பாரத தேசத்தின் தனித்தன்மை

பாரத தேசத்தின் தனித்தன்மை

அது ஸரி, பாரததேசத்தை விட்டு தெய்வ பிம்பங்கள் போகப்படாது என்று பிள்ளையார் ஏன் நினைத்தார், அது ஸரிதானா, நியாயந்தானா என்றால் -

ஒரு மரத்துக்கு ஜலம் விடுவதென்றால் கிளையிலா விடுவார்கள்? பூ, காய் மேலா விடுவார்கள்? வேரிலேதானே விடுவார்கள்? வேரிலே விட்டால் கிளை, இலை, பூ, காய் எல்லவாற்றுக்கும் ஜலம் போய்விடுகிறதோ இல்லியோ? அப்படித்தான் தெய்வ ஸம்பந்தமான விஷயங்களுக்கெல்லாம் லோகம் என்கிற இந்தப் பெரிய விருக்ஷத்திற்கு இந்த பாரத தேசமே வேராக இருக்கிறது. இலைமேல் பூ, காய் மேலும் கொஞ்சம் ஜலம் தெளித்தால் அதுகளும் அதனால் கொஞ்சம் பச்சென்று ஆனாலும், வேரில் விட்டால்தான் அந்த இலை, பூ முதலானதும் உள்ளே ஸத்துப் பெறுகிறது. அந்த மாதிரி வெளி தேசங்களில் செய்யும் பூஜாதிகளாலும் அந்த தேசங்களுக்குக் கொஞ்சம் நன்மை உண்டாகுமானாலும், இந்த பாரத சேதத்தில் செய்கிறதால்தான் அந்த தேசங்களுக்கும் உள்ளூரப் புஷ்டியான பலன் கிடைக்கும்.

லோக ஸ்ருஷ்டியில் பகவான் ஒவ்வொரு தேசத்தில்தான் நல்ல க்ளைமேட், ஒவ்வொன்றில்தான் ந்லல பயிர் பச்சை, ஒவ்வொன்றில்தான் வைரம், தங்கம், இன்னும் விலை உயர்ந்த தாதுப் பண்டங்கள் என்று வைத்திருக்கிறானோ இல்லியோ? சில தேசங்களை ஒரே குளிர் என்றும் இன்னும் சிலதை ஒரே கொளுத்தல் என்றும் வைத்திருக்கிறான். நில வளம், நீர் வளம், தாது வளம் இல்லாமல் அநேக தேசங்களை வைத்திருக்கிறான். வளமுள்ள தேசங்கள் வளமில்லாத தேசங்களுக்கு ஏற்றுமதி பண்ணி உதவும்படி வைத்திருக்கிறான். அப்படி தெய்வ ஸம்பந்தமான விஷயங்களுக்கு இந்த (பாரத) தேசந்தான், ஒரு பவுர் ஹவுஸ். ஊர் பூராவுக்கும் லைட் கொடுக்கிற மாதிரி லோகம் பூராவூக்கும் தெய்வீகத்தை ஸப்ளை செய்யவேண்டுமென்று வைத்திருக்கிறான். மநுஷ்ய தேஹத்தில் ஹ்ருதயம் என்று முக்யமான அங்கமாக ஒன்றை வைத்து அதுதான் தேஹம் பூராவூக்கும் ரத்தத்தை ஸப்ளை செய்து ரக்ஷிக்கும்படியாக அவன் வைத்திருக்கிற மாதிரியே இந்த விச்வ விராட் ஸ்வரூபத்தில் ஸகல தேசங்களுக்கும் தெய்வ ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான, ஆத்ம ஸம்பந்தமான ஜீவ சக்தியை ஸப்ளை செய்து ரக்ஷிக்கிற ஹ்ருதயமாக நம்முடைய தேசத்தை வைத்திருக்கிறான்.

இப்படிச் சொன்னதால் மற்ற தேசங்களில் உபாஸனையே நடக்கவேண்டாம் என்று சொன்னதாக ஆகாது. தனித் தனியாக ஒவ்வொரு அங்கத்தையும் ரக்ஷிப்பதற்காக அந்தந்த அங்கங்கள் மேலேயே மருந்து போட்டுக் கொள்ளவும் செய்கிறோமல்லவா? ஒரு செடி, மரம் என்று எடுத்துக் கொண்டாலும் வேரில்தான் ஜலம் விடுகிறோமென்றாலும் பூச்சி, பொட்டு அரிக்காமலிருப்பதற்கா இலை, காய் முதலானவற்றின் மேலேயும் மருந்து தெளிக்கிறோமல்லவா? அந்த மாதிரி அந்தந்த தேசத்திலும் தெய்வாநுக்ரஹ சக்திக்கு ஹானி ஏற்படாமலிருப்பதற்கு அங்கங்கேயும் வழிபாடு - உபாஸனை நடக்க வேண்டியதுதான். இருந்தாலும் எந்த அங்கத்திற்கு ஹானி வந்தாலும் ஹ்ருதயம் பழுதாகாமல் அதற்கு ரத்த ஸப்ளை செய்தால் தான் வியாதி நிவாரணமாகிற மாதிரி நம்முடைய நாட்டில் விதிவத்தாக வழிபாடுகள் நடந்தால்தான் நமக்கு மாத்திரமில்லாமல் ஸர்வ தேசங்களுக்கும் ஷேமமுண்டாக முடியும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is விநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  விதிமுறை வழிபாடும், அன்பு வழிபாடும்
Next