பௌத்தத்தை வென்ற நியாமமும் மீமாம்ஸையும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆசார்யாள் அவதாரம் பண்ணி புத்த மதத்தைக் கண்டனம் பண்ணினதால்தான் அது இந்த தேசத்தை விட்டே போயிற்று என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தப்பு. வேதத்தை ஆக்ஷேபித்த புத்த மதத்தை அவர் ஸ்வதந்திரமாகக் கண்டனம் செய்கிற இடங்கள், அவர் பாஷ்யங்களைப் பார்த்தால் மிகவும் சொல்பமாகவே இருக்கும். அதைவிட அநேக மடங்கு அதிகமாக நம் ஆசார்யாள், வேதத்தை அநுஸரித்த ஸாங்கியமதம், மீமாம்ஸக மதம் இவற்றைத்தான் கண்டித்திருக்கிறார். இவை இரண்டைச் சேர்ந்தவர்களும், ‘ஜகத்துக்கு கர்த்தா ஈச்வரன் அல்ல; அவன் பலதாதா அல்ல’ என்று சொல்கிறார்களே என்பதால், அவர்களுடைய தத்துவத்தைப் பற்றியே நிறைய விசாரித்து, ‘அப்படிச் சொல்வது தப்பு. வேத வாக்கியப்படி, பிரம்ம ஸூத்திரப்படி சொல்லியிருக்கிற லக்ஷணங்கள்தாம் உண்மையானவை’ என்று நிர்த்தாரணம் செய்தார். ‘ஈச்வரன் இல்லாமல் ஜகத் உண்டாகாது. நாம் செய்கிற கர்மாக்களே நமக்குப் பலனைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஈச்வரன்தான் பலனைக் கொடுக்கிறான். அவனுடைய சைதன்யந்தான், ஸங்கல்பந்தான் உலகத்தை சிருஷ்டித்து, அவரவர்களுடைய கர்மாக்களுக்கு ஏற்ற பலனைக் கொடுக்கிறது’ என்று ஸாங்கிய மதத்தையும் மீமாம்ஸக மதத்தையும் எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். புத்த மதத்தைக் கண்டனம் பண்ணி எழுதியிருக்கும்படியாகத் தோன்றும் சில இடங்களிலுங்கூட, ஸூத்ரம் அப்படி இருப்பதனால் அதற்கேற்றபடி பாஷ்யம் எழுதியிருக்கிறார். ஆசார்யாள் புத்தமதத்தைக் கண்டித்ததால் தான் புத்த மதம் இந்தத் தேசத்தைவிட்டே போயிற்று என்று சொல்வதற்கு அவர் பாஷ்யத்தில் ஆதாரம் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பின்னே புத்த மதம் நம் தேசத்தில் ஏன் இல்லாமல் போயிற்று? யாரோ கண்டனம் பண்ணித்தானே அது போயிருக்க வேண்டும்? அப்படி புத்த மதத்தை பலமாகக் கண்டித்தது யார்?

மீமாம்ஸகர்களும், தார்க்கிகர்களும்தான்.

தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் ‘தார்க்கிகர்’கள். பதினாலு வித்யைகளில் ‘மீமாம்ஸை’க்கு அடுத்ததாக வரும் ‘நியாய சாஸ்திர’த்தைச் சேர்ந்தே ‘தர்க்கம்’. நியாய சாஸ்திர வல்லுநர்களுக்கு ‘நையாயிகர்’ என்று பெயர். வியாகரணத்தில் வல்லவர்களுக்கு ‘வையாகரணி’ என்று பெயர். புராணத்தில் வல்லவர் ‘பௌராணிகர்’.

தார்க்கிகரான உதயனாசாரியர், மீமாம்ஸகரான குமாரில பட்டர் என்னும் இரண்டு பேருமே ஒவ்வொரு காரணத்திற்காக பௌத்த மதத்தை பலமாகக் கண்டித்திருக்கிறார்கள்.

ஈச்வரன் என்று ஒருத்தன் இல்லை என்று சொன்னதற்காக உதயனாசாரியார் புத்த மதத்தை பலமாகக் கண்டித்தார். மீமாம்ஸகர்களுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாநுஷ்டானங்களே பிரதானம் என்று சொன்னேன். ‘ஈசுவரன் பலதாதா அல்ல’ என்று இவர்கள் சொன்னாலும், ‘நாம் செய்கிற கர்மாநுஷ்டானங்கள் பலனைத் தருகின்றன. வேத தர்ம சாஸ்திரங்களை எல்லாம் சிரத்தையுடன் அநுஷ்டிக்க வேண்டும்’ என்பவர்கள் அல்லவா? எனவே அநுஷ்டானம் ஒன்றுமே வேண்டாம் என்று புத்த மதத்தினர் சொன்னதற்காக, புத்த மதத்தை மீமாம்ஸகர்களும் பலமாகக் கண்டித்தார்கள். குமாரிலபட்டர் அதைக் கண்டித்துப் பல இடங்களில் நிறைய எழுதியிருக்கிறார். உதயனாசாரியர், குமாரில பட்டர் இவர்களால்தான் பௌத்தர்களுடைய கொள்கைகள் வித்வத் ஜனங்களுடைய மனஸில் பரவுவதற்கு இல்லாமல் நின்று போயின. பிறகுதான் நம் ஆசார்யாள் வந்தார்கள். பௌத்தத்தை ஏற்கெனவே உதயனரும் குமாரிலரும் கண்டித்து விட்டதால் அதை ஆசார்யாள் விசேஷமாக எடுத்துக் கொள்ள அவசியம் இருக்கவில்லை. இந்த உதயன-குமாரிலர்களின் ஸித்தாந்தங்களிலும் தப்புக்கள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டி அவற்றைக் கண்டனம் செய்வதே ஆசாரியாளுக்கு முக்ய வேலையாயிற்று. ஆசாரியாள், ‘ஈச்வரன்தான் ஜகத்துக்கெல்லாம் கர்த்தா; அவன்தான் பலதாதா’ என்று நிர்த்தாரணம் பண்ணி வைத்தார்.

தப்பான விஷயங்களைக் கேட்டு உங்களுக்கு உண்மை தெரியாமல் போகக்கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன். குமாரிலபட்டர் ‘தர்க்கபாதம்’ என்னும் அத்தியாயத்தில் பௌத்தத்தை நிறையக் கண்டித்திருக்கிறார். உதயனாசாரியாரும் ‘பௌத்தாதிகாரம்’ என்று தம் நூலில் அவர்களைப் பற்றியே கண்டித்து எழுதியிருக்கிறார். புத்த மதம் இந்த தேசத்தில் நலிந்து போனதற்குக் காரணம் முக்யமாக இந்த இருவர்தான்; சங்கர பகவத்பாதாள் அல்ல. நாம் ஹிஸ்டரிப் புஸ்தகத்தில் படித்தது தப்பு .

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கடவுட் கொள்கை இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பௌத்தமும் பாரத ஸமுதாயமும்
Next