கடவுட் கொள்கை இல்லை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆசார்யாள் ஏன் மீமாம்ஸகரான மண்டனமிச்ரரிடம் வாதச்சண்டை போட வேண்டும்?

மீமாம்ஸையில் ஞானபரமான உத்தர மீமாம்ஸை, கர்ம பரமான பூர்வமான மீமாம்ஸை என்ற இரண்டு இருந்தாலும் பொதுவாக மீமாம்ஸை என்றால் பூர்வ மீமாம்ஸைதான் என்றேன். அதனால் மீமாம்ஸகர் என்றாலே கர்ம மீமாம்ஸகர் தான் என்றாகி விட்டது. அதனால்தான் மண்டன மிச்ரரை மீமாம்ஸகர் என்றது. உத்தர மீமாம்ஸை பொதுவில் ‘வேதாந்தம்’ எனப்படுவதால் உத்தர மீமாம்ஸகர்களான நாம் எல்லாரும் ‘வேதாந்திகள்’ எனப்படுகிறோம்.

ஆசார்யாள் வைதிக மதத்தையே திரும்பவும் உயிர்க்களை கொடுத்து ஸ்தாபனம் பண்ணியவர். இப்படிப்பட்டவர் வேதத்துக்கு உபாங்கமாக இருக்கப்பட்ட மீமாம்ஸையை எதற்காக ஆக்ஷேபிக்க வேண்டும்?

இதற்குப் பதில் சொல்லுமுன் மீமாம்ஸையாகத்தான் இருக்கட்டும், வேறு எந்த சாஸ்திரமாகத்தான் இருக்கட்டும். அது எந்த லக்ஷ்யத்தை உத்தேசித்தது என்று பார்ப்போம்.

ஒரு சாஸ்திரம் என்றால் அது ஈச்வரனிடம் கொண்டு விடவேண்டும். நம் சாஸ்திரங்கள் யாவும் அப்படிப்பட்டனவே என்று சொன்னேன். Grammar, dictionary, யாப்பிலக்கணம் இதுகளும்கூட அப்படிப்பட்டவை என்பதால்தான் சதுர்தச வித்யா ஸ்தானங்களில் இவற்றை வைத்தார்கள் என்று சொன்னேன். இப்போது, பூர்வ மீமாம்ஸையில் உள்ள கடவுள் தத்துவம் என்ன?

இதைத் தெரிந்து கொள்ளும் முன் நம் ஆசார்யாள் பூர்ணமாக ஸம்மதித்து பாஷ்யம் பண்ணிப் பிரசாரம் செய்த வேதாந்தத்தில் (உத்தர மீமாம்ஸையில்) கடவுள் தத்துவம் எப்படியிருக்கிறதென்று பார்த்து விடலாம். நமக்கு முக்கியம் ஆசார்யாள்; ஆசார்யாளுக்கு முக்கியம் வியாஸாசார்யாளுடைய பிரம்மஸூத்ரம். அது என்ன சொல்கிறது?

‘ஈச்வரன் யார்? அவனுக்கு உரிய லக்ஷணங்கள் என்ன?’ என்பதைப் பற்றி வேதாந்தத்தை விளக்கும் முக்யமான சாஸ்திரமாக வியாஸாசாரியாள் பண்ணின பிரம்ம ஸூத்ரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

பிரம்மஸூத்ரம் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்கிறபோது, “கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத்” என்கிறது. சாஸ்திரங்கள் அநேக விதமான கர்மாக்களை ஒரு ஜீவனுக்கு விதித்திருப்பதால் அவன் காரியம் செய்ய அதிகாரம் பெற்ற “கர்த்தா” என்று இதற்கு அர்த்தம். ஆனால் ஜீவன் காரியாதிகாரியான கர்த்தா மட்டுமேதான்; பலனுக்கு அதிகாரியில்லை. அதாவது, அவன் தானே தன் காரியங்களுக்குப் பலனைக் கொடுத்துக் கொள்ள முடியாது. அப்படிக் கொடுப்பது லோகத்தையே உண்டு பண்ணியிருக்கிற ஜகத்கர்த்தாவான ஈச்வரன்தான். (இந்தக் ‘கர்த்தா’வை எடுத்துக் கொண்டுதான் அந்நிய மதஸ்தர்களும் ‘கர்த்தர்’ என்கிறார்கள்.) ஜீவாத்மாவும் ஒரு தினுஸில் கர்த்தாவாயிருந்தாலும் அவன் செய்கிற நல்ல காரியம், தப்புக் காரியம் எல்லாவற்றுக்கும் தகுந்தபடி பலனைக் கொடுப்பது பரமாத்மாவான ஈச்வரன்தான். இதையும் பிரம்ம ஸூத்ரம் சொல்கிறது – “பலமத உபபத்தே:” என்று.

கர்ம பலன்களைக் கொடுக்கிற “பல தாதா” ஈச்வரன். மனோ, வாக்கு, காயங்களினால் நல்லதை நினைக்கிறோம்; செய்கிறோம். கெட்டதையும் நினைக்கிறோம்; செய்கிறோம். இவை எல்லாவற்றையும் ஈச்வரன் கவனித்துக் கொண்டிருந்து அந்தந்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கிறான். இப்படி, கர்த்தாவான ஜீவாத்மாவுக்குப் பலதாதாவாக இருப்பது, ஜீவாத்மாக்கள் காரியம் பண்ணும் ஜகத்தின் கர்த்தாவாகவே இருப்பது – என்ற இரண்டு லக்ஷணங்கள் ஈச்வரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது நம் ஆசார்யாளுடைய வேதாந்த மதமாகிய உத்தர மீமாம்ஸைப்படி.

