அனைத்து மட்டத்தினருக்கும் ஆசார்யரான ஜகத்குரு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிக் கர்மா, பக்திகளையும் சொல்லி அவற்றின் மூலமே ஞானத்துக்குப் போகச் சொன்னவர் ஆசார்யாள். ஞானத்திற்காகவே கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகியவற்றையும் ஸ்தாபித்தவரவர்.

அத்வைத ஞானமார்க்க ஆசார்யர் என்று மட்டுமே அவரை முடித்துவிடும் பரவலான அபிப்ராயம் ஸரியில்லாத ஒன்றாகும். அத்வைதந்தான் முடிவான லக்ஷ்யம் என்று அவர் நிலைநாட்டி ஏராளமாக அதற்காகவே எழுதியிருப்பது வாஸ்தவந்தான். ஆனாலும் நிவ்ருத்தியில் போகக்கூடிய ஸ்வல்ப ஜனங்களுக்கே அது அநுஷ்டான ஸாத்யமானது. யாராயிருந்தாலும் அத்வைதந்தான் ஸத்யம் என்று அடிப்படையாக ஒரு உறுதி இருக்கணும், அவர்கள் ஸாதனையில் முன்னேறி முன்னேறி முடிவாக அடைய வேண்டியது அதுதான் என்பதால் பரம ஸத்யமான அத்வைத ஸ்தாபனத்தை ஆசார்யாள் முக்யமாகப் பண்ணினார். ஆனால் ஸகல ஜனங்களையும் உய்விக்க வந்த அவர் இப்படி ஸ்வல்பம் பேருக்கு வழிபோட்டுக் கொடுத்ததோடு முடிந்து போய் விடவில்லை.

மற்ற ஃபிலாஸஃபர்களுக்கும் ஆசார்யாளுக்கும் முக்யமான வித்யாஸமே என்னவென்றால் அவர்கள் உசந்த லெவலில் இருப்பவர்கள் அநுபவித்துத் தெரிந்து கொள்ளவே ஃபிலாஸஃபி சொன்னார்கள்; மற்றவர்களில் அறிவாளிகளாக இருக்கப்பட்டவர்கள் புத்தி விஷயமாக அந்த ஃபிலாஸஃபிகளை ஆராய்ந்து ஸந்தோஷ்ப்படும்படிச் சொன்னார்கள்; மற்ற ஜனங்களுக்கு ப்ரயோஜனமாக அவர்கள் ஒன்றும் பண்ணவில்லை. தம்முடைய ஃபிலாஸஃபியைப் புரிந்து கொள்ளவே முடியாமல் அடி நிலையில் உள்ளவர்களிலிருந்து ஆரம்பித்து, அநுஷ்டானமாகச் செய்து பார்த்து முன்னேறுவதற்கு விஸ்தாரமாக ஸாதனா க்ரமம் போட்டுக்கொடுத்துக் கார்யம், feeling, புத்தி எல்லாவற்றைக் கொண்டும் அநுபவத்துக்கு இஞ்ச் இஞ்சாக ஏற்றிவிட்டவர் நம் ஆசார்யாள்தான். கர்மா, பக்திகளால் மனஸின் அழுக்கும் ஆட்டமும் போனபின் ஸாதன சதுஷ்டயங்களை அப்யஸித்து, அப்புறம் ச்ரவண — மனன — நிதித்யாஸனங்களால் ஸாக்ஷாத்காரம் பெறும்படியாக விரிவாக ஸாதனா க்ரமம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.1

சில பேருக்கு மட்டும் ஃபிலாஸஃபி சொன்ன ஒருவராக நம் ஆசார்யாள் முடிந்து விடவில்லை. அவர் அத்தனை பேருக்குமானவர். அதனால்தான் ‘ஜகத்குரு’ என்று பெயர். அத்தனை லெவல்களிலுமுள்ள எல்லா ஜனங்களுக்கும், அவரவர் லெவலிலேயே ஆரம்பித்து, அவரவர் மனப் போக்குக்கு அநுகூலமான வழியிலேயே கொண்டு போய், படிப்படியாக அத்வைதத்தில் சேர்க்கும்படியாக ஸகல மார்க்கங்களையுமே ஸ்தாபித்தவர் அவர் என்பதுதான் அவரைப் பூர்ணமாகப் புரிந்துகொள்ளும் ஸரியான அறிவு. வேத சாஸ்திர அடிப்படையில் எல்லாவற்றையும் ஸ்தாபித்தார் என்பது அவருடைய விசேஷப் பெருமை.


1 அத்வைத சாதனைக் கிரமத்தை விளக்கும் ஸ்ரீசரணர்களின் உரை அடுத்து வரவிருக்கும் நம் நூற்பகுதியில் வெளியாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is தெய்வபேதம் நீக்கியது; 'பஞ்சாயதன'மூர்த்திகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அத்வைத உள்ளிட்ட மதங்களின் ஸாராம்சம்
Next