அத்வைதமும் அணு விஞ்ஞானமும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு, துன்பம் உண்டு, பயம் உண்டு, துவேஷம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது துவேஷம் இவை உண்டாக முடியும். இன்னொன்றே இல்லை – காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா – என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும், கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது? தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பாகவும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா! எல்லாம் நாமே என்ற உணர்வு வந்து விட்டால், எப்போதும் ஸ்வபாவமான ஆனந்தம்தான் இருக்கும். அதுதான் மோக்ஷ நிலை. சரீரம் நசித்துப் செத்துப்போன பின்தான் மோக்ஷம் என்று எங்கேயோ ஓரிடத்துக்குப் போக வேண்டும் என்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத ஞானம் ஸித்தித்தால் இங்கேயே இப்பொழுதே மோக்ஷத்தில் இருப்போம்.

‘அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும்? இத்தனை மாறுபாடுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே?’ என்று தோன்றலாம். ஒன்று, நாம் பிரத்தியக்ஷமாகப் காண்பது சத்தியமாக இருக்கவேண்டும்; அல்லது வேதாந்தம் சொல்லுவதும், ஞானிகளின் அநுபவமான அத்வைதம் சத்தியமாக இருக்க வேண்டும்.

சத்தியமாக இருப்பது எதுவோ அது மாறாத சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் தர வேண்டும். நம் பிரத்யக்ஷ வாழ்க்கையில் இந்தச் சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் இல்லையே! வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன? அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்போதும் சாந்தியாக, எப்போதும் திருப்தியாக, எப்போதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற அத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா? சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்க்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின? சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான்? அப்படியே இந்த லோகமெல்லாமும் ஒரு சொப்பனம் தான். மாயை நீங்கி ஞான நிலையில் விழித்துக் கொண்டால், அப்போது ஒரே பரமாத்மா மட்டுமே எஞ்சி நிற்பதை அநுபவிக்க முடியும்.

காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு முலப்பொருள்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) – இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.

உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.

சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்ஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஸ்வாமி எதற்கு? அத்வைதம் அமைதிக்கே.
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அழுக்கு நீங்க வழி
Next