹரிஹர புத்திரன் என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்.

ஐயன் என்பது ‘ஆர்ய’ என்பதின் திரிபு. ‘ஆர்ய’ என்றால் ‘மதிப்புக்குரிய’ என்று பொருள். சாக்ஷாத் பரமேசுவரனுக்கும் நாராயணமூர்த்திக்கும் ஜனித்த குழந்தையைவிட மதிப்புக்குகந்தவர் எவருண்டு? ஞானமும் தபசும் கலந்த சிவனின் பிரம்ம அம்சம், கிருபையும் சௌந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் க்ஷத்ர அம்சம் இரண்டுமே நாம் உய்வு பெற அத்தியாவசியமாகும். ஹரிஹர புத்ரனாகிய ஐயப்பனிடம் இவையெல்லாமே ஒன்று சேர்ந்திருப்பதாகக் கொள்ளலாம். இதனால்தான் போலிக்கிறது, சிவபெருமானின் மற்ற இருபாலர்களைப் பிள்ளையார் என்றும் குமரன் என்றும் குழந்தைகளைக் குறிக்கிற சொல்லால் குறிப்பிட்டாலும், அவரது மூன்றாவது புத்திரான சாஸ்தாவை மட்டும் மதிப்புக்குரியவராக – ஆர்யராக – ஐயனாராகக் குறிப்பிடுகிறோம். ‘ஆர்ய’ என்பதுதான் ‘அய்யர்’ என்றாயிற்று. முதலி – முதலியார், செட்டி – செட்டியார் மாதிரி அய்யனுக்கு மரியாதைப் பதம் அய்யனார். இதிலே ஒரு வேடிக்கை. பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக – அய்யனாராக இருக்கிறார்! கொஞ்சம்கூட இப்போது பேசப்படுகிற இன வித்யாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.

சபரிமலையில் ஓரிடத்தை ‘ஆரியங்காவு’ என்று ஆரியனுடைய காடாகவே சொல்கிறார்கள். தேசத்தில் எத்தனையோ ஸ்வாமிகளுக்குக் கோயில் இருந்தாலும் சாஸ்தாவைத் தவிர எவருக்குமே அய்யர், ஆரியன் என்ற பெயர்கள் இல்லை.

சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன். தமிழ் நாட்டில் இருக்கப்பட்ட அநேக சாத்தனூர்களில் முக்கியமான தெய்வம் ஐயப்பன்தான்.

தமிழ் நாட்டில் கிராமத்துக்குக் கிராமம் ஐயனார் கோயில் உண்டு. கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்பன் வழிபாடு வெகுவாகப் பரவி வளர்ந்திருக்கிறது.

அவர் நம்மைக் காவல் புரிகிற தெய்வம். காற்று கருப்பு முதலான பலவித தீயசக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறவர். இதெல்லாவற்றுக்கும் மேலாக நாராயணனிடமிருந்து நம் வாழ்க்கையையே பரிபாலிக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறார். ஈசுவரனிடமிருந்து நமக்கு விமோசனம் தருகிற ஞானத்தை அளிக்கும் சக்தியும் பெற்றிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் ஐயப்பன் ரொம்ப ரொம்பக் கியாதி பெற்று வருகிறார். சுதந்திர சாஸனம் (Constitution) அளித்திருக்கிற பேச்சுத் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பக்கத்தில் நாஸ்திகப் பிரசாரம் தடபுடலாக நடக்கிறபோதே, மறுபக்கத்தில் அது எடுபடாத அளவுக்கு ஐயப்ப பக்தி நாளுக்கு நாள் அமோகமாக விருத்தியாக்கிக் கொண்டிருக்கிறது.

கேரளத்தில் எட்டாக் கையில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் நாடு, மற்ற ராஜ்யங்கள் மீதெல்லாம் கூடத் தம் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்!

இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.

அவரது கிருபையை நாடி, அதற்குப் பாத்திரர்களாக வாழ்ந்தோமானால் நாமும், நாடும், உலகமும் சிறப்புற்று விளங்குவது நிச்சயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஸ்ரீராம நவமி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே
Next