வக்ரதுண்டர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்தாற்போல வருகிற பேர் ‘வக்ரதுண்டர்’.

முகத்துக்கு உள்ள பல பெயர்களை ‘அமரம்’ சொல்லும் போது ‘துண்டம்’ என்பதையும் பார்த்தோம். பொதுவாகத் துண்டம் என்றால் முகமானாலும், மூக்கு விசேஷமுள்ள வராஹம், கஜம் ஆகியவற்றின் விஷயத்தில் துண்டம் என்பது மூக்கையே குறிக்கும். வராஹத்தின் மூக்கு விசேஷம் என்னவென்றால் ஆடு, மாடு, குதிரைக்கெல்லாம் போகப் போகச் சின்னதாகிக்கொண்டுவந்து முடிகிறது. வராஹத்திற்கு முதலில் அதே மாதிரி சூம்பிக் கொண்டு வந்தாலும் முடிகிற இடத்தில் மூக்கு பெருத்து ஒரு விளிம்பு கட்டிக் கொண்டு முடிகிறது. யானைக்கோ மூக்கே தும்பிக்கையாகத் தொங்குகிறது. அந்தத் தும்பிக்கையைத்தான் துண்டம் என்பது. பக்ஷிகளுக்கு நீளமாகக் கூராகப் போய்ப் புள்ளியாக மூக்கு முடிகிறது. அலகு என்று அதற்கு தமிழில் தனிப் பெயர். ஸம்ஸ்க்ருதத்தில் அதையும் துண்டம் என்றுதான் சொல்வது.

உடம்பில் சிரஸ் ப்ரதானமென்றால் அந்த சிரஸில் மூக்குதான் ப்ரதானம். வாய் அதனுடைய function-ஆல் [செய்யும் காரியத்தால்] ப்ரதானமென்றால் உருவ ரீதியில் மூக்குதான் ப்ரதானமாயிருக்கிறது. சப்பை மூக்கு, கருட மூக்கு என்று ஒருத்தருடைய அழகையோ விரூபத்தையோ மூக்கை வைத்துத்தான் சொல்கிறோம். அந்த மூக்கிலும் ஸ்பெஷல் அமைப்பாக யானைக்கென்று அலாதியாயிருக்கப்பட்ட தும்பிக்கைக்குத் துண்டம் என்று பேர்.

வக்ரம் என்றால் வளைசல்.

“அவன் ஒரே வக்ரம்” என்று தாறுமாறாகப் பண்ணுபவனைச் சொல்கிறோம். “வக்ர குணம்” என்று இழுக்காகச் சொல்கிறோம். ஏன்? நல்லகுணத்தை நேர்மை என்கிறோம். நேராக இருப்பது நேர்மை. நேர் கோடு என்பதுதான். இரண்டு புள்ளிகளைச் சேர்க்கிற மிகச் சிறிய தூரம். வளைசல் என்பது சேர வேண்டிய புள்ளிக்குச் சுருக்கப் போய்ச் சேராமல் எங்கேயோ சுற்றிவிட்டுப் போவது. அந்த மாதிரி எதிலும் டைரக்ஷன் தப்பாமல், வழியை விட்டு போகாமல் goal-க்கு நேராகப் போவதே நேர்மைக் குணம். அப்படியே இங்கிலீஷிலும் straight-forwardness என்கிறார்கள். ஸம்ஸ்கிருதத்தில் straight என்ற அர்த்தமுள்ள ‘ஆர்ஜவம்’ என்ற வார்த்தையையே நேர்மைக் குணத்துக்கும் சொல்வது. ‘ருஜு’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து அந்த வார்த்தை வந்திருக்கிறது.

நேராக இல்லாதது கோணலாக இருப்பதால் நேர்மை இல்லாதவரைக் கோணல் புத்திக்காரர் என்று சொல்கிறோம். அதையே, வளைசலும் நேராக இல்லாததுதான் என்பதால் வக்ர புத்தி என்றும் சொல்கிறோம்.

‘வக்ரதுண்டம்’ என்கிற இடத்தில் ‘வக்ர’த்துக்குக் கெட்ட அர்த்தம் எதுவுமில்லை. ‘வளைந்துள்ள தும்பிக்கை’ என்றுதான் அர்த்தம். பிள்ளையார் தும்பிக்கையை பக்கவாட்டாக வளைத்துக் கொண்டிருப்பதால் வக்ரதுண்டர்.

ஒரு யானை தும்பிக்கை நுனியைப் பக்க வாட்டமாகக் கொண்டு போகாமலே வளைக்கலாமானாலும் பிள்ளையாரோ பெரும்பாலும் இடம்புரியாகவோ, அபூர்வமாக வலம்புரியாகவோ நுனியை இடது வலது பக்கங்களில் கொண்டுபோய் வளைக்கிறார். அதனால் தான் ‘வக்ரதுண்டர்’ என்று குறிப்பிட்டு ஒரு பெயர் சொல்லியிருப்பது.

வக்ரதுண்ட மஹாகாய

என்று ஸ்தோத்ரம் சொல்கிறோம். “ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்” என்று தீக்ஷிதர் பாடியிருக்கிறார். வலம்புரியாகத் தும்பிக்கையை வளைத்தால் அதுவே ப்ரணவ ஸ்வரூபம்; ஓம் என்ற அக்ஷரரூபம் அப்போதுதான் வரும். ஆகக்கூடி அவர் தும்பிக்கையை நேராகத் தொங்கவிடாமல் பக்கவாட்டாக வக்ர துண்டமாகக் கொண்டு போயிருப்பதால்தான் ப்ரணவ ஸ்வரூபம் கிடைக்கிறது. “வக்ரதுண்டர்” என்று நாமம் கொடுத்திருப்பதன் விசேஷம் அதுதான்.

கிருஷ்ணன் பண்ணிய திருட்டுக்களை ஸ்மரித்தால் நமக்குத் திருட்டுப் புத்தி போகும்; அவன் ராஸகேளி பண்ணினதை ஸ்மரித்தால் நமக்குக் காமம் நசித்துப் போகும் என்று சொல்வார்கள். அப்படி, விக்நேச்வருடைய வக்ர துண்டத்தை ஸ்மரித்தால் நம்முடைய வக்ர குணங்கள் போய்விடும்.

கணபதி காயத்ரியிலேயே “வக்ரதுண்டரை த்யானிக்கிறோம்” என்று இந்தப் பேரைத்தான் த்யானத்திற்குரியதாகச் சொல்லியிருக்கிறது. நம் புத்தியை அவர் நேர் வழியில் தூண்டிவிடத்தான் அந்த மந்த்ரம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட மந்த்ரத்திலுள்ள ‘வக்ரம்’ என்றால் அது நம்முடைய வக்ரத்தைப் போக்குவதாகத்தானே இருக்கும்?

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முகமும் வாயும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சூர்ப்பகர்ணர்
Next