வர்ண தர்மம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பழைய காலத்தில் செத்தை எரிமுட்டை எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டே அடுப்பு மூட்டுவார்கள். மழை நாளில் அடுப்பு பிடித்துக்கொள்ள ரொம்ப சிரமமாயிருக்கும். நாலு நெருப்புப் பொறி கிளம்பினால்கூடப் போதும், உடனே விசிறு, விசிறு என்று விசிறி அதைப் பற்ற வைத்து விடுவார்கள். அதுமாதிரி, இன்னமும் முழுக்க அணைந்து போகாமல், ஒரு சில பெரியவர்களிடமாவது இருக்கிற நாலு பொறி ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.

சரி, மதம் என்பது என்ன? ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் சொல்வதுதான் மதம். ஒரு நோயாளிக்கு இன்ன வியாதி வந்திருக்கிறது; அது இன்ன மருந்தைத் தந்தால் சொஸ்தமாகும் என்பது வைத்தியனுக்குத் தான் தெரியும். தங்களுக்கென்று ஒரு பொருளையும் தேடிக் கொள்ளாமல், பரமத் தியாகத்துடன் வாழ்ந்து லோக க்ஷேமத்தையே நினைத்த ரிஷிகள், தர்ம சாஸ்திரக்காரர்கள், இப்படித் தந்திருக்கிற மருந்துதான் நமது ஸநாதன தர்மம். மற்ற தேசங்களில் வேறு வைத்தியர்கள் வேறு மதங்களை மருந்தாகத் தந்திருக்கிறார்கள். நம் உடம்புக்கு மருந்து தருகிற டாக்டரிடம், ‘அந்த டாக்டர் அப்படி ட்ரீட்மென்ட் செய்கிறார், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே!’ என்றால், அவர் கேட்டுக் கொண்டிருப்பாரா? வைத்திய சாஸ்திரத்தில் பல தினுசுகள் உண்டு. ஒன்றில் கடும் பத்தியம் இருக்கும்; ஒன்று லகுவாக இருக்கும். ஒன்றில் மருந்து கசக்கும்; இன்னொன்றில் மருந்து தித்திக்கும். இதையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று சொல்லாமல், அவரவரும் எந்த வைத்திய முறையை மேற்கொள்கிறார்களோ அதையே விடாமல் பின்பற்றினால் எந்த முறையிலும் சொஸ்தம் அடையலாம்.

மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக்கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாசம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு – இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ‘ஸாமான்ய தர்மங்கள்’. அது தவிர ‘வர்ணம்’ என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.

இந்த விசேஷ தர்மங்களையும் சாமானியமாக்கியிருந்தால் அவற்றை எவருமே அநுஷ்டிக்காத நிலைதான் உண்டாகியிருக்கும். இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைப் பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம்? எல்லோருமே மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளும், தர்ம சாஸ்திரக்காரர்களும் மநுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்களும் விரதங்கள், நோன்பு நாட்கள், மூதாதையர் திதி ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.

எல்லா தர்மங்களையும் பொதுவாக வைத்த ஒவ்வொரு தேசத்தின் பழைய மதமும் அடியோடு விழுந்து விட்டிருக்கின்றன. மேற்கே கிரீஸில் இருந்த ஹெல்லெனிக் மதம் மத்திய ஆசியாவில் இருந்த ஹீப்ரு மதங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கிழக்கே கன்ஃபூஷியஸ் மதம், ஷீன்டோ மதம் எல்லாம் ஏதோ கொஞ்சம் கொஞ்சம்தான் இருக்கின்றன. இவற்றிடத்தில் வந்துள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் முதலியவற்றிலும் பொதுவாக ஒரே தர்மம்தான் உள்ளதே தவிர, அதோடுகூட தனித்தனி வர்ணங்களுக்கான விசேஷ தர்மம் என்கிற பாகுபாடு இல்லைதான். ஆனால் இந்த மதங்களில்கூட இப்போது அந்தந்த தேசத்து மக்களுக்கு நிறைவு போய்க்கொண்டுதான் இருக்கிறது. மத நம்பிக்கையற்றவர்கள் இந்த எல்லா தேசங்களிலும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று, இவர்கள் நாஸ்திகராகிறார்கள்; இல்லாவிட்டால், தங்கள் மதத்தில் திருப்திக்கொள்ளாத பலர் நம்முடைய யோகம், பக்திமார்க்கம், ஞான விசாரம் ஆகியவற்றிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேசங்களில் தற்போதுள்ள சரித்திரக்கால மதங்களை உள்ளபடி பின்பற்றிப் போகிறவர்கள் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கள் என்று சொல்லமுடியாமலிருக்கிறது. ‘நான் ஹிந்து மதப் பிரதிநிதி, மற்ற மதங்களைக் குறைவுபடுத்தி பேச வேண்டும்’ என்று நினைத்து இப்படிச் சொல்லவில்லை. தற்போதுள்ள வெவ்வேறு மதஸ்தர்களும் தங்கள் மதத்திலேயே இருந்து கொண்டு ஆத்மாபிவிருத்தி அடைய வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ‘எங்கள் மதத்துக்கு வாருங்கள்’ என்று எவரையும் நான் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிடுவது நம் மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கே (Tenet) விரோதம் என்பது என் அபிப்பிராயம். லோகத்தில் எதுவும் காரணமில்லாமல் (accidental) நடந்து விடவில்லை.

