அவருக்கு குரு எதற்கு? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவரேதான் ப்ரைஷ மந்த்ரம் சொல்லி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டாயிற்றே, அப்புறம் குரு எதற்கு என்றால்: ஆபத் ஸந்நியாஸம் என்று ப்ராணாபத்தில்தான் தானே தீக்ஷை எடுத்துக்கொள்ளலாமே ஒழிய, அப்புறம் ஆபத்து போய்ப் பிழைத்துவிட்டால் யதோக்தமாக ஒரு ஆசார்யனை ஆச்ரயித்துத்தான் ப்ரணவோபதேசமும், மஹா வாக்யோபதேசமும் பெற்றுக்கொண்டு ஸந்நியாஸாச்ரமம் ஸ்வீகரித்துக் கொள்ளவேண்டும்.

‘ஆசார்யாள் ஈச்வராம்சமாச்சே, அவருமா குருவிடம் உபதேசம் பெற்றுக்கணும்?’ என்றால், மநுஷராக அவதரித்ததால் எல்லோருக்கும் எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே தாமும் நடந்து காட்டவேண்டுமென்றுதான் இப்படிச் செய்தார். இப்போது, ‘ஈச்வராம்சமானவருக்கு அவச்யந்தானா?’ என்று கேட்பவர்களே அவர் குருவிடம் போகாமலிருந்திருந்தால், ‘குரு, உபதேசம் என்றெல்லாம் அவரே பின்பற்றிக் காட்டவில்லை. அதனால் நமக்கும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். புஸ்தகத்தைப் பார்த்து, அல்லது அதுகூட இல்லாமல், நமக்குத் தோன்றினபடி பண்ணிவிட்டுப் போகலாம்’ என்று ஆரம்பித்துவிடுவோம். ‘நமக்கு வேண்டியிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊரைக் கெடுத்ததாக ஆகக்கூடாது. அதற்காக விதி ப்ரகாரம் உபதேசம் பெறத்தான் வேண்டும்’ என்றே ஆசார்யாள் ஒரு ஆசார்யாரைத் தேடிக்கொண்டு ஊரை விட்டுப் புறப்பட்டார்.

கீதையில் பகவான் சொல்கிறார்:

“ந மே பார்த்தாஸி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந”1 – “இந்த மூன்று லோகத்திலும் எனக்கு ஆக வேண்டிய கார்யம் எதுவும் இல்லை” என்கிறார். “ஆனாலும் பார் எப்படி ஸகல கார்யமும் பண்ணிக்கொண்டிருக்கிறேனென்று! இதோ உனக்கு ஸாரத்யம் பண்ணுகிறேன். அன்றைக்கு உங்களுக்காக தூது போனேன். இன்னும் எத்தனை சண்டை ஸல்லாபம் பண்ணியிருக்கிறேன்? இதனாலெல்லாம் எனக்கு ஏதாவது personal gain (ஸொந்த லாபம்) உண்டா? இதுகளைப் பண்ணாவிட்டால் யாருக்காவது நான் பதில்தான் சொல்லணுமா? இருந்தாலும் ஏன் பண்ணுகிறேனென்றால், நான் பண்ணாமல் போனால் என்னவாகும் தெரியுமா?”

ஸங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா: ப்ரஜா:2  ‘க்ருஷ்ணரே ஒன்றும் செய்யாமலிருக்கிறார். நாமும் ஒன்றும் செய்ய வேண்டாம். கடமை, ஸ்வதர்மம் என்று ஒன்றும் எவரும் பண்ணவேண்டியதில்லை’ என்று எல்லோரும் நினைப்பார்கள். இன்னார் இன்னது செய்து தானாக வேண்டுமென்று ஜன ஸமூஹத்தில் வகையாகப் பிரித்து பிரித்து சாஸ்த்ரத்தில் கொடுத்துள்ளபடி யாரும் பண்ணாமல் போய், பிரிவுகளெல்லாம் கலந்தாங்கட்டியாகச் சேர்ந்து ஒரே குழப்பமாகிவிடும். இந்தப் பாபத்துக்கு நானே காரணமாக, கர்த்தாவாக ஆகிவிடுவேன். இப்படி ஒழுங்கு கெட்டுப் போன பின் ஒரு ஸமூஹம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன? அதனால் அது அழிந்தே போன மாதிரிதான். அதாவது, அவதாரம் என்று ஜனங்களை தர்மத்தில் உத்தாரணம் பண்ணுவதற்கு வந்ததாகச் சொல்லிக் கொண்டு, வாஸ்தவத்தில் அவர்களை தர்மப்படிப் பண்ணாமலிருக்கத் தூண்டி, முடிவில் அழித்தே விட்டவனாகிவிடுவேன்! அதனால்தான் எனக்காக ஒரு கார்யமும் வேண்டாமென்றாலும் லோகம் நம்மால் கெட்டுப் போகப்படாது என்றே அநேக கார்யங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பண்ணுகிறேன்” என்று முடித்திருக்கிறார்.

அந்த முறையில்தான் ஆசார்யாள் குருவைத் தேடிப் புற்பபட்டது.

ஈச்வர ஸங்கல்பப்படி மலையாள தேசத்திலிருந்து பஹு தூரம் போய் நர்மதா நதி தீரத்திலிருந்த கோவிந்த பகவத்பாதரே தம்முடைய குரு என்று சரணத்தில் விழுந்தார்.

ஆசார்யாள் சரித்ரத்தைக் கூறுவதாக அநேகப் புஸ்தகங்களிருப்பதில், அவர் எந்த இடத்தில் குருவைக் கண்டு உபதேசம் பெற்றது என்பதில் வித்யாஸமான அபிப்ராயங்கள் காணப்படுகின்றன. நர்மதா தீரத்தில் என்றும், பதரிகாச்ரமத்தில் என்றும், காசியில் என்றும், சிதம்பரத்தில் என்றும் வெவ்வேறு புஸ்தகங்களில் இருக்கிறது.

அந்தப் புஸ்தகங்களின் பெயர்களைச் சொல்கிறேன்.


1 III.22

2 கீதை III.24 (பின்பாதி) பதவுரை: ‘ஸமூஹக் குழறுபடிக்கு நான் கர்த்தாவாகிவிடுவேன். இந்த ஜீவ லோகத்தை அழித்தவனுமாவேன்!’

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அன்னையைப் பிரிந்து ஆசானைத் தேடி...
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சங்கர விஜயங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும்
Next