சந்தஸ் சாஸ்திரத்தின் உபயோகம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரு மந்திரம் உருவான பின், அதன் சரியான உச்சாரணத்துக்கு ரக்ஷையாக இருப்பது சிக்ஷா சாஸ்திரம். ஆனாலும் அந்த மந்திர ரூபமே சரியா என்று பார்ப்பதற்கு ரக்ஷையாக இருப்பது சந்தஸ் சாஸ்திரந்தான். மந்திர ரூபம் தப்பாக வரவே வராதுதான். ஏனென்றால், அது ரிஷிகள் யோசித்து யோசித்துப் பண்ணினதே இல்லை. பகவானே ஸ்புரிக்க வைத்தவைதான் மந்திரங்கள். அதனால் பகவத் ஸ்ருஷ்டியில் மநுஷ்யன், மிருகம், மரம் ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிப்படி தாமே சரியான ரூபத்தோடு உண்டாகிற மாதிரி மந்திரங்களிலும் சந்தம் தானே சரியாகத்தான் இருக்கும். ஆனாலும் இப்போது நமக்கு ஒரு மந்திரம் அல்லது வேத ஸூக்தம் சொல்லிக் கொடுக்கப்படுகிறபோது அது சரியான மூல ரூபத்தில் வந்திருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள சந்தஸ் சாஸ்திரந்தான் உதவி செய்கிறது. அதன் மீட்டரிலுள்ள அக்ஷரங்களை எண்ணிப் பார்த்து சரியாக இல்லாவிட்டால், விஷயம் தெரிந்தவர்களைக் கேட்டு, அதன் சரியான ரூபத்தை தெரிந்து கொள்ளலாம்.

தாமாகத் தோன்றிய மந்திரங்கள் தவிர கவிகளே உட்கார்ந்துகொண்டு இயற்றுகிறபோது சந்தஸின் கணக்குத்தான் அவர்கள் எண்ணத்துக்கு ச்லோக ரூபம் தருவதற்கு வகை செய்கிறது.

பாட்டுக்குத் தாளம் மாதிரி ச்லோகங்களுக்கு சந்தஸ் என்பது.

இப்படி ஒரு கணக்கில் கொண்டு வருவதால்தான் நிர்ணயமான ரூபம் கிடைக்கிறது. அது மனப்பாடம் பண்ணவும் ஸெளகரியம் செய்கிறது. ஆனால் எதிலுமே கட்டுப்பாடு வேண்டாம் என்கிற நவீன ஸமுதாயத்தில், கவிதைகளுக்கும் மீட்டர் வேண்டாம் என்று மனம் போனபடி பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். கட்டுப்படுவதிலேயே தான் பெரிய ஸ்வதந்திரத்துக்கு வழி இருக்கிறது என்று இந்த நாளில் தெரியவில்லை.

***
வேதத்தில் ஒரு அக்ஷரங்கூடக் கூட்டவும் குறைக்கவும் முடியாதபடி மூல ரூபத்தை ரக்ஷித்துத் தருவது சந்தஸ் சாஸ்திரந்தான். ஆத்மார்த்தமான வேதத்தில் ஒரு சப்தம் கூட அதிகமாகவோ, குறைந்து விடவோ அநுமதிக்கக்கூடாது அல்லவா?

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சில சந்த வகைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதத்தின் பாதம், மந்திரத்தின் மூக்கு
Next