அன்னையைப் பிரிந்து ஆசானைத் தேடி.. : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

முதலை வாயிலிருந்து குழந்தை மீண்டு வந்ததைப் பார்த்து தாயார் மிகவும் ஸந்தோஷமடைந்தாள். அந்த ஸந்தோஷத்தில் அவர் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்ட நினைவே போய்விட்டது! “அப்பா, பிழைத்து வந்தாயே! ஆத்துக்குப் போகலாம். நான் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்த்துடணும்” என்றாள்.

அதைக் கேட்ட ஆசார்யாள், “அம்மா, நான் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள நீ அநுமதி தரவில்லையா? அதை மறந்து பேசுகிறாயே! இதுவரைக்கும் உன் ஒருத்திக்கு மாத்ரம் குழந்தையாயிருந்தேன். இனிமேல் லோகத்திலுள்ள அத்தனை தாயார்களுக்கும் நான் குழந்தை. ஆமாம் நான் லோகத்துக்கெல்லாம் குழந்தை. பிக்ஷை போடுகிற ஸ்த்ரீகளெல்லாம் எனக்கு தாயார்கள். நீ மாத்ரம் தாயாரென்று நினைக்காதே. பல தாயார்களில் நீயும் ஒரு தாயார். நான் ஞானோபதேசம் வாங்கிக் கொள்ள குரு பரம்பரை இருக்கிறதே, அதிலுள்ளவர்களெல்லாம், எனக்குத் தகப்பனார். ஞானம் வந்து, நான் உபதேசம் பண்ணி, அது யாரார் மனஸுக்கு ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்து அவர்ளை நல்ல வழிக்குக் கொண்டு வருமோ, அவர்கள் எல்லோரும் என் குழந்தைகள். குழந்தைகள் என்றால் பத்னி வேண்டுமே, நீயும் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும் என்றாயே, அப்படி ஒரு பத்னியையும் இந்த க்ஷணத்தில் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டேன். சாந்தி என்று அவளுக்கு பேர். மனஸ் ஏகாந்தமாக ஒன்றி இருக்கும் படியான ஸ்தானத்தில் சாந்தி என்ற வனிதையை விவாஹம் செய்துகொண்டிருக்கிறேன்.

பிக்ஷா-ப்ரதா ஜநந்ய: பிதரோ குருவ: குமாரகா : சிஷ்யா: |
ஏகாந்த-ரமணா-ஹேது: சாந்திர்-தயிதா விரக்தஸ்ய || 1

(ஆசையைத் துறந்தவனுக்கு (துறவிக்கு) பிக்ஷையிடுபவர் யாவரும் அன்னையர்; குறவர் யாவரும் தந்தையர்; சீடர் யாவரும் மக்கள்; ஏகாந்தத்தில் இன்பம் காண ஏதுவாகவுள்ள சாந்தியே மனையாள்.)

“நீதான் நான் மற்ற தாயார்களிடத்தில் போய் அவர்களெல்லாம் கொஞ்சும்படிக் செய்வதற்கும், அப்பப்போ சாந்தி வனிதையோடு நான் ஏகாந்தத்தில் ஆனந்தமாயிருந்து கொண்டிருப்பதற்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.

“என்னை விட்டு விட்டா போகப்போறே? என் அந்த்ய காலத்திலேகூட உன்னைப் பார்க்காமல்தான் ஆவி பிரியணுமா?” என்று தாயார் ரொம்பவும் அழுதாள்.

“இல்லை இப்போது உன்னை ஏமாற்றிவிட்டுப் போகிறேனல்லவா? இதற்காகவாவது அந்த்ய காலத்திலே உன் மனஸ் ஸமாதானமாவதற்காக உன் பக்கத்திலேயே வந்து இருக்கிறேன். அப்பொழுது நீ என்னை ஸ்மரித்த மாத்ரத்தில் வந்து விடுகிறேன். (தஹன) க்ருத்யமும் பண்ணுகிறேன்” என்று ஆசார்யாள் வாக்குக் கொடுத்தார்.

ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அம்மாளும் ஆசார்யாள் புறப்படுவதற்கு அநுமதி கொடுத்தாள்.

ஸந்நியாஸி க்ருத்யம் பண்ணலாமா என்றால்…

தாயார் என்பவளுடைய ஸ்தானம் எல்லாவற்றையும் விட உயர்வானது. அப்படி ஸகல சாஸ்த்ரத்திலும் இருக்கிறது. மாத்ரு ருணம் (தாயாருக்குப் பட்டுள்ள சாஸ்த்ரீயக் கடன்) யாரையும் விடவே கூடாது. பித்ரு ருணத்திலிருந்துகூட ஸெளத்ராமணி என்ற மஹா யாகத்தைப் பண்ணினால் விடுபட்டுவிடலாம்; மாத்ரு ருணத்திலிருந்து மட்டும் ஒரு புத்ரன் ஜீவனுள்ளவரை விடுபட முடியாது – என்று தர்ம சாஸ்த்ரத்திலேயே இருக்கிறது. பெரிய குணம் அந்திம க்ரியை செய்து பரலோகம் சேர்ப்பதுதான். வேறே புத்ரர்களிலிருந்தால் அவர்களிடம் இந்தக் கடனைக் கட்டிவிட்டு ஒருவன் ஸந்நியாஸிக்கலாம். ஆசார்யாள் ஏக புத்ரர். அப்படிப்பட்டவர் ந்யாயமாகப் பார்த்தால் ஸந்நியாஸமே வாங்கிக் கொள்ளக் கூடாது தான். ஆனாலும் இது அவதாரம் – ஈச்வரன் தன் வாக்கால் ‘ஒரே ஒரு புத்ரனா, நூறா?’ என்று கேட்டு, ஒன்றாக அமைந்தது. அவனுடைய உத்தேசமோ ஸந்நியாஸ குருவாக தர்மோத்தரணம் பண்ணுவதாக இருந்தது. அதனால் ஸகல சாஸ்த்ரங்களுக்கும் மூலமானவனே தர்ம ஸம்ஸ்தாபனார்த்தம் பண்ணிய உத்தேசமென்பதால் ஏக புத்ரர் ஸந்நியாஸித்தார். ஆனால் இவர்தான் அவதார புத்ரரே தவிர அவள் அவதார அம்மா இல்லையே! அதனாலே அவள் ருணத்தை அவள் எப்படி ஆசைப்பட்டாளோ அப்படி அவர் தீர்க்கவேண்டுமென்பதுதானே ந்யாயம்? அவள் த்ருப்திக்காக தஹனம் மாத்ரம்தான் செய்ய நினைத்தார். அப்புறம் கார்யங்கள், தர்ப்பணம், திவஸமென்று எதுவும் செய்ய நினைக்கவில்லை.

தர்ம சாஸ்த்ரங்களிலேயே இருக்கிறது, க்ருஹஸ்தனாயிருந்து புத்ரனைப் பெற்ற பிறகு ஸந்நியாஸியான ஒருவன் காலமானால் அப்போது அவனுடைய பூர்வாச்ரம புத்ரன் அவனுக்கு வேறே எந்தக் கர்மாவும் செய்யக் கூடாதானாலும் 11-வது அல்லது 12-வது நாளில் பார்வண ச்ராத்தம் என்பதைமட்டும் செய்யவேண்டுமென்று. ஸந்நியாஸிக்குப் பூர்வாச்ரம புத்ரனால் இப்படி ஒன்று நடக்கலாமென்றிருப்பதால் அந்த ஸந்நியாஸியும் ஏகபுத்ரனாக இருக்கும்போது பூர்வாச்ரமத் தாயாருக்கு தஹன ஸம்ஸ்காரம் மாத்ரம் பண்ணலாம் என்று ஆசார்யாள் நினைத்திருக்கலாம். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ராமணம் தே2 என்பதையே எப்போது பார்த்தாலும் வலியுறுத்தி வந்த ஆசார்யாள் சாஸ்த்ரத்தில் இடம் கொடுக்காத ஒன்றை செய்தேயிருக்கமாட்டார். எப்படியிருந்தாலும் ஆசார்யாளுக்கு நாம் சாஸ்த்ரம் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை! அல்லது, ‘அவரே சாஸ்த்ரத்தை ரிலாக்ஸ் பண்ணலாமென்றுதான் இப்படியெல்லாம் பண்ணினார். அவரே ரிலாக்ஸ் பண்ணினாரென்றால் நாம் விட்டுங்கூட விடலாம்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது!