பலவிதமான ஜீவர்களின் பலவிதமான பக்குவ நிலைமையைப் பொறுத்துத்தான் பகவான் அவர்களை வேறுவேறு மதங்களில் பிறக்கும்படி செய்கிறான்; அந்தந்த மதத்தைப் பற்றி ஒழுகியே அவரவரும் ஆத்ம க்ஷேமம் அடைய முடியும் என்பதே என் நம்பிக்கை. மற்ற மதங்களில் இல்லாத விசேஷங்கள் ஹிந்து மதத்தில் இருப்பதாக நான் சொல்கிறேனே என்றால், அது அவற்றை நிந்திப்பதற்காக அல்ல; அவர்களை இங்கே கூப்பிடுவதற்காகவும் அல்ல. மற்ற மதஸ்தர்கள் இந்த விசேஷ அம்சங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நிந்திப்பதையும், அவர்களுடைய வார்த்தையையே நம்மவர்களில் சிலரும் எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது, இந்த அமசங்களில் உள்ள நல்லதைச் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தே இதை எல்லாம் சொல்கிறேன். இந்தக் கொள்கையை – கர்மக் கொள்கை, அவதாரக் கொள்கை மாதிரி இருக்கப்பட்டவைகளை – மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதாலும் அவர்களுடைய சொந்த மதத்தின் அடிப்படையான அம்சங்களுக்கும் பாதகம் உண்டாகாது. எந்த மதமானாலும் அடிப்படை அம்சம், உயிர்நிலையான அம்சம் என்ன? பகவான் என்ற ஒருத்தனை நம்பி பக்தி செலுத்துவதுதான். அதற்கு இந்தக் கொள்கைகள் பாதகம் உண்டாக்காது. பக்திதான் அம்மதங்களின் முக்கியமான அம்சம்.

இதை எல்லாம் எதற்குக் சொல்கிறேன் என்றால், தற்போதுள்ள மதங்களெல்லாம் அந்தந்த தேசங்களில் தத்தளிக்கின்றன என்பது என் அபிப்பிராயமும் இல்லை. இதில் எனக்கு சந்தோஷமும் இல்லை என்பதற்குத்தான் டோயீன்பீ, பால் பரன்டன், கோஸ்ட்லர் மாதிரி பிரபலமானவர்களுடைய அபிப்ராயத்தையே சொன்னேன். லோகம் பூராவிலும் மத நம்பிக்கையின்மை (disbelief) , நாஸ்திகம் (atheism) எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகி, இப்போது எல்லா மதங்களும் தத்தளிக்கும்படியான நிலைமை வந்திருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே திருப்பிச் சொன்னேன்.

நம் தேசத்தில்கூட இந்தப் போக்கு அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. ஆனாலும், “மற்ற தேசங்களோடு பார்த்தால் உங்கள் தேசம் எத்தனையோ தேவலை. இங்கே மத உணர்ச்சி இன்னும் அத்தனை மோசமான நிலைக்குப் போய்விடவில்லை” என்றே சகல தேசங்களையும் ஆராய்ந்து பார்க்கிற வெளிதேசத்தார் ஒருமுகமாகச் சொல்கிறார்கள். அவர்களில் சாதகர்கள் கூட்டங்கூட்டமாக இன்னமும் நம் தேசத்துக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.

இது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; அதாவது ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் உள் சண்டையால் தனக்குள்ளேயே உளுத்துப்போய் விழுந்துவிடும் என்று தோன்றுகிறது. அதோடுகூட நம் தேச சரித்திரத்தில் பார்க்கிறமாதிரி, அலெக்ஸான்டர் காலத்திலிருந்து பல அந்நிய மதஸ்தர்கள் வேறு அலைஅலையாகப் படை எடுத்து வந்தார்கள் என்றால், இப்படிப் பட்ட மதம் இருந்த இடம் தெரியாமல் புதைந்துதான் போயிருக்க வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது; எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கு உயிரோடிருக்கிற அப்படிப்பட்ட மதங்களுக்கும் பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மதத்து அறிவாளிகளே சொல்கிறார்கள். ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் ‘என்னை யார் என்ன செய்துவிடமுடியும்?’ என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் பதினாயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொடுப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெரும்பான்மையாக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா? இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் இல்லை. குறைந்த பட்சம் திரவிய பலமாவது அவர்களுக்கு இருந்ததா? அப்படிக்கூட இல்லை. பிராமணன் பணம் சேர்ப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணமும் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள்? அப்படி அவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து, ‘இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம், பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம்’ என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தினால் அந்தப் புது மதங்களில் சேர்ந்திருக்கிறார்களேயொழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசீயில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன! பார்த்தால், பழைய வைதிக மதமே “செத்தேனோபார்” என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது.

‘நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை’ என்று ஒரு பெரியவர் பாடினார். அம்மாதிரி உள்ளே பிரிந்து வெளியிலிருந்தும் ஓயாமல் தாக்கப்பட்ட ஹிந்து மதம் செத்திருந்தால் ஆச்சரியமே இல்லை; சாகாததுதான் ஆச்சரியம்!

நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் ‘சமத்துவம்’ (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is தருமங்களின் பாகுபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  வேற்றுமையில் ஒற்றுமை
Next