ஸ்வாமி எதற்கு? அத்வைத அமைதிக்கே! : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

மிகவும் கிரமமாக நடந்துவரும் இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறவனாக ஒரு கடவுள் இருந்தேயாக வேண்டும் என்பது ஆஸ்திகர்களின் கட்சி. “ஒரு காரியம் செய்தால் அதற்கு ஒரு விளைவு இருந்தே தீருகிறது. இவ்வாறு நம் காரியங்களைப் பார்த்து அதற்குப் பலனைத் தருபவர் அந்த ஆண்டவனே!” என்று ஆஸ்திகர் சொல்கிறார்கள். ‘இருந்தால் இருக்கட்டுமே, அவனிடம் எதற்காக பக்தி செலுத்த வேண்டும்’ என்று கேட்கலாம். “நம்மைக் கேட்டுக் கொண்டா அவன் நம்மைப் படைத்தான்? அவன் நம்மைப் படைத்ததால் நமக்குக் கஷ்டங்கள்தானே இருக்கிறது! அவனிடம் பக்தி எதற்கு?” என்று ஆட்சேபிக்கலாம்.

“கஷ்டங்களைத் தீர்க்கவும் அவனால் முடியும். அதற்காக பக்தி செலுத்துங்கள்” என்று ஆஸ்திகர் சொன்னால் மற்றவர்கள் அதையும் ஆட்சேபிக்கலாம். “நாம் பிரார்த்தனை செய்தால்தான் அவன் கஷ்டத்தைப் போக்குவான் என்றால், உங்கள் ஸ்வாமி நீங்கள் சொல்வதுபோல் கிருபா சமுத்திரமாக இல்லை என்றே அர்த்தம்’ எனலாம். ‘இன்ன காரியத்துக்கு இன்ன விளைவு என்று அவன்தான் பலனைத் தருகிறான் என்கிறீர்கள். அப்படியானால் நம் பாபத்துக்காக அவனே தண்டனையாகத் கஷ்டத்தைத் தரும்போது, அதை மாற்றும்படி நாம் பிரார்த்தனை செய்யலாமா?’ என்றும் கேட்கலாம்.

மகானாகிய நீலகண்ட தீக்ஷிதர் தம்முடைய ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தில் இதற்குப் பதில் சொல்லுகிறார். ‘அம்மா மீனாக்ஷி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்” என்கிறார்.

கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. கண்ட இடத்தில் போய்ச் சொல்லிக் கொள்ளாமல்—கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றில்லாமல்—பகவானிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொள்ளலாம். அவன் கிருபா சமுத்திரமாக இருந்து நாம் கேட்காமலே கஷ்ட நிவருத்தி தந்தாலும் சரி, அல்லது பலனைத் தரும் பலதாதா என்கிற முறையில் நம் பாவத்துக்குத் தண்டித்தே தீருவான் என்றாலும் சரி, அல்லது கஷ்டத்தை மாற்றாமலே அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தந்தாலும் சரி, அவனிடம் முறையிட்டுக் கொள்வதே நமக்கு ஒரளவு சாந்தி.

ஆனால் வாஸ்தவத்தில் நான் ஈசுவர பக்தி என்று சொல்வது நம் கஷ்ட நிவிருத்திக்காகப் பிரார்த்திப்பதை அல்ல. அல்லது நமக்கு சந்தோஷ வாழ்வைத் தந்தவனுக்கு நன்றியாகப் பக்தி செலுத்த வேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் அப்படிச் சொன்னால், “மரம் வைத்தவன் ஜலம் ஊற்றத்தான் வேண்டும். நம்மைப் படைத்தவன் நமக்கு நல்வாழ்வு தரத்தான் வேண்டும்! அது அவன் கடமை. இதற்கு என்ன நன்றி?” என்று யாராவது ஆட்சேபிக்கலாம்.

