மஞ்சாடு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

மஞ்சாடு

திருக்கோவிலூர்

தொண்டை நாட்டுத் திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார் நாட்டுத் திருப்பதிகளை அனுபவிக்கிறார். இப்பகுதியில் திருக்கோவிலூர் கூறப்படுகிறது.

'கோபாலன்' என்கிற சொல் கோவலன்' எனத் திரிந்தது. கோபாலன் எனப்படும் ஆயன் எழுந்தருளியிருக்கும் தலம் இது. அதனால் திருக்கோவலூர் எனப் பெயர் பெற்றது. முதலாழ்வார்கள் மூவரும் ஒன்று சேர்ந்த இடம் திருக்கோவலூர். 'தக்ஷிண பிநாகிநீ' எனப்படும் தன்பெண்ணையாறு பாயப்பெற்ற வளம் நிறைந்த இடமாக இருக்கிறது இவ்வூர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆலிலைத் துயின்றான் திருக்கோவலூரில் உள்ளான்

1138. மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்

வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்

இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,

துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்

தூயநான் மறையாளர் சோமுச் செய்ய

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

நான்மறைகள் எப்பொழுதும் சிந்தனை செய்யும் இடம் இது

1139. கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்

தீபங்கொண் டமரர்தொழுப் பணங்கொள் பாம்பில்,

சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை

தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,

வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து

வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,

சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

கஜேந்திரனுக்கு அருள்செய்தவன் இடம் இது

1140. கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள்பொய்கைக்

கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,

அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி

அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,

எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட

இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட

செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

அடியார்களின் ஆரமுது தங்கும் இடம் இது

1141. தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து

தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,

ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும்

அடியவர்கட் காரமுத மானான் றன்னை,

கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சேலைக்

குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு

தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

வேதங்களை வளர்க்கும் இடம் இது

1142. கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி

கணையன்றி னால்மடிய இலங்கைதன்னுள்,

பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்

பெருந்தகையோ டுடன்துணித்த பெம்மான்றன்னை,

மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்

மண்டபமொன் தொளியனைத்தும் வாரமோத,

சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

கண்ணனைத் திருக்கோவலூரில் கண்டேன்

1143. உறியார்ந்த நறுவெண்ணெ யளியால் சென்றங்

குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க

தறியார்ந்த கருங்களிறே போல நின்று

தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,

வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு,

வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்

செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

கம்சனுக்கு நஞ்சானவன் இருக்கும் இடம்

1144. இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் WP

இனவிடைக ளேழடர்ந்து மருதம் சாய்த்து,

வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு

வஞ்சஞ்செய் கஞ்சனக்கு நஞ்சா னானை,

கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று

காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,

செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத்

திருக்கோவ லூரதனள் கண்டேன் நானே.

பார்த்தசாரதியாக விளங்கியவன் தங்கும் இடம்

1145. பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு

பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறலழியச் செற்றறான் றன்னை,

போரேறொன் றுடையானு மளகைக் கோனும்

புரந்தரனம் நான்முகனும் பொருந்து மூர்

சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் போல்,

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

அருள்புரியும கற்பகமரம் போன்றவனைக் கண்டேன்

1146. தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு

சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,

காவடிவின் கற்பகமே போல நின்று

கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,

சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை

செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

இவற்றைப் படித்தோர் பரமனைக் காண்பர்

1147. 'வாரணங்கொ ளிடர்கடிந்த மாலை நீல

மரகதத்தை மழைமுகிலே போல்வான் றன்னை,

சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்

திருக்கோவ லூரதனுள் கண்டேன்,' என்று

வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்

வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,

காரணங்க ளாலுலகங் கலந்தங் கேத்தக்

கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.

அடிவரவு - மஞ்சாடு கொந்து கொழுந்து தாங்கு கறை உறி இருங்கை பார் தூவடிவு வாரணம் - இருந்தண்.









 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சொல்லு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  இருந்தண்
Next