தர்ம சாஸ்த்ரங்களிலேயே இன்னும் என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஒரு ஸந்நியாஸியின் பூர்வாச்ரமப் புத்ரன் உள்பட மற்ற எந்த பந்துக்கள் செத்துப்போனாலும் அப்போது அவன் ஸ்நானங்கூடச் செய்ய வேண்டியதில்லை; ஆனாலும் பூர்வாச்ரம மாதா-பிதாக்களின் மரணத்தின் போது மட்டும் அவன் கட்டின வஸ்த்ரத்தோடு ஸ்நானம் பண்ண வேண்டும் என்று இருக்கிறது. இங்கே மாதா பிதா இரண்டு பேருக்கும் ஸம ஸ்தானம் கொடுத்திருக்கிறதென்றால், இன்னொரு விதியோ பிதாவுக்கும் மேலே மாதாவை உயர்த்தி வைத்துச் சொல்லியிருக்கிறது: “ஸர்வ-வந்த்யேந யதிநா ப்ரஸூர்-வந்த்யா ஹி ஸாதரம்“: எல்லோரும் ஸந்நியாஸியை நமஸ்கரிக்கணும். ஸந்நியாஸிகளிலேயே அவரைவிடக் குறைவாக வ்யாஸ பூஜை செய்துள்ளவர்கள் அவரை நமஸ்கரிக்க வேண்டும். மற்ற ஜனங்களில் ஸகலருமே அவரைவிட வயஸில் எத்தனை பெரியவர்களானாலும் நமஸ்கரிக்கணும். ‘ஸர்வ’ ஜனங்களும் என்று இப்படிச் சொல்லும்போது அதில் அப்பாவும் அடக்கம் தான். ஆனால் அம்மா மட்டும் அடக்கமில்லை. ஸந்நியாஸியாகிவிட்ட புத்ரனை அவள் நமஸ்காரம் செய்யவேண்டாம். அது மாத்ரமில்லை. அவளை இவர் — ஸந்நியாஸி — நமஸ்காரம் செய்ய வேண்டும் : “ப்ரஸூர் – வந்த்யா”

‘இப்படி விதி இருக்கே!’ என்று ஒரு கடமையாக மட்டும், ‘கடனே’ என்று பண்ணினால் போதாது. ‘ஸாதரம்’- ‘மரியாதையானஅன்போடுகூட’ நமஸ்கரிக்கணும்.

இப்படியெல்லாமிருப்பதால்தான் ஆசார்யாள் தாயாருக்கு அப்படி வாக்குக் கொடுத்தார்.

அப்புறம் அவளை நமஸ்காரம் பண்ணிவிட்டு குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.


1 நீலகண்ட தீக்ஷிதரின் ‘வைராக்ய சதக’த்தில் காணும் இச்லோகத்தை ஆசார்யாளின் வாக்காக ஸ்ரீசரணர்கள் நயமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

2 “(செய்யத் தக்கது எது; செய்யத் தகாதது எது என்று முறைப்படி நிச்சயிப்பதில்) சாஸ்த்ரமே உனக்குப் பிரமாணமாகும்” — கீதை XVI.24

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is துறவியானார்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவருக்கு குரு எதற்கு?
Next