நல்ல காரியங்கள் செய்வோம் - 11

நல்ல காரியங்கள் செய்வோம் (பகுதி - 2)

வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணன் நமது பாரத தேசத்தில் மக்கள் நன்மையை உத்தேசித்து பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், இந்த ஐந்து அவதாரங்களிலும் ஒரே ஒரு காரியம்தான் செய்யப்பட்டது. பரசுராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பலராம அவதாரம், இந்த நான்கு அவதாரங்களிலும் பல காரியங்களைச் செய்தார்.

மதஸ்யவதாரம், வர்மாவதாரம், இந்த இரண்டு அவதாரத்திலும் எந்த ராக்ஷஸர்களையும் வதம் செய்யவில்லை. வராக அவதாரத்திலும் நரசிம்ம அவதாரத்திலும் ஒவ்வொரு ராக்ஷஸன் பகவானால் கொல்லப்பட்டான். வாமன அவதாரத்தில் ஒரு அசுரனுடைய அகங்காரத்தை அழித்து, அந்த அசுரனைச் சிரஞ்சீவியாக ஆக்கினார் பகவான். பரசுராம அவதாரத்தில் அசுரர்களோ, ராக்ஷஸர்களோ வதம் செய்யப்படவில்லை. பல க்ஷத்திரியர்கள் அழிக்கப்பட்டார்கள். ராமாவதாரத்தில் பல ரிஷிகளுக்கும், சாதுக்களுக்கும் நன்மை செய்யப்பட்டது. பல ராக்ஷஸர்கள் கொல்லப்பட்டார்கள்.

ராக்ஷஸர்கள் வேறு - அசுரர்கள் வேறு. அசுரர்கள் என்பவர்கள் பிறப்பினாலேயே தீய குணம் உள்ளவர்கள். பிரகலாதன் போன்ற ஓரிருவர் அசுரப்பிறவியிலும் நல்லவர்களாக இருந்தார்கள். ராக்ஷஸர்கள் என்பவர்களுக்குப் பிறவிகள் பலவாறாக இருக்கும். நாளடைவில் பல காரணங்களால் தீயகுணங்களைப் பெற்று ராக்ஷஸர்கள் என அழைக்கப்பட்டார்கள். வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரங்களில் அசுரர்களுடைய கர்வங்கள் அழிக்கப்பட்டன. ராமாவதாரத்தில் ராக்ஷஸர்களின் அகங்காரம் அழிக்கப்பட்டது. கிருஷ்ணாவதாரத்தில் ராக்ஷஸர்களையோ, அசுரர்களையோ கொல்லவில்லை. அசுர வம்சத்தின் சுபாவங்களை எடுத்துக் கொண்டவர்களையும், ராக்ஷஸர்களின் குணங்களைக் கொண்டவர்களையும் தர்மத்தைத் துறந்த க்ஷத்திரியர்களையும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பகவான் நேராகவோ, தக்க மனிதர்களைக் கொண்டோ வதம் செய்தார். சாதுக்களுக்கும், நல்லோர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் நிறைய நன்மைகள் செய்தார். உலகில் துஷ்டர்களுக்குச் சகாயமாக இருந்தவர்களையும் தண்டித்தார். மகாபாரத யுத்தத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களை மடிய வைத்து பூலோகத்தின் பாரத்தைக் குறைத்தார்.

அவதாரங்கள், நல்லோர்களைக் காப்பது, தீயோர்களை அழிப்பது, அதன் மூலம் பூமிபாரத்தைக் குறைப்பது என்ற மூன்று இலட்சியங்களை உடையது. கிருஷ்ணாவதாரமானது மூன்று காரியங்களையும் செய்து புராணாவதாரத்தை நிருபித்துள்ளது. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ண பகவானால் பல காரியங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையின் போது வரக்கூடிய மூன்று நாட்களும் கிருஷ்ண பகவானால் தொடங்கி வைக்கப்பட்டன, போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், இந்திர விழா. தீபாவளியும் கிருஷ்ண பகவானால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்திரனுக்கு கர்வபங்கம் செய்து அதன் மூலம் போகிப்

பண்டிகையும், மாட்டுப்பொங்கலும் இந்திரவிழாவும் தொடங்கி வைத்தார் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்தியான பூமாதேவியின் புத்திரனான நரகாசுரனைக் கொல்வதற்காகச் சத்தியபாமையுடன் சென்று, நரகாசுரனால் அடைத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசர்களையும் விடுதலை செய்தார் கருஷ்ண பரமாத்மா, எல்லா ஜனங்களுக்கும் சந்தோஷமும், திருப்தியும், ஆனந்தமும் ஏற்படும் வகையில், பூமாதேவி, நரகாசுரன் இருவர்களின் பிரார்த்தனையினால், கிருஷ்ண பரமாத்மாவினால் தீபாவளி புண்ணியத் திருநாள் தொடங்கி வைக்கப்பட்டது. தீபாவளி புண்ணியத் திருநாளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. தீய காரியங்கள் செய்பவர்கள் நிலைத்து நிற்க முடியாது. கஷ்டப்படுபவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் விமோசனம் உண்டு, கஷ்டப்படுபவர்களைக் காப்பதற்குப் பகவான் தானாகவே வருவார். எவ்வளவோ தீயவர்களாக இருந்தாலும் அவர்கள் கடைசி காலத்தில் நல்ல பிரார்த்தனையும் நல்ல காரியங்களைச் செய்வார்கள். எவ்வளவோ கொடிய காரியங்களைச் செய்தவனாக இருந்தாலும் பூர்வ புண்ணியத்தினால் பகவத் தரிசனம் கிடைக்கும். ஒருவன் இறந்த தினம் தீட்டு தினமாகக் கருதப்பட வேண்டியதாக இருந்தாலும் அதையும் மாற்றி புண்ணிய தினமாக ஆக்கக் கூடிய ஆற்றல் பகவானின் அருளுக்கு உண்டு. இதையெல்லாம் தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது.

தற்பொழுது மனிதர்களுடைய மனத்தில் பல தீய, ராக்ஷஸ, அசுர குணங்கள், குடி கொண்டிருக்கின்றன. அவைகளைப் போக்கடித்துக் கொள்ளவும், நம்முடைய மனத்திற்குள் எங்கும் நிறைந்துள்ள இறைவன் இருப்பதனால் நல்ல எண்ணங்களையும், காரியங்களையும் வளர்த்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். தீபாவளித் புண்ணியத் திருநாளில் நல்ல சங்கல்பம் செய்வோம். நல்ல காரியங்கள் செய்வோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is தீபாவளி ஆசிச் செய்தி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஞானதீபம்
Next