ஆகவே இதற்கெல்லாம் நான் பக்தியைச் சொல்லவில்லை. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், இப்போது கஷ்டம், சந்தோஷம் என்ற இரண்டு வார்த்தைகளைச் சொன்னேனே, இந்த இரண்டுமே மனஸை ஆட்டுபவைதாம். மனம் ஆடாமல் இருப்பதுதான் உண்மை ஆனந்தம். மற்ற சந்தோஷங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல. தூங்கும்போதும், ஜடமாகப் பிரமை பிடித்திருந்தாலும் கஷ்டம்—சுகம் இல்லைதான். ஆனால் அப்போது ஆனந்தமாக, சாந்தமாக இருக்கிறோம் என்றும் தெரிவதில்லை. மனஸில் அலை எழாமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அமைதியாக இருக்கிறோம் என்ற பூரண ஞானத்துடன் அப்படி இருக்க வேண்டும். அந்த நிலை வந்துவிட்டால் நமக்கு ஈடு இணை இல்லை. மனசு என்று ஒன்று இருந்து அதிலே எண்ணங்கள் தோன்றுகிறபடியால்தான் “பரமாத்மாவுக்கு வேறாக ஜீவாத்மா என்ற நாம் இருக்கிறோம்” என்ற எண்ணமே உண்டாக முடிகிறது. மனசு நின்று போய்விட்டால் இந்த பேதபுத்தி போய்விடும். பரமாத்மாவுக்கு வேறில்லாத அத்வைதம் என்கிற பெரி..ய்ய, நிறைந்த நிலையில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்து விடுவோம். சாந்தி, அமைதி வேண்டும் என்றே நாம் மனசை நிறுத்தினாலும், அதன் பலன் அகண்டாகாரமான அத்வைத அநுபவமே ஆகிறது. அந்த நிலை வருவதற்கு அந்நிலையில் உள்ள ஒன்றைத் தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்த நினைவு நம்மை அதுபோலவே உருவாக்கிவிடுகிறது. இதை விஞ்ஞான ரீதியில்கூட ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ரீதியில் அமைதிக்கு, ஆனந்தத்துக்கு ஒரு லட்சிய உதாரணமாக (ideal) இருப்பது ஸ்வாமிதான்.

பிரபஞ்சத்தை நடத்தி இத்தனை காரியங்களை செய்தும், கவனித்தும் பலனளித்தும் வந்தாலும் ஸ்வாமி இதனால் எல்லாம் மனம் சலிக்காமல் சாந்தமாக இருக்கிறார். ஈச்வரனை ‘ஸ்தாணு’ என்பார்கள். ‘கட்டை மரம்’, ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். உயிரோட்டம் உள்ள மரம்தான்; ஆனாலும் உணர்வில்லாத மாதிரி இருக்கிறது. இந்தக் கட்டையை சுற்றிக் கொண்டிருக்கும் கொடி, அம்பாள். அந்தக் கொடிக்கு ‘அபர்ணா’ என்று ஒரு பெயர். அதாவது, ‘இலை இல்லாதது’ என்று அர்த்தம். உயிரோட்டத்துடன், ஆனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாத பராசக்தி என்ற கொடியானது உயிரோட்டம் இருந்தாலும் உணர்ச்சி இல்லாதது போலிருக்கும் பரம்பொருளைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஸ்வாமீ என்று நினைக்கும்போதே ஞானம் சாந்தம் என்ற இரண்டு பாவமும் நம் மனசிலும் வருகின்றன. எனவே, ஸ்வாமியைத் தியானம் செய்யச் செய்ய இந்த ஞானம், சாந்தம் இந்த இரண்டும் நமக்கு நன்றாக ஸித்திக்கின்றன. இதற்கே ஸ்வாமி வேண்டும். அவரது ஸ்மரணையான பக்தி வேண்டும் என்கிறேன்.

