விநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்

விநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்

ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்தல புராணத்தில் எப்படி இருக்கிறதோ, ஞாபகமில்லை. ஆதியிலிருந்தே அந்த மூர்த்திக்கு ரங்கராஜப் பேர் உண்டு என்றும், அவர் இருக்கும் விமானத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பேர் உண்டு என்றும் இருக்கிறதோ என்னவோ? வைஷ்ணவர்களுடைய ஸ்தல புராணமானதால் விக்நேச்வரர் ஸமாசாரம் அதில் இல்லை என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. ராமர் காலத்திலே இருந்த சோழ ராஜா.... தர்மவர்மா என்று அவனுக்குப் பேர், ஸ்ரீரங்கம் மூல ஸ்தானத்தைச் சுற்றியுள்ள ப்ராகாரத்துக்கு 'தர்மவர்மன் சுற்று' என்றே பேர், அந்த ராஜா, ரொம்ப காலமாகவே இந்த இக்ஷ்வாகு வம்ச குலதேவதை தன்னுடைய ராஜ்யத்தில் எழுந்தருளணும் என்று தபஸ் இருந்ததால், விபீஷணர் கொண்டு வந்த விக்ரஹம் இங்கே அவர் சிரம பரிஹாரத்திற்காக இறக்கிவைத்தபோது இந்த இடத்திலேயே நிலைக்குத்திட்டுவிட்டது என்றுதான் அதில் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்று ஞாபகம் .

ஆனால் லோகத்தில் பிரஸித்தமாயிருப்பது விக்நேச்வரரின் லீலையால் விக்ரஹம் ப்ரதிஷ்டை ஆனதாகத்தான். நம்முடைய மதத்தில் இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கும் சைவ - வைஷ்ணவர்களை. ஸமரஸப்படுத்துவதாக இந்தக் கதை இருப்பதால் மனஸுக்கு ஹிதமாயிருக்கிறது. மேலே கதை போயிருக்கிற போக்கு அதற்கு இருக்கும் ஸத்யத்வத்தையும் காட்டுவதாக இருக்கிறது.

கதை எப்படிப் போனதாகப் பார்த்தோம்? பிள்ளையார் ஓடு ஓடு என்று ஓடி மலைக்கோட்டை உச்சிக்குப் போனார், விபீஷணர் துரத்து துரத்து என்று துரத்திக்கொண்டே போய் சிரஸிலே குட்டினார் என்று (பார்த்தோம்) . அதற்கேற்க, உச்சிப் பிள்ளையார் பிம்பத்தின் சிரஸில் இன்றைக்கும் குட்டுப் பட்டதில் உண்டான வடு இருக்கிறது. பிள்ளையார் மலை உச்சியில் இருப்பதே அபூர்வம். விபீஷணரிடம் அகப்படாமலிருக்கத்தான் அவர் மலை ஏறி வந்து அங்கே அப்படியே ஸ்திரவாஸம் கொண்டுவிட்டார் என்பது பொருத்தமாக இருக்கிறது.

இதிலேயே பெரிய யோக சாஸ்திர தத்வார்த்தமும் இருக்கிறது. அடி மூலாதாரத்தையும் உச்சி ஸஹஸ்ராரத்தையும் சேர்த்து வைக்கிற தத்வம். அந்த விஸ்தாரம் இப்போது வேண்டாம்.

ஸ்ரீரங்கநாதருக்கு விக்நேச்வர ஸம்பந்தம் இருப்பதில் இன்னொரு பொருத்தமும் உண்டு. அகஸ்தியர் கமண்டலுவுக்குள் அடைத்து வைத்திருந்த காவேரியை வெளியிலே ஆறாகப் பிரவஹிக்கப் பண்ணினவரே விக்நேச்ரவர்தான். காக்காய் ரூபத்திலே போய்க் கமண்டலுவைக் கவிழ்த்து ஓடவிட்டார் என்று கதை. காக்காயை அக்ஸ்த்யர் துரத்திக்கொண்டு போனார். அப்போது காக்காய் பிரம்மசாரியாக மாறிற்று. விபீஷணர் கதையிலும் பிரம்மசாரியாக அவர் ஆனதைப் பார்க்கிறோம்!இப்போது விபீஷணர் அவரைக்குட்டப் போனார் என்று பார்த்தோம். பூர்வத்திலும் அவரைக் குட்டத்தான் அகஸ்தியர் கையை முஷ்டியாக மடக்கி கொண்டு துரத்தினார்.

