பின்னை மணாளனை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

பின்னை மணாளனை

குழந்தையை வளர்ப்பது பெரும் போர்தான். கட்டுப் படாத கண்ணனை நயமான வார்த்தைகளைக் கூறி எப்படியோ நீராட்டி விட்டாள் தாய். கூந்தலை வாரி அழகு செய்விக்க எண்ணினாள். கண்ணன் தாயின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஓட நினைக்கிறான். 'காக்காய் வா!கண்ணனுக்குக் குழல் வார வா!'என்று காக்கையை அழைத்துக் கண்ணனின் கவனத்தை திருப்புகிறாள். இவ்வாறு சீராட்டிக் குழல் வாரியதை ஆழ்வாரும் அனுபவிக்கிறார்.

கண்ணனின் குழலை வாரக் காக்கையை வாவெனல்

கலித்தாழிசை

பிள்ளை மணாளம் மாதவன்

162. பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை,

முன்னை யமரர் முதல்கனி வித்தினை,

என்னையு மெங்கள் குடிமுழு தாட்கொண்ட,

மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய்!

மாதவன் தன்குழல் வாராயக் காக்காய்! 1

காயாமலர் வண்ணன் கண்ணன்

163 பேயின் முலையுண்ட பிள்ளை யிவன்முன்னம்,

மாயச் சகடும் மருதும் இறுத்தவன்,

காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல்,

தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய்!

தூமணி வண்ணன்கூல் வாராயக் காக்காய்! 2

அமரர் பெருமான் கண்ணன்

164. திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த,

வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்,

அண்ண லமரர் பெருமானை, ஆயர்தம்

கண்ணரன வந்துகுழல் வாராய்அக் காக்காய்!

கார்முகில் வண்ணன்குழல் வாராயக் காக்காய்! 3

பறவை உருக்கொண்ட அசுரன் வதம்

165. பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு,

கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு,

புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட,

பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய்!

பேய்முலை யுண்டான்குழல் வாராயக் காக்காய். 4

கன்றெறிந்த ஆழியான்

166. கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை,

பற்றி யெறிந்த பரமன் திருமுடி,

உற்றன பேசிநீ ஓடித் திரியாதே,

அற்றைக்கும் வந்துகுழல் வாராய்அக் காக்காய்!

ஆழியான் றன்குழல் வாராயக் காக்காய்! 5

ப்ராக்ஜ்யோதிஷபுர மன்னரை அழித்தவன்

167. கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை,

அழிப்பான் நினைந்திட்டவ் வாழி யதனால்,

விழிக்கு மனவிலே வேரறுத் தானைக்,

குழற்கணி யாகக்குழல் வாராய்அக் காக்காய்!

கோவிந்தன் றன்குழ்ல் வாராயக் காக்காய் 6

அழகர் பெருமான் மாயவன்

168. பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்,

உண்டதற்கு வேண்டிநீ யோடித் திரியாதே,

அண்டத் தமரர் பெருமான் அழகமர்,

வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய்!

மாயவன் தன்குழல் வாராயக் காக்காய்! 7

சதுர்முகனைப் படைத்த தாமோதரன்

169. உந்தி யெழுந்த உருவ மலர்தன்னில்,

சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்,

கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி,

தந்தத்தின் சீப்பால்குழல் வாராய்அக் காக்காய்!

தாமோத ரன்றன்குழல் வாராயக் காக்காய்! 8

உலகளந்தான் ஆயிரம் பேருடையான்

170. மன்னன்றன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த,

முன்னிவ் வுலகினை முற்று மளந்தவன்,

பொன்னின் முடியினைப் பூவணை மேல்வைத்து,

பின்னே யிருந்துகுழல் வாராயக் காக்காய்!

பேராயி ரத்தான்குழல் வாராயக் காக்காய்! 9

வினைகள் குறுகா

171. கண்டார் பழியாமே அக்காக்காய்!கார்வண்ணன்

வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சிசொல்,

விண்தோய் மதிள்வில்லி புத்தூர்கோன் பட்டன் சொல்,

கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே. 10

அடிவரவு:பின்னை பேயின் திண்ணம் பள்ளத்தில் கற்றினம் கிழக்கில் பிண்டம் உந்தி மன்னன் கண்டார்-வேலி.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வெண்ணெயளைந்த
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வேலிக்கோல்
Next