தெய்வ பேதம் நீக்கியது; ‘பஞ்சாயதன’ மூர்த்திகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இன்னொன்று விசேஷமாக அவர் பண்ணியது: எத்தனையோ மஹான்கள், மஹாபக்தர்கள் இஷ்ட தெய்வம் என்று ஏதாவது ஒன்றைத்தான் ஸ்தோத்ரித்திருப்பார்கள்; அதன் உபாஸனையைத்தான் பரப்பியிருப்பார்கள். நம்முடைய ஆசார்யாள்தான் அத்தனை தெய்வங்களையும் ஸ்தோத்ரித்து, அத்தனை தெய்வங்களின் வழிபாட்டுக்கும் ‘ப்ரபஞ்ச ஸார தந்த்ரம்’ என்ற நூலில் வழிமுறைகளை விளக்கினார். அந்த ஞானிதான் இப்படியெல்லாம் பக்திக்கும் புது எழுச்சியைத் தந்தவர். குறிப்பாக ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, ஸூர்யன், விக்நேச்வரர், ஸுப்ரஹ்மண்யர் என்று ஆறு தெய்வங்களின் வழிபாட்டை ப்ரகாசப்படுத்தி நிலை நிறுத்தி ஷண்மத ஸ்தாபனாசார்யாள் என்று பெயர் பெற்றார்.

தம்முடைய வழியையே முழுக்க அநுஸரிப்பவர்களான ஸ்மார்த்தர்கள் என்பவர்கள் தெய்வ பேதம் பாராட்டாத ஸமரஸ பாவனை பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்று நினைத்தார். நினைத்து ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, விக்நேச்வரர், ஸூர்யன் ஆகிய ஐந்து ஸ்வாமிகளையுமே ‘பஞ்சாயதனம்’ என்பதாக வைத்து அவர்கள் பூஜிக்க வேண்டுமென்று விதித்தார். ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யிலேயே இவ்விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.1

இந்த ஐந்தில் எந்த ஒரு ஸ்வாமி இஷ்ட தெய்வமோ அதை நடுவில் வைத்து மற்ற நாலை நாலு மூலைகளில் வைக்க வேண்டும். எது மத்தியிலிருந்தால் எதெது எந்த மூலையில் என்பதற்கு விதி உண்டு. இப்படி எந்த ஸ்வாமியையும் வைக்கலாமாயினும் தம்முடைய மடங்களில் சந்த்ரமௌளீச்வரன் என்ற ஈச்வரனை நடுவில் வைத்துப் பூஜை நடக்கச் செய்திருக்கிறார். அம்பாள் த்ரிபுரஸுந்தரியை மூலையாக இல்லாமல், பக்கமாக ‘ஸம ப்ரதான்யம்’ கொடுத்து வைத்து இங்கே பூஜை.

தெய்வ பேதம் பார்க்காதவர் குறிப்பாக ஈச்வரனை ஏன் நடுவில் வைத்தார்? எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த ஐந்து ஸ்வாமிக்கும் கண், காது, மூக்கு வைத்து நாம் பிம்பம் அடிக்கணும் என்றில்லாமல் இயற்கையில் கிடைக்கும் ஐந்து வகைக் கல்லுகளையே விசேஷ மூர்த்திகளாகச் சொல்லியிருக்கிறது. இவற்றில் விஷ்ணு மூர்த்தமான ஸாளக்ராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைப்பது. அம்பாள் மூர்த்தமான ஸ்வர்ண ரேகா சிலா, அதாவது தங்க ‘ரேக்’ ஓடும் கல்லு, தெலுங்கு தேசத்தில் மைக்கா சுரங்கங்கள் இருக்கும் கூடூர் பகுதிகளில் ஸ்வர்ணமுகி (பொன் முகலி) ஆற்றங்கரையில் கிடைப்பது. பிள்ளையார் மூர்த்தமான சோண பத்ரம் என்ற சிவப்புக் கல் ஸோன் நதியில் கிடைப்பது. ‘துங்கபத்ரா’ மாதிரி ஸோனுக்குப் பேரே ‘சோணபத்ரா’தான். அது பாட்னாவுக்குப் இருபது மைல் மேற்கே கங்கையில் கலக்கிறது. அதன் கரையிலுள்ள கோயில்கார் என்ற க்ஷேத்ரத்திற்குப் போயிருந்தபோது2 நானே ஆற்றில் நிறைய சோணபத்ரம் எடுத்திருக்கிறேன். ஸூர்ய மூர்த்தம்தான் ஸ்படிகம். தஞ்சாவூர் கலெக்டர் ஆபிஸ் உள்ள வல்லத்தில் யாரும் வெட்டாமல் இயற்கையாக அமைந்துள்ள ஏரியில் இந்த ஸ்படிகம் கிடைக்கிறது.

ஐந்தில் பாக்கி எது என்றால் ஈச்வர மூர்த்தியான பாணம் என்னும் இயற்கையான லிங்கம். அது எங்கே கிடைக்கிறதென்றால் நர்மதையில். அந்த நர்மதைதான் தேச மத்தியில் ஓடுகிறது. அதாவது, லோகத்துக்கே ஹ்ருதயமாகவுள்ள பாரத தேசத்தின் நடு மையத்தில் ஈச்வரன்தான் தாமே இயற்கையாக எழுந்தருளியிருக்கிறார்! அதனால், லோகம் முழுவதன் க்ஷேமத்துக்காகவும் மடத்தில் பூஜை நட்க்கும்போது மத்ய மூர்த்தியாக ஈச்வரன்தான் இருக்க வேண்டுமென்று ஆசார்யாள் வைத்திருப்பார் போலிருக்கிறது!

