சில சந்த வகைகள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த்ர வஜ்ரா, உபேந்தர வஜ்ரா, ஸ்ரக்தரா என்றெல்லாம் காவியங்களிலும் ஸ்தோத்திரங்களிலும் பல சந்தஸ்கள் இருக்கின்றன. சிலது ரொம்பச் சிக்கலாக மஹா புத்திமான்களாலேயே இயற்றக் கூடியதாக இருக்கும்.

ஒரு பாதத்துக்கு எட்டு அக்ஷரம் இருப்பதை ‘அநுஷ்டுப்’ என்றேன். ஒன்பது அக்ஷரம் இருந்தால் ‘ப்ருஹதீ’ என்று அந்த சந்தஸுக்கு பெயர். ‘பங்க்தி’ என்பது பாதத்துக்குப் பத்து அக்ஷரம் கொண்ட மீட்டர். ‘த்ரிஷ்டுப்’ என்பது பதினொன்று கொண்டது. பன்னிரண்டு அக்ஷரம் கொண்டது ‘ஜகதீ’. இப்படியே ஒரு பாதத்துக்கு 26 அக்ஷரம் கொண்ட [‘உத்க்ருதி’ என்ற சந்தஸில் ‘புஜங்க விஜ்ரும்பிதம்’ என்ற வகையில் அமைந்த] ச்லோகம் வரை பல மீட்டர்கள் உண்டு. அதற்கு மேல் போய்விட்டால் ‘தண்டகம்’ என்று பெயர். தண்டகத்தில் பல வகைகள் உண்டு. “திருத்தாண்டகம்” என்று அப்பர் பாடினது தண்டக சம்பந்தமுள்ளதுதான்.

வ்ருத்தங்களுக்குப் பேர் அழகாகவும், பொருத்தமாகவும், காவிய நயமுள்ளதாகவும் இருக்கும். புலி விளையாட்டாகப் பாய்ந்து பாய்ந்து போகிற மாதிரி ஒரு சந்தஸில் அக்ஷரங்கள் போகும். அதற்கு ‘சார்தூல விக்ரீடிதம்’ என்றே பேர். ‘சார்தூலம்’ என்றால் புலி; ‘விக்ரீடிதம்’ என்றால் விளையாட்டு. இது பாதத்துக்குப் பத்தொன்பது அக்ஷரம் கொண்ட ‘அதி த்ருதி’ மீட்டர்களில் ஒரு வகை. ஒவ்வொரு பாதத்துக்குள்ளும் இந்த 19 அக்ஷரங்கள் 12 என்றும் 7 என்றும் பிரியவேண்டும். ஆச்சார்யாளின் “சிவாநந்த லஹரி” யில் 28-லிருந்து பல ச்லோகங்கள் இப்படி அமைந்தனவே. காமாக்ஷியைப் பற்றியதான “மூக பஞ்சசதீ”யில் ‘ஸ்துதி சதக’ ஆரம்ப ச்லோகங்கள் இந்த வ்ருத்தம்தான். கடைசி நூறான ‘மந்தஸ்மித சதகம்’ முழுதும் இந்த வ்ருத்தமே. பாம்பு ஊர்ந்து போகிற மாதிரி சப்த அமைப்பு உள்ள சந்தஸுக்கு ‘புஜங்க ப்ரயாதம்’ என்று பெயர். புஜங்கம் என்றால் பாம்பு தானே? ஆசார்யாளின் ‘ஸுப்ரமண்ய புஜங்கம்’ இந்த மீட்டரில் இருப்பதுதான். இது பாதத்துக்குப் பன்னிரண்டு அக்ஷரமுள்ள ‘ஜகதீ’யில் ஒரு வகை. இந்தப் பன்னிரண்டும் சரியாக ஆறு ஆறாகப் பிரிந்திருக்க வேண்டும் என்பது விதி:

ம-யூ-ரா-தி-ரூ-டம்

ம-ஹா-வா-க்ய-கூ-டம்

என்கிற மாதிரி.

