ஞானதீபம்

ஞான தீபம்

நம்முடைய உடம்பு இருக்கிறது. அதிலிருந்து ஒரு நிழல் தெரிகிறது. நிழலினால் தனியாக எந்தக் காரியமும் செய்ய முடியாது. அசையவும் முடியாது. உடல் எப்படியெல்லாம் இயங்குகிறதோ அதேபோல் அதுவும் இயங்கும். உடம்பு சிறியதாக இருந்தாலும் நிழல், வெய்யிலை ஒட்டி நீண்டதாகவோ, குறுகியதாகவோ ஆகும். உடல் தூய்மையான இடத்தில் இருந்தாலும் நிழல் அசுத்தமான இடத்தில் இருந்தாலும் நிழலுக்கு ஆதாரமான உடலில் அசுத்தம் ஏற்படாது. நிழலை ஒருவன் மிதித்தால் அதனால் உடம்புக்கு வலி ஒன்றும் ஏற்படாது. நிழல் குறுகியதாகவோ, நீண்டதாகவோ ஆனாலும் உடல் ஒரே தன்மையுடன்தான் இருக்கும். ஆகவே உடலை ஒட்டித்தான் நிழலின் நிலை இருக்கிறது என்றாலும், நிழலுக்கு உள்ள எந்தவிதமான நிழலையும் உடலை ஒன்றும் செய்யாது. உடல், நிழல் இரண்டும் பார்ப்பதற்கு வெவ்வேறாகத் தோன்றினாலும் உடலை வைத்துத்தான் நிழலே தவிர, நிழலை வைத்து உடல் அல்ல. இது போலத்தான் ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமான பரமாத்மாவை ஆதாரமாகக் கொண்டு மாயா சக்தியானது இந்த உலகைப் படைத்து, காத்து, அழிக்கிறது.

மாயையால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. ப்ரம்மத்தின் சைதன்ய சக்தியினால்தான் மாயா சக்தி எல்லாப் பணிகளையும் செய்கிறது. நிழலும், மாயையும், தனிப்பொருள்கள் அல்ல. ஆனால் உலகியலில் நிழலையும், மாயையும் தனியாகப் பார்க்கிறோம். தேகத்தின் நிழல் இருப்பதனால் தேகத்திற்கு பளு இல்லை. ஆனால் தனிப்பொருள் என்றால் அதற்கு பளு இருக்கும். இந்த நிழலும், மாயையும் தனிப்பொருள் போல் தெரிந்தாலும் நிழலுக்கு ஆதாரமான உடலுக்கும், மாயைக்கு ஆதாரமான ப்ரும்மத்திற்கு எந்தவிதப் பளுவும் இருப்பதில்லை. இதனால் நிழல், மாயை இரண்டுமே தனிப்பொருளின் லக்ஷணத்தைப் பெறவில்லை. பளு இல்லாமல், ஆனால் கண்ணுக்குத் தெரியக் கூடியது நிழலும், மாயையும் ஆக, தோற்றமெல்லாம் உண்மையல்ல. தோற்றத்திற்கு ஆதாரமான பொருள் மட்டுமே உண்மை என உணர்கிறோம்.

கிளிஞ்சலில் பளபளப்பைப் பார்த்து வெள்ளியாக இருக்குமோ என்று நாம் மயங்குகிறோம். இருட்டில் வளைந்து கிடக்கும் கயிற்றைப் பார்த்து, பாம்பாக இருக்குமோ என்று பயப்படுகிறோம். கிளிஞ்சலைக் கையில் எடுத்துப் பார்த்ததும் இது வெள்ளியல்ல. கிளிஞ்சல்தான் என்று அறிந்து கொள்கிறோம். அதுபோல வளைந்து கிடந்த பொருளை வெளிச்சத்தில் பார்த்த பிறகு அது பாம்பல்ல, கயிறுதான் என்று தெரிந்து கொள்கிறோம். கிளிஞ்சலைப் பார்த்ததும் வெள்ளியின் தோற்றம் மனத்தில் வருவதற்குக் காரணம், மனத்திலே உள்ள ஆசை, அதுபோல பாம்பபைப் பற்றிய பயம் நம் உடம்பிலே இருக்கிறது. எனவே வளைந்து கிடக்கும் பொருளைப் பார்த்து பாம்போ என பயம் வந்து விடுகிறது. ஆசையும் பயமும்தான் மாறான தோற்றத்திற்குக் காரணமாகிறது. ஆகவே தோற்றமெல்லாம் உண்மையல்ல என்று வாழ்க்கையில் கண்டு கொள்கிறோம். தோற்றத்திற்கு ஆதாரமான பொருள் நிஜம் என்று அறிகிறோம். அதே போல் மாயை தோன்றுவதனால் அது உண்மையல்ல. அந்த மாயைக்கு ஆதாரமான

பரம்பொருள்தான் உண்மை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் பரம் பொருள்தான் நம் ஹ்ருதயத்திலேயும் இருக்கிறது என்பதையும் நாம் அறிய வேண்டும். இதைத்தான் ஸ்ரீ ஆதிசங்கரர், "த்ருக்ஷ்யசி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்" - ஹ்ருதயத்திலுள்ள ஆன்மாவைப் பார்; உன் ஹ்ருதயத்திலேயே ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொள்" என்கிறார். இந்த அறிவை நாம் பெறுவதற்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, "ஞான தீபேன பாஸ்வதா - ஞானதீபத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறுகிறார்.

தீபாவளி புண்ணியத் திருநாளான இந்நன்னாளில் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவினுடைய நினைப்புடன் அவருடைய உபதேசத்தை அறிந்து அதன்படி வாழ்க்கை நடத்த முயற்சி செய்வோமாக.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is நல்ல காரியங்கள் செய்வோம் - 11
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  மங்கை ஆலய மலருக்கு வழங்கிய ஆசிச்செய்தி
Next