ஆனால் நம்முடைய சந்த்ரமௌளீச்வரர் பாண லிங்கமில்லை; ஸ்படிகலிங்கம். ஏன் அப்படி என்று அப்புறம் கதை சொல்கிறேன்.

நாம் இந்தப் பஞ்சாயதன சிலாக்களை (கற்களைப்) பூஜையில் வைத்துவிட்டோமானால் நேபாளத்திலிருந்து தஞ்சாவூர் வரை, தேசம் முழுவதையும் நம்மகத்துக்குள் ஒன்று சேர்த்து வைத்துவிட்ட மாதிரி!

தேச மத்தியில் குடிகொண்ட பரமேச்வரன் இந்த தேசம் முழுவதிலுமே நாலு திசைகளிலுமாக ஸோமநாத். ஸ்ரீசைலம், உஜ்ஜயினி, ஓம்கார் மந்தாதா (இது நர்மதா தீரத்திலேயே இருப்பது) , பரலி, நாகேசம், காசி, பீமசங்கரம், ராமேச்வரம் (தமிழ் நாட்டுத் தெற்கோரத்தில் இருப்பது) , த்ரயம்பக் (நாஸிக் கிட்டே) , கேதார்நாத், குஸ்ருணேச்வர் (எல்லோரா) என்ற பன்னிரண்டு மஹாக்ஷேத்ரங்களில் ஜ்யோதிர் லிங்கமாக வ்யாபித்திருக்கிறான். ஆசார்யாள் அத்தனை இடத்துக்கும்போய், ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு ச்லோகமாக “த்வாதச லிங்க ஸ்தோத்ரம்” என்று அநுக்ரஹித்திருக்கிறார்.

மொத்தத்தில் ஸகல ஜனங்களையும் பக்தியினால் ‘அரன் குடி மக்களாக்கி’ ஆசார்யாள் ஒன்று சேர்த்தார்.

ஆனந்தகிரீயத்தில் அவர் ஒவ்வொரு எதிர் ஸித்தாந்தியாக ஜயித்து வைதிக மதத்திற்குத் திருப்பினதைச் சொல்லும்போது பல இடங்களில் அவர்களை ‘சுத்தாத்வைதி’ (சுத்த அத்வைதி) களாக்கினாரென்று மட்டும் சொல்லாமல் (பஞ்சாயதன வழிபாடு செய்யும்) “பஞ்ச பூஜா பராயணர்”களாக்கினாரென்றும் இருக்கிறது.

அதோடு ‘நித்யகர்ம ஸக்தர்’களாக்கினார், ‘ஸ்மார்த்த ச்ரௌத – ஸகல கர்ம சீலர்’களாக ஆக்கினார் — அதாவது ச்ருதி-ஸ்ம்ருதிகளிலுள்ள ஸகல கர்மாநுஷ்டானமும் செய்ய வைத்தாரென்றும் இருக்கிறது. இப்படி கர்மா-பக்திகளின் மூலம் எல்லாரையும் ஞானத்துக்கு மெள்ள ஏற்றினார்.

ஸ்வதர்மபடிக் கர்மா செய்வது, ப்ளஸ் பூஜை செய்வது என்று இரண்டு வைத்தது மட்டுமில்லை. ஸ்வதர்ம கர்மாவையே பூஜையாக ஈச்வரார்ப்பணம் பண்ணு என்றும் சொல்லியிருக்கிறார். ‘ஸோபான பஞ்சக’த்தில், “கர்ம ஸ்வநுஷ்டீயதாம்” என்று சொல்லி உடனேயே, “தேந” – “அந்தக் கர்மாநுஷ்டானத்தாலேயே“, “ஈசஸ்ய விதீயதாம் அபசிதி:”- “ஈச்வரனுக்குப் பூஜை பண்ணப்பட்டதாகட்டும்” என்கிறார். இதுதான் அவனே பல தாதா என்று பல த்யாகம் பண்ணும் நிஷ்காம்ய கர்ம யோகம். இப்படிக் கர்ம மார்க்கிகளையும் ஆசார்யாள் பண்ண வைத்தார். அதிலிருந்துதான் எந்தக் கர்மா ஆரம்பத்திலும் “பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்றும், முடிவில் “ஜனார்தன:ப்ரீயதாம்” என்றும் சொல்வதாக ஏற்பட்டது. ஈச்வர ப்ரீதிக்கு ஆரம்பித்து, ஜனார்தன ப்ரீதிக்கு முடிப்பதில் சிவ – விஷ்ணு அத்வைதமும்!


1 72-வது கண்டம், 7-வது பரிஸ்பந்தம், 27-வது ச்லோகம் (“….பஞ்சாயதநார்ச்சநனம் ப்ர்கர்த்தவ்யம்”)

2 1935 ஏப்ரல் மாதத்தில்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is உக்ர தெய்வங்களை சாந்தமாக்கியது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அனைத்து மட்டத்தினருக்கும் ஆசார்யரான ஜகத்குரு
Next