நாம் கஷ்ட நிவிருத்திக்காக ஸ்வாமியிடம் போனாலும் சரி, அல்லது சௌக்கியமாக இருக்கிறோம் என்று நன்றி காட்டப்போனாலும் சரி, அவரை நினைக்கிற பழக்கம் வலுக்க வலுக்கத் தானாகவே இந்தக் கஷ்டம்—சௌக்கியம் ஆகியவற்றைப் பற்றியே நினைப்பதிலிருந்து நம் மனம் விடுபடும். அவர் எப்படி நடத்துகிறாரோ அப்படி நடத்திவைக்கட்டும் என்று பாரத்தை அவரிடமே தள்ளிவிட்டு விச்ராந்தியாக இருக்கிற மனோபாவம் உண்டாகும். ஏதோ ஓர் ஆனந்தமும் சாந்தமும் மனசில் படரத் தொடங்கும். இதுவே நம்மை அமர நிலையில் சேர்ப்பது, ஒயாமல் குறையுள்ள நாம் மாறாத நிறைவாக நிறைவதற்கு வழி செய்வது.

ஆத்ம விசாரம், தியானம், யோகம் இதுகளால்தான் நம் மனசைப் பட்ட கட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு நிறைந்த நிறைவாக இருக்க முடியும் என்பது உண்மை. பின்னே நான் இந்த சாதனைகளைச் சொல்லாமல் பக்தியைச் சொல்கிறேனே என்று கேட்கலாம். ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் ஒரு காரியமும் ஒரு சிந்தனையும் இல்லாமல்—அப்படிப்பட்ட நிலையில் பக்தி என்கிற மனசின் காரியம்கூட இல்லைதான்—இருக்கிற நிலையைத்தான் மோக்ஷம் என்றார். நான் பக்தி பண்ணுங்கள் என்று சொல்கிறேனே எனத் தோன்றலாம். ஆசார்யாள்கூட ஓர் இடத்தில் ‘மோக்ஷத்துக்கான உபாயங்களில் பக்தியே பெரிதானது’ என்கிறாரே, அது எனக்கு சாதகமா என்று பார்த்தால், அடுத்த வரியிலேயே அவர் பக்தி என்பதற்குப் புது மாதிரி லக்ஷணம் (definition) கொடுத்து விடுகிறார். அதாவது, “தனது ஆத்மாவின் உண்மை நிலை என்ன என்று ஆராய்ந்து அதிலேயே ஆழ்ந்து கிடப்பதுதான் பக்தி” என்கிறார். அவர் சொல்கிற இந்தப் பக்தி ஆத்ம விசாரமாக, தியானமாக, யோகமாகத்தான் இருக்கிறதே ஒழிய, பொதுவாக நாம் சொல்கிற அர்த்தத்தில், சற்று முன்னே நான் சொன்ன அர்த்தத்தில், அதாவது நமக்குப் புறம்பாக ஒரு ஸ்வாமி இருப்பதாகவும் அவரிடம் நாம் செலுத்துகிற அன்பே பக்தி என்றும் சொல்கிற அர்த்தத்தில், பக்தியாக இல்லை.

சரி, இந்த இடத்தில் ஆசாரியாள் பக்தியை இப்படி வர்ணித்து (define) இருந்தாலும், அவரே தம் மடங்களில் எல்லாம் விஸ்தாரமாக சந்திரமௌலீசுவர பூஜையை வைத்திருக்கிறார். அரூபமான ஆத்ம தத்துவத்தை முடிவான லக்ஷியமாக அவர் சொல்லியிருந்தாலும், அவரே உருவத்தோடு இருக்கப்பட்ட தெய்வங்களின் உபாஸனையையும் நிலைப்படுத்தி ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று விருது பெற்றிருக்கிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய் அங்கங்கே உள்ள மூர்த்திகளின் மேல் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். இதை எல்லாம் பார்த்தால் லோகரீதியில் நாம் சொல்கிற பக்தியும் ஆசாரியர்கள் விசேஷமாக அங்கீகரித்த விஷயமே என்று தெரிகிறது.

சாதாரணமாக ஞானம் ரொம்ப உசத்தி; ஆத்ம விசாரம், தியானம், யோகம் இதெல்லாம் உசத்தி; பக்தி, பூஜை, க்ஷேத்ராடனம் எல்லாம் அதைவிடத் தாழ்த்தி; இந்த பக்தியை விடவும்கூடப் பல தினுசான ஆசாரங்கள், அநுஷ்டானங்கள், வைதிக கர்மங்கள் எல்லாம் இன்னமும் தாழ்த்தி என்று ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்தக் காலத்தில் படித்தவர்களிடம் இந்த அபிப்பிராயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. கர்மாக்கள் எல்லாம் மூடநம்பிக்கை (superstition), பக்தி சமாசாரமெல்லாம் வெறும் உணர்ச்சி (sentimental), தியானம் (meditation), யோகம் (Yoga), ஆத்ம விசாரம் (Self-inquiry) இதுகள்தான் ஆத்ம சம்பந்தமானவை (spiritual) என்கிற பேச்சு இப்போது ஜாஸ்தி.