ஆசார்யாளின் “ஸெளந்தர்ய லஹரி” ஸ்தோத்திரமானது ‘சிகரிணி’ விருத்தத்தில் அமைந்ததாகும். இதிலே பாதத்துக்குப் பதினேழு எழுத்து. ‘அத்யஷ்டி’ என்பது இப்படிப்பட்ட பதினேழு எழுத்துப் பாத வ்ருத்தங்களுக்குப் பொது பெயர். இந்தப் பதினேழு எழுத்தும் ஆறு – பதினொன்று என்று பிரிந்து பிரிந்து வந்தால் அதற்கு ‘சிகரிணி’ என்று பெயர். “மூகபஞ்சசதீ”யில் ‘பாதாரவிந்த சதகம்’ இந்த மீட்டரில் இருப்பதே. வாய் கொள்ளாமல், ச்லோகங்களைக் கடல் மடை திறந்தது போல் சொல்லிக் கொண்டே போவதற்கு ‘ஸ்ரக்தரா’ ரொம்பவும் ஏற்றதாகும். (‘ப்ரகிருதி’ என்ற) 21 அக்ஷரம் கொண்ட பாதத்தை உடைய இந்த மீட்டரில், ஒவ்வொரு பாதமும் மூன்று ஏழு அக்ஷரங்களாகப் பிரிந்திருக்கும். ஈச்வரன், விஷ்ணு இருவரைக் குறித்தும் ஆசார்யாள் செய்திருக்கிற பாதாதி கேச, கேசாதி பாத வர்ணனை ஸ்தோத்திரங்களை இந்த வ்ருத்தத்திலேயே பாடியிருக்கிறார்.

முதலில் ‘இந்த்ர வஜ்ரா’ என்றேனே, அது பாதத்துக்குப் பதினொரு அக்ஷரம் கொண்ட ‘த்ருஷ்டுப்’ என்ற சந்தஸில் ஒரு வகை. இந்தப் பதினொரு அக்ஷரத்திலேயே வேறு விதமானது உபேந்த்ர வஜ்ரா. இரண்டையும் கலந்தது ‘உபஜாதி’. காளிதாசனின் ‘குமார ஸம்பவம்’ இந்த உபஜாதி மீட்டரில் தான் ஆரம்பிக்கிறது.

இவையெல்லாம் வேதத்துக்குப் பிற்பட்ட காவியங்களிலும் ஸ்தோத்திரங்களிலும் வருகிற சந்தஸ்கள். வேதத்திலும் வருவதான சந்தஸ்கள்: ‘காயத்ரீ’, ‘உஷ்ணிக்’, ‘அநுஷ்டுப்’, ‘ப்ருஹதீ’, ‘பங்க்தீ’, ‘த்ருஷ்டுப்’, ‘ஜகதீ’ முதலானவை.

‘காயத்ரீ’ மஹா மந்திரம், அதுவே மந்திரராஜன் என்று கொண்டாடுகிறமே, அப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்துக்கு அது அமைந்துள்ள ‘காயத்ரீ’ என்ற சந்தஸை வைத்தே பெயர் அமைந்திருக்கிறது. ஸாதாரணமாக ஒரு மந்திரம் என்றால், அது எந்த தேவதையைக் குறித்ததோ அதை வைத்தே பேர் சொல்வோம். சிவ பஞ்சாக்ஷரீ, நாராயண அஷ்டாக்ஷரீ, ராம த்ரயோதசீ என்று தேவதையின் பெயரையும் மந்திரத்திலுள்ள அக்ஷரங்களின் எண்ணிக்கையையும் சேர்த்துச் சொல்கிறோம். காயத்ரீ மந்திரத்துக்கு தேவதை “ஸவிதா”. காயத்ரீ என்பது மீட்டரின் பெயர்தான். ஆனாலும் மீட்டரையே வைத்து மந்திரத்துக்குப் பேர் சொல்கிறோம். சப்தத்துக்கும் ஸ்வரத்துக்குமே தனியாக தெய்விக சக்தி உண்டு என்பதுபோல், சந்தஸின் அமைப்புக்கும் இருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

