வேலிக்கோல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

வேலிக்கோல்

கண்ணன் தலையை வாரிக்கொண்டான். மலர் சூட்ட நல்ல மலர் கொண்டுவர உள்ளே சென்றாள் தாய். மாடு கன்றுகளை மேய்க்க ஆயர் சிறுவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டான் கண்ணன். தானும் செல்லத் துடித்தான்!கன்று மேய்க்கும் கொம்பு எங்கே என்று தேடினான். தாயைக் கேட்கிறான். அழுகிறான். 'அடடா!அதுவா!இப்போதுதான் காக்கை எடுத்துச் சென்றுவிட்டது!காக்காய்!கண்ணனுக்குக் கோல் கொண்டு வா.'என்றழைத்துக் கண்ணனைத் தங்க வைக்கிறாள் தாய்!இது ஒரு அநுபவம்! காக்கையைக் கண்ணனுக்கு கோல் கொண்டுவர விளம்புதல்

கலித்தாழிசை

காலிப்பின் போகிறவன்

172. வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி,

தாலிக்கொ ழுந்தைத் தடங்கழுத் தில்பூண்டு,

பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு,

காலிப்பின் போவாற்கோர் கோல்கொண்டுவா,

கடல்நிற வண்ணர்கோர் கோல்கொண்டுவா. 1

திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்

173. கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும்,

எங்கும் திரிந்து விளையாடு மென்மகன்,

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க,நல்

அங்க முடையதோர் கோல்கொண்டுவா,

அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா. 2

கம்சனைக் கொன்ற தேவபிரான்

174. கறுத்திட் டெதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்,

பொறுத்திட் டெதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்,

நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி,

சிறுக்கன் று மேய்ப்பாற்கோர் கோல்கொண்டுவா,

தேவ பிரானுக்கோர் கோல்கொண்டுவா. 3

பாரதம் கைசெய்தவள்

175. ஒன்றே யுரைப்பா னொருசொல்லே சொல்லுவான்

துன்று முடியான் துரியோ தனன்பக்கல்,

சென்றங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு,

கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா,

கடல்நிற வண்ணற்கோர் கோல்கொண்டுவா. 4

ஸ்ரீ பார்த்தசாரதி

176. சீரொன்று தூதாய்த் துரியோ தனன்பக்கல்,

ஊரொன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்,

பாரொன்றிப் பாரதம் கைசெய்து, பார்த்தற்குத்

தேரொன்றை யூர்ந்தாற்கோர் கோல்கொண்டுவா,

தேவ பிரானுக்கோர் கோல்கொண்டுவா. 5

குடந்தைக் கிடந்தான்

177. ஆலத் திலையா னரவி னணைமேலான்,

நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்,

பாலப் பிராயத்தே பார்த்தற் கருள்செய்த,

கோலப் பிரானுக்கோர் கோல்கொண்டுவா,

குடந்தைக் கிடந்தாற்கோர் கோல்கொண்டுவா. 6

கற்றைக் குழலழகன்

178. பொன்திகழ் சித்திர கூடப் பொருப்பினில்,

உற்ற வடிவி லொருகண்ணும் கொண்ட, அக்

கற்றைக் குழலன் கடியன் விரைந்து,உன்னை

மற்றைக்கண் கொள்ளாமே கோல்கொண்டுவா,

மணிவண்ண நம்பிக்கோர் கோல்கொண்டுவா. 7

அணைகட்டிக் கடலையடைத்த இராமன்

179. மின்னிடைச் சீதை பொருட்டா,இலங்கையர்

மன்னன் மணிமுடி பத்து முடன்வீழ,

தன்னிக ரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட,

மின்னு முடியற்கோர் கோல்கொண்டுவா,

வேலை யடைத்தாற்கோர் கோல்கொண்டுவா. 8

விபீடணனுக்கு அரசளித்த வேங்கடவாணன்

180. தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணிசெய்து,

மின்னிலங்கு பூண்வி பீடண நம்பிக்கு,

என்னிலங்கு நாமத் தளவு மரசென்ற,

மின்னலங் காரற்கோர் கோல்கொண்டுவா,

வேங்கட வாணற்கோர் கோல்கொண்டுவா. 9

மக்களைப் பெற்று மகிழ்வர்

181. அக்காக்காய் நம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று,

மிக்கா ளுரைத்தசொல் வில்லிபுத் தூர்ப்பட்டன்,

ஒக்க வுரைத்த தமிழ்பத்தும் வல்லவர்,

மக்களைப் பெற்று மகிழ்வரிவ் வையத்தே. 10

அடிவரவு:வேலி கொங்கு கறுத்திட்டு ஒன்றே சீர் ஆலத்து பொன்திகழ் மின்னிடை தென்னிலங்கை அக்காக்காய்-ஆனிரை.



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பின்னை மணாளனை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆனிரை
Next