ஆனால், ஆத்ம ஸ்வரூபத்திலேயே கரைந்து ஒரு காரியமும், ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கிற அத்வைதத்தை நிலைநாட்டிய ஆசாரியாள் ஞான மார்க்கத்தைச் சொன்னவர் தான் என்றாலும்கூட, அவர் மனசை வைத்துக் கொண்டு செய்கிற பக்தி, காரிய ரூபமான வைதிக கர்மாநுஷ்டானங்கள் எல்லாவற்றையுமே அங்கீகரித்திருக்கிறார். ஏன் இப்படி செய்திருக்கிறார் என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் மாட்டிக் கொண்டிருக்கிற நம் இத்தனை பேருக்கும் சித்தம் ஓயாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. க்ஷண காலம்கூட அது நிற்க மாட்டேன் என்கிறது. நேராக, இதோ இப்பொழுதே மனதை நிறுத்திவிட்டு, ஒரு காரியமும் இல்லை, ஒரு எண்ணமும் இல்லை என்று பண்ணிக்கொண்டு விடலாம் என்று யத்தனம் செய்து பார்த்தாலும் நடக்க மாட்டேன் என்கிறது. எண்ணங்கள் பாட்டுக்கு நாலா திசையும் ஒடிக் கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய பாசங்கள், துவேஷங்கள், துக்கங்கள், பயங்கள், ஸந்தோஷங்கள் எல்லாம் மாறிமாறி வந்து மோதி அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவற்றையொட்டி இந்தக் காரியத்தைப் பண்ண வேண்டும், அந்தக் காரியத்தைப் பண்ணவேண்டும் என்கிற திட்டங்களும் ஒயாமல் போட்டப்படிதான் இருக்கிறோம். ஆகக்கூடி, அப்படியே சித்தத்தை நிறுத்திவிட்டு ஆத்மாவில் முழுகிப்போ என்று சொல்லிவிடுவதால் மட்டும் அந்த மாதிரி ஆகிற நிலையை வாஸ்தவத்தில் சாதித்துக் கொள்ள முடியவில்லை.

இந்த மாதிரி சித்தத்தை நிறுத்த முடியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய பூர்வ கர்மாதான். பல தினுசான தப்புத் தண்டாக்கள், பாபங்கள், ஜன்ம ஜன்மமாகப் பண்ணிவிட்டோம். அந்த பாபங்கள் தீருகிற மட்டும் நமக்கு ஆத்மாநுபவம் என்கிற பேரானந்தம் ஸித்திக்காது. கர்மாக்களுக்கெல்லாம் பலன் தருகிற பலதாதாவான ஈசுவரன் நம் பாபத்துக்கெல்லாம் தண்டனை கொடுத்துத் தீர்த்து வைத்த பிறகுதான் நமக்கு அந்த சாசுவதமான பேரின்பம் கிடைக்க முடியும். பாபத்தை எப்படித் தீர்த்துக்கொள்வது என்றால் புண்ணியத்தால்தான் தீர்த்துக் கொள்ளமுடியும். “ஒரு ஜென்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலாவது தீர்த்துக் கொள்ளட்டும்” என்கிற மஹா கருணையால்தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்தப் புது ஜன்மாவில் பழைய பாபங்களுக்கு நிவிருத்தியாகப் புதிய புண்ணியங்களைப் பண்ணாமலிருப்பதோடு, இப்போதும் வேறு புதிசு புதிசாகப் பல பாபங்களைச் செய்து மூட்டையைப் பெரிசாக்கிக் கொள்கிறோம். இப்படிப் பாபங்களைப் பெருக்கிக் கொள்ளாமல், அவற்றைக் கரைத்துக் கொள்வதற்காகத்தான் ஆசாரியாள் கர்மத்தையும், பக்தியையும் ஞானத்துக்கு அங்கமாக வைத்தார்.