‘நாலு கால் சேர்ந்தால் ஒன்று. அதனால் ஒரு மந்திரமானாலும், ச்லோகமானாலும் நாலு பாதம் உண்டு’ என்றேன். இதற்கு வித்யாஸமாக, இந்த காயத்ரீ மந்திரத்தில் மூன்று பாதங்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றும் எட்டெழுத்துக்கொண்ட மூன்றே பாதங்களாலான 24 அக்ஷர மீட்டராகவே வேதத்திலுள்ள இந்த ‘காயத்ரீ’ இருக்கிறது. மூன்று பாதம் இருப்பதால், இதை ‘த்ரிபதா காயத்ரீ’ என்கிறோம். வேறு பல காயத்ரீ வகைகளும் உண்டு. வேதத்தின் முதல் மந்திரமான ‘அக்னீமீளே’ ஸூக்தமே காயத்ரீ சந்தஸில் அமைந்ததுதான்.

காவிய, ஸ்தோத்திரங்களில் 24 அக்ஷர காயத்ரீயானது தலைக்கு ஆறு அக்ஷரமுள்ள நாலு பாதங்களாகப் பிரியும். பாதமொன்று ஏழு அக்ஷரமுள்ள 28 அக்ஷர வ்ருத்தம் “உஷ்ணிக்” எனப்படும்.

இது வரை சொன்னதெல்லாம் அக்ஷரக் கணக்கு. அதாவது குறில் நெடில் என்று வித்யாஸம் பார்க்காமல் அ, ஆ இரண்டையும் ஒரே அக்ஷரமாகக் கணக்குப் பண்ணும் முறை. மற்ற இடங்களில் குறிலை ‘ஹ்ரஸ்வம்’ என்றும், நெடிலை ‘தீர்க்கம்’ என்றும் சொன்னாலும் இந்த prosody-ல், அதாவது சந்தஸ் சாஸ்திரத்தில், குறிலை ‘லகு’ என்றும், நெடிலை ‘குரு’ என்றுமே சொல்வது வழக்கம். குறில் நெடில் வித்யாஸமில்லாதவையே ‘வ்ருத்தம்’ என்றும், வித்யாஸம் பார்த்து மாத்திரைக் கணக்கெடுப்பதை ‘ஜாதி’ என்றும் சொன்னேன். இப்படிப்பட்ட ‘ஜாதி’களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்று கணக்கு. குறிலே இன்னின்ன எழுத்துக்கு முன்னால் வந்தால் இரண்டு மாத்திரை என்றும் அதில் உண்டு. ஒவ்வொரு பாதத்திலும் இத்தனை அக்ஷரம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், இத்தனை மாத்திரை இருக்க வேண்டும் என்பது விதி.

முன்னமேயே சொன்ன ‘ஆர்யா’ என்ற மீட்டரில்தான் “மூக பஞ்சசதீ”யின் ஆரம்பமான ‘ஆர்யா சதகம்’ உள்ளது. ரொம்பவும் உயர்ந்தவளாதலால் ‘ஆர்யை’யாக இருக்கப்பட்ட அம்பாளை ஸ்தோத்திரம் பண்ணுவதோடு, மீட்டரும் ஆர்யாவாக இருப்பதாலேயே ‘ஆர்யா சதகம்’ என்று பேர். இதிலே அக்ஷரங்களைக் கணக்குப் பண்ணாமல், மாத்திரைகளைக் கணக்குப் பண்ணினால்தான் ச்லோகங்கள் ஒரு கிரமத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரியும். அக்ஷரக்கணக்குப் பண்ணினால், “இதென்ன, ச்லோகத்துக்கு ச்லோகம் மீட்டர் வித்யாஸமாயிருக்கிறதே?” என்று தோன்றும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is காவிய சந்தம் பிறந்த கதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சந்தஸ் சாஸ்திரத்தின் உபயோகம்
Next