இப்போது குட்டுப்பட்ட அப்புறம் ஸ்வய ரூபம் காட்டிய விக்நேச்வரர் அப்போது குட்டுப் படுகிறதற்கு முந்தியே மஹர்ஷிக்கு திவ்ய ரூபத்தில் தர்சனம் கொடுத்துவிட்டார். "ஐயோ!உன்னையா குட்டப் போனேன்? இந்த அபசாரத்துக்காக

என்னையேதான் குட்டிக்கணும்" என்று அகஸ்தியர் இரண்டு கையாலும் இரண்டு பொட்டிலும் குட்டிக்கொண்டார். அவருக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்த பிள்ளையார் அப்போதுதான் அவர் குட்டிக் கொண்டதை தம்முடைய வழிபாட்டிலேயே ஒரு முக்யமான அம்சமாகப் பண்ணி ஸகல ஜனங்களும் அப்படிப் பண்ணணும் என்று வைத்தார் என்று ஒரு கதை.

இந்த இரண்டு கதைகளிலும் இருக்கிற ஒற்றுமை ஒன்றை மற்றது 'காம்ப்ளிமென்ட்' பண்ணுவது ஆகியவற்றுக்குச் சிகரமாக, மஹாவிஷ்ணு, காவேரி, விக்நேச்வரர் மூவரையும் ஸம்பந்தப்படுத்துவதாக ஒன்று வருகிறது. ஆதியில் விக்நேச்வரர் கமண்டலுவைக் கவிழ்த்துக் காவேரியாக ஓட வைத்தது எங்கே என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஸஹ்யாத்ரி என்று இருக்கிற இடத்தில் ஒரு நெல்லி மரத்தின் அடியிலிருந்துதான், நெல்லி மரத்தடிதான் காவேரிக்கு உத்பத்தி (உற்பத்தி) ஸ்தானம். அந்த நெல்லி மரம் ஸாக்ஷ£த் மஹாவிஷ்ணுதான். பெருமாள்தான் அப்படி விருக்ஷரூபத்தில் நின்றார். விஷ்ணு மாயையின் ஒரு அம்சமே லோபாமுத்ரை என்ற ஸ்த்ரீயாகி அந்த லோபாமுத்ரை அகஸ்த்யருக்குப் பத்னியாகி அப்புறம் அவருடைய கமண்டலு தீர்த்தமாக ஆனது.

அவள் காவேரியாக பகவானின் பாதத்திலிருந்து பிரவஹித்தபோது அவர் அவளிடம் பரமப்பிரியத்துடன் "கங்கையும் என்னுடைய பாத தீர்த்தத்திலிருந்துதான் பெருக்கெடுத்து ஓடினாள். அவளைக் காட்டிலும் c எனக்கு ப்ரியம். ஆகையினோலே, அவளுக்கு என் பாத ஸ்பரிசம் மாத்திரம் கிடைத்ததென்றால் உனக்கோ என் ஸர்வாங்க ஸ்பர்சமும் கிடைக்க அநுக்ரஹிக்கிறேன். இப்போது மரத்தடி வேரிலிருந்து புறப்பட்ட உனக்கு என் பாத ஸபர்சம் கிடைத்திருக்கிறது. அப்புறம் c மஹாநதியாக ஓடி வரும்போது இரண்டாகப் பிரிந்து அப்புறம் ஒன்று சேர்கிற தீவில் இரண்டு ஹஸ்தத்தாலும் என்னை அப்படியே முழுசாக இரண்டு பக்கமும் அணைத்துக் கொள்வாய்" என்றார்.

