சூர்ப்பகர்ணர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ:

“சூர்ப்பகர்ணர்’ என்பது அடுத்த பேர். அதற்கப்புறம் இரண்டு பேர்கள்தான்.

சூர்ப்பகர்ணர் என்றால் முறம் போன்ற காதுகளை உடையவர். சூர்ப்பம் என்பது முறம். சூர்ப்பணகை என்றால் முறம் போன்ற நகம் உடையவள். ‘சூர்ப்ப – நகா’ என்பது ஸம்ஸ்க்ருதப் புணர்ச்சி விதிகளின்படி ‘சூர்ப்பணகா’ என்று ஆகும். நகமே முறத்தளவு என்றால் எவ்வளவு பெரிய ரூபமாக இருந்திருப்பாள் என்று ஊஹிக்கலாம்.

‘கஜகர்ணகர்’ என்று காதை வைத்து முன்னேயே ஒரு பேர் சொன்ன அப்புறம் ‘சூர்ப்பகர்ணர்’ என்று இன்னொரு பேர் வேறு சொல்வானேன்? ‘கூறியது கூறல்’ என்ற தோஷமாகாதா என்றால், ஆகாது.

மடங்காத, குவியாத ஆனைக் காதை நன்றாக விரித்துக் கொண்டு ப்ரார்த்தனைகளையெல்லாம் விட்டுப் போகாமல் முழுக்கக் கேட்கிறார் என்பதால் கஜகர்ணகர் என்ற பெயர் ஏற்பட்டதாகப் பார்த்தோம். ஆனால் அவர் நம் ப்ரார்த்தனையை மட்டுந்தான் கேட்கிறாரா? எப்போதும் எங்கேயும் உள்ள அவர் நாம் பேசுகிற இதரப் பேச்சுக்கள் எல்லாவற்றையுங்கூடத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதிலே முக்கால்வாசிக்கு அசட்டுப் பேச்சாகத்தான் இருக்கும். வேண்டாத வியவஹாரமாகத்தான் இருக்கும். ஏன், நம்முடைய ப்ரார்த்தனையிலேயே அநேகம் அசட்டு வேண்டுதலாகத்தான் இருக்கும்! அதெல்லாவற்றுக்கும் அவர் காது கொடுப்பது, செவிசாய்ப்பது என்றால் எப்படியிருக்கும்?ஆகையால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாலும் கேட்கும்போதே அவற்றில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியதை மட்டும் காதில் தங்க வைத்துக் கொள்வார். அதைக் காட்டத்தான் அவருக்கு சூர்ப்பகர்ணர், முறக்காதர் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருப்பது.

அதெப்படி?

முறம் என்ன பண்ணுகிறது?தான்யங்களைப் புடைத்து உமி, கல் முதலான வேண்டாத சரக்குகளைத் தள்ளிவிட்டு, வேண்டியதான தான்யமணியை மாத்திரந்தானே பிடித்து வைத்துக் கொள்கிறது?உருவ அமைப்பினால் முறம் மாதிரியுள்ள காதுகளை புடைக்கிறது போலவே அவர் ஸதாவும் ஆட்டிக் கொண்டு, இப்படித்தான் நம்முடைய வேண்டாத வம்பு தும்புகளைத் தள்ளிவிட்டு வேண்டிய — நாம் வேண்டுகிற — விஷயங்களை மட்டும் செவி கொள்கிறார். முதலில் ‘வேண்டிய’என்கிற இடத்தில் ‘வேண்டாம் என்று தள்ளுவதற்கில்லாத’, ‘ஏற்கவேண்டிய’என்று அர்த்தம். ‘நாம் வேண்டுகிற’என்கிற இடத்தில் ‘ப்ரார்த்திக்கிற’என்று அர்த்தம். இப்படி, ஏற்கக் கூடியதாக நாம் ப்ரார்த்திக்கிற

விஷயங்களை மாத்திரமே காதில் தங்கவைத்துக் கொள்கிறார்.

அவர் காதை ஆட்டுவதை விசிறுவதோடு ஒப்பிடும் போது, கன்ன மத நீரில் ஜில்லென்று காற்றடிக்கப் பண்ணி, வண்டுகளை விரட்டி விளையாடுவதாகப் பார்த்தோம். அதையே முறத்தால் புடைப்பதற்கு ஒப்பிடும்போது தாம் ஸகலத்தையும் கேட்டுக் கொண்டிருப்பதில் அவசியமில்லாததைத் தள்ளி, நல்லதை மட்டுமே காதில் வாங்கிக் கொள்கிறாரென்று தெரிந்து கொள்கிறோம்.

“மற்ற மிருகங்கள் மாதிரிக் குவிந்த காதாயில்லாமல், விரித்த காதாக இருந்து எல்லாப் பிரார்த்தனையும் கேட்டுக் கொள்கிறார் என்பதால் என்ன அசட்டுப்

ப்ரார்த்தனை வேண்டுமானாலும் பண்ணலாம்;நிறைவேற்றிக் கொடுத்து விடுவார் என்று நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கேட்பது வாஸ்தவம். ஆனால் கேட்கும்போதே எது ஸரியான ப்ரார்த்தனை, எது ஸரியில்லாத ப்ரார்த்தனை என்றும் சீர்தூக்கிப் பார்த்து, ஸரியானதை மட்டுமே காதில் நிறுத்திக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவார்”என்று புரிய வைப்பதற்குத்தான் சூர்ப்பகர்ணர் என்று தனியாக ஒரு பெயரைச் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is வக்ரதுண்டர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஹேரம்பர்
Next