‘மீமாம்ஸை’ என்றே வழங்கும் ‘பூர்வ மீமாம்ஸை’யில் – அதாவது இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற வேத உபாங்கத்தில் – ஈச்வரனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?

நம் தேசத்தில் வேதத்தை அநுசரித்துக் கொண்டிருக்கும் மதஸ்தர்களில்தான் ஸாங்கியர், மீமாம்ஸகர் என்ற இரண்டு வகையினரும் உள்ளனர். அவர்களில் ஸாங்கிய மதத்தைச் சேர்ந்தவர், ‘ஈச்வரன் ஜகத்துக்குக் கர்த்தா அல்ல’ என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள். ‘ஈச்வரன் ஞானஸ்வரூபி. இந்த ஜகத் வெறும் கல் மண்ணாலாகிய ஜடப் பொருள். ஞானப் பொருள் ஜடப் பொருளுக்குக் காரணமாகாது. ஆகவே ஈச்வரனை ஜகத்துக்குக் கர்த்தா என்று சொல்வது தப்பு. ஈச்வரன் கர்த்தாவே அல்ல’ என்று ஸாங்கிய மதஸ்தர் நிர்த்தாரணம் பண்ணப் பார்க்கிறார்கள்.

ஜகத்தில் பட்டுக்கொள்ளாமலும், காரியமே இல்லாமலும் கேவல (சுத்த) ஞானமாயிருக்கிற ஈச்வரனை ஸாங்கியர்கள் ‘புருஷன்’ என்பார்கள். இந்தப் புருஷன்தான் நம் ஆசார்யாள் முடிந்த முடிவாகச் சொல்லும் நிர்குணப் பிரம்மம். ஆனாலும் ஆசார்யாள் இதுவே மாயையினால் ஸகுணப் பிரம்மமான ஈச்வரனாகவும் இருந்து கொண்டு ஜகத் ச்ருஷ்டி முதலான வியவகாரங்களைச் செய்வதாகத் தோன்றுகிறது என்று சொல்லி ஸாங்கியர்களை ஆக்ஷேபித்தார்.

மீமாம்ஸகர்கள் வேதத்தில் சொல்லியிருக்கும் கர்மாநுஷ்டானங்களுக்கு மட்டுமே பிராதான்யம் கொடுப்பவர்கள். ‘ஜகத் ச்ருஷ்டிக்கு ஈச்வரன் கர்த்தாவா இல்லையா?’ என்பதைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் இது அவசியமில்லாத விஷயம். ஆனால் ‘ஈச்வரன் பலதாதா அல்ல’ என்பதை மீமாம்ஸகர்கள் பலமாகச் சொன்னார்கள். இவர்கள் ஜகத்துக்கு ஈச்வரன் கர்த்தாவா அல்லவா என்று சண்டை போடவில்லை. “நாம் செய்கிற நல்ல காரியங்களுக்கும் கெட்ட காரியங்களுக்கும் ஏற்ற பலனைக் கொடுக்கிறவன் ஈச்வரன் என்பது தப்பு. அவன் பலதாதா அல்ல; அந்தந்தக் காரியமே அதனதன் பலனைக் கொடுத்துக் கொள்கிறது” என்றார்கள்.

ஆகவே ஈச்வரனைப் பற்றி நம்முடைய வேதத்திலும் பிரம்மஸூத்திரத்திலும் சொன்ன இரண்டு லக்ஷணங்களையும் இந்த ஸாங்கிய மதஸ்தர்கள், மீமாம்ஸகர்கள் ஆகிய இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்றாகத் தள்ளிவிட்டார்கள்.

மீமாம்ஸகர்கள் ஈச்வரன் பலதாதா அல்ல என்று சொன்னதற்குக் காரணம், நாம் செய்கிற கர்மாக்களே நமக்குப் பலனை அளிக்கின்றன என்று அவர்கள் கருதியதனால்தான். வேத சாஸ்திரங்கள் எந்தக் கர்மாவை அநுஷ்டித்தால் புண்ணியம் வரும் என்று சொல்லியிருக்கின்றனவோ அந்தக் கர்மாவை அநுஷ்டித்தால் புண்ணியம் வருகிறது. எதைச் செய்தால் பாவம் ஸம்பவிக்கும் என்று அவை சொல்லுகின்றனவோ அதைச் செய்தால் பாவம் ஸம்பவிக்கிறது. இப்படி நாம் செய்கிற கர்மாக்களே நமக்குப் பலனை அளிக்கின்றனவே தவிர ஈச்வரன் பலதாதா அல்ல என்று இவர்கள் சொன்னார்கள்.

வேதத்தை ஒப்புக் கொண்டிருக்கிற மதங்களுக்குள்ளேயே, ‘ஈச்வரன் ஜகத்துக்குக் கர்த்தா அல்ல. அவன் பலதாதா அல்ல’ என்று சொன்ன மதங்கள் இந்த ஸாங்கிய மதமும் மீமாம்ஸக மதமுந்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதத்தி   ன் சட்ட விளக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பௌத்தத்தை வென்ற நியாமும் மீமாம்ஸையும்
Next