அவர் அன்றைக்கு அப்படி வரம் தருவதற்குப் 'பிள்ளையார் சுழி' போட்டவர் அவருடைய பாத ரூபமான நெல்லி மரவேரில் கமண்டலுவைக் கொட்டிக் கவிழ்த்த பிள்ளையார் தான். ஆகையினாலே அவரேதான் உபய காவேரியாக இரட்டைப் பெருக்காக்கி அவள் ஓடிய இடத்தில், அவள் இரண்டு ஹஸ்தத்தாலும் ஆலிங்கனம் செய்து கொள்ளும்படியாக ராமர் விபீஷணனக்குக் கொடுத்த ஜீவ சைதன்யமுள்ள பெருமாள் விக்ரஹத்தை ஸ்தாபித்தார் என்பது, (சிரித்து) புலவர்கள் பாஷையில், 'சாலப் பொருத்தம்' தானே?

இன்னொரு பொருத்தம் - சைவத்தையும வைஷ்ணவத்தையும ஸம எடை கட்டுவதான பொருத்தம் - சொல்கிறேன். ராவண ஸம்ஹாரத்திற்கு அப்புறம் விபீஷணர் ராமரிடமிருந்து அவருடைய மூல ரூபமான ரங்கநாதருடைய விக்ரஹத்தைப் பெற்றுக்கொண்டாரென்றால், அந்த ராவணனும் கைலாஸத்தில் பரமசிவனிடமிருந்து அவருடைய ஸ்வரூபமேயான ஆத்ம லிங்கததைப் பெற்றுக்கொண்டவன்தான். அதை அவன் லங்ககைக்கு எடுத்துக்கொண்டு போகும்போது நம் கதை மாதிரியே அதை பூமியில் வைக்கப்படாது என்று ஸ்வாமி ஆஜ்ஞை பண்ணியிருந்தார். அப்போதும் பிள்ளையார்தான் இதே மாதிரிக் குறும்பு பண்ணிக் கைலாஸ லிங்கம் இந்த பாரத தேசத்தை விட்டுப் போகாமல் ரக்ஷித்துக்

கொடுத்தார். அந்த லிங்கம் பிரதிஷ்டையான இடம்தான் கோகர்ணம். கோவாவுக்குக் கீழே கர்நாடகத்தில் மேற்கு ஸமுத்ரக் கரையில் இருக்கும் மஹாஷேத்ரம். த்வாரகை மாதிரி, ராமேச்வரம் மாதிரி அது ஒரு திவு. அங்கே ஸ்வாமிக்கு மஹாபலேச்வரர் என்று பெயர். பிள்ளையார் பூமியில் வைத்து லிங்கம் நன்றாக ப்ரதிஷ்டை ஆனவிட்டு ராவணன் தன்னுடைய பலம் முழுதையும் - 'ராட்சஸ பலம்' என்றே சொல்லும் அத்தனை பலத்தையும் - காட்டி அதைப் பெயர்த்தெடுக்கப் பார்த்தும் முடியவில்லை. ராவண பலத்தையும் அசக்தி ஆக்கினதாலேயே ஸ்வாமிக்கு மஹாபலேச்வரர் என்று பெயர். அண்ணன்காரன் சிவலிங்கத்தைக் கொண்டு போகவிடாமல் பண்ணியவர், தம்பி மஹாவிஷ்ணு விக்ரஹத்தைக் கொண்டு போகமட்டும் விட்டிருப்பாரா? அதனால் நம்முடைய கதை ஸத்தியமானதுதான் என்று ஆகிறது?


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தெற்கு நோக்கும் தெய்வம் மூன்று சைவ - வைணவ ஸமரஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பாரத தேசத்தின் தனித்தன்மை
Next