தர்மங்களின் பாகுபாடு : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

சமுதாய வாழ்வுக்குப் பல காரியங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. புத்தியினால் செய்கிற காரியங்கள், சரீரத்தால் செய்கிற காரியங்கள் – இவற்றில் பல பல தினுசுகள் – இத்தனையும் ஜன சமூகம் சுபிட்சமாக இருப்பதற்கு அவசியமாக இருக்கின்றன. இதில் ஒரு தொழில் உயர்வு, ஒரு தொழில் தாழ்வு என்று நினைத்தால் அது சுத்தத் தப்பு.

நம் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரிசி வேண்டும், உப்பு வேண்டும், துணி வேண்டும், புஸ்தகம் வேண்டும், இன்னும் எத்தனையோ வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் தானியங்கள் பயிரிட்டுக் கொண்டும், உப்புக் காய்ச்சிக் கொண்டும், துணி நெய்து கொண்டும், புஸ்தகம் அச்சுப் போட்டுக் கொண்டும் இருக்க முடியுமா? உழுகிறவன் தனக்காக மட்டுமில்லாமல் எல்லாருக்காகவும் விளைவிக்கிறான். துணி நெய்கிறவன் எல்லாருக்காகவும் நெய்கிறான். இப்படியே சமுதாயம் முழுவதற்குமாகச் சிலர் வியாபாரம் செய்கிறார்கள்; சிலர் யுத்தம் செய்கிறார்கள். இப்படியே லோகம் முழுவதற்கும் ஆத்ம க்ஷேமம் ஏற்படச் சிலர் தியானமும் யாகமும் பூஜையும் செய்து கொண்டு லோகோபகாரமான சாஸ்திரங்களை ரக்ஷித்து வரவேண்டும். இப்படிப் பரஸ்பரப் பிரயோஜனத்துடன் ஜனங்கள் பல தொழில்களைப் பங்கீடு செய்து கொண்டு சௌஜன்யமாக வாழவே நம் தர்ம சாஸ்திரங்கள் அழகாக வழி வகுத்திருக்கின்றன.

‘எப்படிப் பங்கீடு செய்வது?’ அவரவர் தகுதியை வைத்து என்றால், எல்லோருமே தங்கள் தகுதியை அதிகமாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ‘அவரவர் மனோபாவத்தை வைத்து’ என்றால் எல்லாரும் அந்தஸ்தான வேலைகளுக்குத்தான் ஆசைப்படுவார்கள். அப்படியானால், மற்ற காரியங்கள் என்ன ஆவது? எல்லாக் காரியங்களிலும் ஜனங்களைச் சமூக வாழ்வுக்கு இசைவாக நிரவி வைப்பது எப்படி? இப்போது நிரவி விட்டால் மட்டும் போதாது. தலைமுறைக்குத் தலைமுறை எப்படி நிரவுவது? தகுதி, மனோபாவம் இவற்றை வெளியிலிருந்து பரீக்ஷித்து முடிவு பண்ணுவது எப்படி முழுக்க சரியாக இருக்க முடியும்? எல்லோரும் எல்லாவற்றுக்கும் போட்டி போடலாம் என்றால் இதெப்படி சாத்தியமாயிருக்கும்? யார் நிரவுவது? எப்படி நிரவுவது? இதனால்தான் தொழில்களைப் பாரம்பரியமாக நிரவி வைத்து வர்ண தர்மம் என்று ஏற்படுத்தினார்கள்.

எந்தத் தொழிலானாலும் சரி, பாரம்பரியமாக வாய்ந்த அதைப் பரமேசுவரன் விதித்த ஆக்ஞையாக, ‘லோக க்ஷேமார்த்தம்’ செய்கிறேன் என்று உணர்ந்து செய்தால், அதுவே ஒருத்தனுக்கு ஆத்ம க்ஷேமார்த்தமாகவும் ஆகிறது. ஒவ்வொரு காரியத்தில் உள்ள ஜீவனும் கடைத்தேறுவதற்கு அநுகூலமாக வெவ்வேறு அநுஷ்டானங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உடல் வருந்த உழைக்கிறவனை உபவாசம் இரு என்றால் அவனால் முடியுமா? புத்தியினால் காரியங்களைச் செய்கிறவனுக்குச் சரீர போஷணம் அவசியமில்லை. அவர்கள் சரீராபிமானம் நீங்கவே அதிக அநுஷ்டானங்கள், ஸ்நானங்கள், விரதங்கள், உபவாசங்கள் வைத்திருக்கிறது. காரியங்களைப் பொறுத்தே அநுஷ்டானங்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டால் சண்டைக்கு இடமே இல்லை.

நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதால் இந்த ஆசாரங்களை விட்டுவிடாமல், பின்பற்றப் பிரயத்தனம் பண்ணி வந்தால், பிற்காலத்தில் நமக்கு அர்த்தம் தெரிகிறபோது உதவும். அவரவரும் தங்களுடைய தர்மத்தை ரக்ஷித்துக் கொள்வதோடு, மற்றவர்களும் அவர்களது தர்மத்தை ரக்ஷித்துக் கொள்ள உதவி செய்வது சிலாக்கியமாகும். ‘உனக்கேன் அந்த தர்மம்? நீங்க என்னோடு வா அல்லது நானும் உன் தர்மத்தை எடுத்துக் கொள்வேன்’ என்று போட்டி போடாமல், மற்றவன் தன் தர்மத்தை விட நினைத்தாலும் ‘அப்பா நீ அதிலேயே இரு; அதுதான் உனக்கும் க்ஷேமம், எனக்கும் க்ஷேமம்’ என்று சொல்ல வேண்டும்.

காரியங்கள் செய்வதில் ஒருத்தன் உயர்ந்தவன், ஒருத்தன் தாழ்ந்தவன் என்பது இல்லை. சமூகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதால் பலவாகப் பிரிந்து பல காரியங்களைச் செய்ய சாஸ்திரம் வழி சொல்கிறது. அவரவரும் மனசு போனபடி காரியம் செய்ய ஆரம்பித்தால் பொதுக் காரியம் ஒழுங்காக நடக்காது. ஏனென்றால், இன்றைக்கு ஒவ்வொருத்தனுக்கும் பிறன் பணம் எல்லாம் தன் பர்ஸுக்குள் வரவேண்டும் என்ற ஒரே ஆசைதான் இருக்கிறது. நிறையப் பணம் கிடைக்கிற வழிகளில்தான் எல்லாரும் இறங்குவார்கள். இதில் லோக க்ஷேமத்துக்கு அநுகூலமான தொழில் பாகுபாடு இருக்காது. எனவே அவரவரும் பரம்பரைக் கிரமமாக வந்த காரியங்களையும் அநுஷ்டானங்களையுமே பின்பற்றிவந்தால் ஜன சமூகத்தில் போட்டி, பொறாமை இல்லாமல் பொதுக்காரியம் நடப்பதோடு, அவரவருக்கும் ஆத்ம பரிசுத்தியும் உண்டாகும். சீர்திருத்தம் (reform) என்று சொல்லிக்கொண்டு சீர்குலைக்காமல் (deform) இருக்க வேண்டுமானால் இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

யார் எந்தத் தொழில் செய்தாலும் எல்லாருக்கும் சாப்பாடு, துணி, வீடு ஆகிய அத்தியாவசியமான வசதிகளைத் செய்துதரச் சர்க்கார் கடமைப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் தேவைகளை அதிகரித்துக் கொண்டு போனால்தான் போட்டி, பொறாமை எல்லாம் உண்டாகிறது. இப்போது எல்லா நிறைவும் பணநிறைவு என்ற ஒன்றாக இருப்பதால்தான் இத்தனைக் குழப்பங்கள். இது மாறி, தன் காரியத்தை ஒழுங்காகச் செய்தால் ஏற்படுகிற நிறைவே அவரவருக்கும் ஸ்வாமி என்ற மனோபாவம் வர வேண்டும். அப்போது எங்கும் சாந்தமாக இருக்கும்.

பலவித தின்பண்டங்கள் உள்ளன; பல ராகங்கள் உள்ளன. அதுபோல சமூகத்தில் பல காரியங்கள் நடக்க வேண்டும். ரசத்தில் உப்பு போட்டிருக்கிறதே என்று பானகத்தில் உப்பு போட்டால் அது ரஸாபாஸம். ஒரு ராகத்தில் இன்னொரு ராகத்தின் ஸ்வரத்தைச் சேர்த்தால் அது ரஸாபாஸம். இப்போது ஜனங்களுக்கு ரஸனைகளைப் பற்றிய ருசியே போய்விட்டது. உருக்கமான புராணக்கதை நடுவே பாகவதர்கள் கேலிப் பேச்சுக்கு வருகிறார்கள். இதை ஜனங்களும் ரஸிக்கிறார்கள். எத்தனையோ நல்ல போஜன வகைகள் இருக்கும் போது ருசியும் இல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவாமல் இருக்கிற புகையிலையைப் புகைக்கிறார்கள். இவை சின்ன ரஸாபாஸங்கள். பெரிய ரஸாபாஸம், பொது தர்மத்துக்கு அநுகூலமான பல விசேஷ தர்மங்களை வகுத்துத் தரும் வர்ணங்களைப் போட்டுக் குழப்புவதே!

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is நம் மதத்தின் தனி அம்சங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  வர்ண தர்மம்
Next