பாபங்கள் இரண்டு தினுசு, ஒன்று சரீரத்தால் செய்த பாப கர்மா, இன்னொன்று மனசினால் செய்த பாப சிந்தனை. பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்யகர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

புண்ய கர்மா என்ன? அவரவருக்கும் வேதம் விதித்த கர்மம்தான். லோக வாழ்க்கை சீராக நடக்க வேண்டும்; அறிவினால் நடக்கிற கார்யம், ராஜாங்க ரீதியில் நடக்கிற கார்யம், வியாபார ரீதியில் நடக்கிற கார்யம், சரீர உழைப்பினால் நடக்கிற கார்யம் எல்லாம் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல் அநுசரணையாக நடந்தால்தான் சமூக வாழ்வு சீராக இருக்கும் என்பதால் வேததர்மம் சமுதாயத்தை இப்படி நாலு கார்யங்களுக்காகவும் பிரித்து, ஒவ்வொருத்தருடைய தொழிலையும் ஒட்டி, அவரவருக்கான நியதிகளை, ஆசார அநுஷ்டானங்களை வகுத்துத் தந்திருக்கிறது. இவற்றைத் துளிக்கூட மீறாமல் அவரவரும் தொழில் செய்தால் அதுவே புண்ணிய கர்மாவாகிறது. கர்மா எப்படிப் பாபமாகிறது என்றால் ‘நமக்காக’ என்ற ஆசை வாய்ப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தை பிடிக்கப் போகிற போதுதான் இந்த லட்சியப் பூர்த்திக்காக எந்தத் தப்பையும் செய்யத் துணிகிறோம். அதனால் சித்தத்தில் துவேஷம், துக்கம், பயம் இம்மாதிரி அழுக்குகளை ஏற்றிக்கொண்டு விடுகிறோம். இப்படி நாமாக ஒரு லட்சியத்துக்கு ஆசைப்படாமல், “வேதம் சொல்கிறபடி” என்று கர்மா செய்ய ஆரம்பித்து விட்டால் பேராசையின் அரிப்பு இல்லை; போட்டா போட்டி இல்லை. அதனால் வருகிற துவேஷம், துக்கம், இத்யாதி இல்லை. சமுதாயம் முழுக்க ஸர்வ ஜனங்களும், அதற்கும் மேலே ஸமஸ்தப் பிரபஞ்சமுமே நன்றாக இருக்கத்தான் வேதம் இப்படி கர்மாக்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, சொந்த லாபத்தைப் பெரிதாக நினைக்காமல், அதாவது பலனைக் கருதாமல், லோக க்ஷேமத்தையே நினைத்து இப்படிக் கர்மாக்களைப் பண்ணுகிறபோது அவை எல்லாம் புண்ணிய கர்மங்களாகி நமக்கு உள்ளூற நன்மை செய்கின்றன. வெளியில் லோக வாழ்க்கையில் அவை சமூகம் முழுவதற்கும் நன்மை உண்டாக்குவதோடு, உள்ளே நம்முடைய பாப கர்மங்களையும் கழுவித் தீர்க்கின்றன. ‘தனக்கு’ என்ற பெரிய அரிப்பு இல்லாமல், எனவே அசூயை வஞ்சனை எதுவுமே இல்லாமல் காரியம் செய்கிற போதுதான் அந்தக் காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது. சித்தம் காரியத்திலேயே நன்றாக ஈடுபடுவதினால் அதற்குப் பாப எண்ணங்களை நினைக்கவே இடம் குறைந்து போகிறது. அதாவது புண்ய கர்மமே சித்தம் சுத்தமாவதற்குப் படிப்படியாக உதவுகிறது.

காரியமும் எண்ணமும் நெருங்கின சம்பந்தமுள்ளவை. காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில்கூட “வேலையில்லாத சித்தம் சைத்தானின் பட்டடை” என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன் அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! ஆரம்பத்தில் ‘கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும்’ என்பதால்தான் ஆசாரியாள் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.

பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி. நமக்கு அந்தப் பரமாத்மாவே ஆதாரமாகையால் அதனிடம் மனசைத் திருப்பப் பழக்கினால் சுலபமாக அது அங்கே ஈடுபட்டு நிற்கிறது. பாப சிந்தனையே இல்லாமல் போய், ஏற்கனவே ஜன்மாந்தரங்களாக ஏற்றிக் கொண்டிருந்த பாப வாசனைகளும் பகவத் ஸம்ரணத்தினால் கரைந்து கரைந்து மனசானது பரமாத்மா ஒன்றையே கெட்டியாகப் பிடித்துக் கொள்கிற ஐகாக்ரிய நிலை லபிக்கிறது. மனசு அடியோடு இல்லாமல் போவதற்கு முந்தியபடி இப்படி ஒன்றே ஒன்றை மட்டும் மனசால் பிடித்துக் கொள்வதுதான். ஆயிரம் கோடி வழிகளில் பாய்ந்து கொண்டிருந்த மனசு கடைசியில் இப்படி ஒன்றையே பிடித்துக் கொண்டு, அப்புறம் அதிலேயே தோய்ந்து, கரைந்துபோய்விட்டால், முடிந்த முடிவில் சாசுவதப் பேரானந்தமான ஆத்மா ஒன்றுதான் நிற்கும்.

ஒன்றிலேயே மனசை நிறுத்துவது என்கிற தியான யோகத்துக்கு நம்மை ஏற்றிவிடுகிற படிக்கட்டாகத்தான் பகவத்பாதாள் கர்மம், பக்தி இவற்றை உபாயங்களாக வைத்தார்.

பாராயணம், பூஜை, க்ஷேத்ராடனம் இப்படி ஆரம்பிக்கிற பக்தி, மனசை மேலும் மேலும் பரமாத்மாவிடம் ஒன்றுபடுத்த, நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய பரம சாந்தமான நிஜ ஸ்வரூபத்தை அநுபவிக்கத் தொடங்குவோம். தூக்கம், மயக்கம், பிரமை மாதிரி இல்லாமல் நல்ல நினைப்போடு கூடவே (Conscious) மனசு ஆடாமல் அசையாமல் இருக்கற பேரின்ப நிலைக்கு இப்படியாகக் கிட்டே கிட்டே கொண்டு சேர்ப்பது பக்தி என்பதற்காகவே, எல்லோரும் பரமாத்மாவிடம் பக்தி செலுத்த வேண்டும் என்கிறேன்.

‘அத்வைதம்’ என்று சும்மா வாயால் சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்த நிலையிலே இருக்கிற மகத்தான, நிறைந்த சாந்தத்துக்கு ஒரு ரூபமாகவும் (Personification), லட்சிய உதாரணமாகவும் (ideal) இருக்கிற ஈசுவரன் என்கிறவனைப் பற்றிய நினைப்புதான் நம்மை அந்த நிலையில் அவ்வப்போது க்ஷண காலமாகவாவது தோய்த்து எடுக்கும். அத்வைத நிலை என்ற நமக்குப் புரிபடாத, நம்மால் பிரியத்துடன் ஒட்டிக் கொள்ள முடியாத ஒன்றைப் பற்றிச் சொல்வதைவிட, அந்த நிர்குண நிலையையே ஈசுவரன் என்று ஸகுணமாகப் பார்க்கிறதுதான் நமக்குப் பிடிப்பைத் தந்து நம்மை உயர்த்திவிடும். இப்படி உயர்த்திவிடவே ஸ்வாமி நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறார். அவரிடம் நமக்கு பக்தியும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. ஆக, சம்ஸாரத்தில் நமக்கு ஏற்படுகிற துக்கங்களின் நிவிருத்திக்காக என்றில்லாமல், நம்மை நாமே தெரிந்து கொண்டு, ஆத்ம சரீரத்தில் நிறைந்திருப்பதற்கு வழியாகவே ஈசுவர பக்தி வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அதுவேதான் இது!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
Next