குரு அறிந்த அனைத்தும் சீடனுக்கு

குரு அறிந்த அனைத்தும் சீடனுக்கு

ப்ரஹ்ம வித்யைக்கே வழியோ, சிஷ்யனின் பக்குவத்தைப் பொறுத்துப் பிற்காலத்தில் அதில் சேர்ப்பதற்கு ஸஹாயம் செய்கிற மற்ற வித்யைகளுக்கு வழியோ - எதுவானாலும் ஆதியிலிருந்து நம்முடைய ஸநாதன தர்ம ஸம்பிரதாயத்தில் வந்துள்ள எந்த ஒரு குருவும் தமக்குத் தெரிந்ததை, தாம் அறிந்ததை, அநுபவித்ததைக் கொஞ்சங்கூட மிச்சம், மீதியில்லாமல் சிஷ்யனுக்குக் கொடுத்துவிடுவார். உபநிஷத்துக்களில் நாம் பார்க்கும் குருமார்களிடமெல்லாம் இந்தப் பரம ஒளதார்ய (வல்லல்தன்மை) லக்ஷணத்தைப் பார்க்கிறோம். சிஷ்யன் என்று ஒருத்தன் வந்துவிட்டால், அத்தனையையும் வாரி வழங்கியே ஆகவேண்டும் என்று எத்தனை கடமையுணர்ச்சியுடன் இருந்திருக்கிறார்கள் என்று ஆச்சர்யாமாயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு குருவாகவே இருந்த ஆசார்யாளோ 'அப்படிப் பண்ணத்தானே அவன் ஏற்பட்டிருக்கிறான்?' என்று அந்த ஆச்சர்யத்தையும் ஸஹஜமாகவே, நடைமுறையாகவே எடுத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார். முண்டகோபநிஷத் பாஷ்யத்தில் பார்த்தால் தெரியும்.

அந்த உபநிஷத்தில் முதல் ஸெக்ஷன் முடிகிற இடத்தில், நல்ல வைராக்யமுள்ள உத்தமமான ஜீவனானாலும் ப்ரஹ்மஞானம் பெறுவதற்கு குரு என்று ஒருத்தரிடம் பணிவுடன் போயே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு அப்புறம், முறைப்படி தன்னிடம் வந்த அவனுக்கு குருவும் ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு பூர்ணமாக உபதேசிப்பார் என்று சொல்லியிருக்கிறது. 'ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு உபதேசித்தார்' என்று மூலத்தில் இருக்கிறது. முன் தொடர்ச்சி பார்த்தால் 'உபதேசிப்பார்' என்றே பொதுவாக அத்தனை ஆசார்யர்களுக்கும் லக்ஷணமாக அர்த்தம் பண்ணிக்கணும் என்று புரியும். ஆசார்யாளோ, 'உபதேசிக்க வேண்டும்' என்றே குருவின் தீர்மானமான கடமையாக, ரூலாக, விதித்து பாஷ்யம் பண்ணியிருக்கிறார் - 'ப்ரோவாச' என்று மூலத்தில் இருப்பதற்கு 'ப்ரப்ரூயாத்' என்று அர்த்தம் பண்ணியிருக்கிறார்.

'உள்ளவாறு' உபதேசிப்பது என்றால் என்ன? 'தத்வத்தை எதுவும் குறைக்காமல் பூர்ணமாக உபதேசிப்பது என்று அர்த்தம். இதை 'யதாவத்' என்ற சின்ன வார்த்தையால் ஆசார்யாள் தெரிவிக்கிறார். 'முறைப்படி', 'நேர்மையாக', 'விதிவழி' என்று இத்தனை அர்த்தமும் அதற்கு உண்டு. குறைக்கவும் கூடாது, ஸொந்தச் சரக்கு, ஸொந்த அபிப்ராயம் சேர்க்கவும் கூடாது. ஸம்ப்ரதாய பூர்வமாக ப்ரஹ்ம வித்யா சாஸ்த்ரம் எப்படி வந்திருக்கிறதோ அப்படியே பூர்ண ரூபத்தில் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.

இப்படிச் சொல்கிற இடத்தில்தான் குருவின் கடமையை ஆசார்யாள் எடுத்துச் சொல்லி முடித்திருக்கிறார். 'ஆசார்யஸ்ய நியமம்' என்று அவர் சொல்கிறார். 'நியமம்' என்பதற்கு இங்கே 'கடமை' என்றே அர்த்தம். யதி நியமம், ப்ரஹ்மசாரி நியமம், க்ருஹஸ்த நியமம் என்றெல்லாம் சொல்லும்போது நியமம் என்றால் அவரவருக்கான ரூல், சட்டம் என்று அர்த்தம். அந்தச் சட்டப்படியே பண்ண வேண்டுமென்பதால் அதுவே கடமையாகிறது. ஸந்த்யாவந்தனம் பண்ணுவது ப்ரஹ்ம சாரிக்கான நியமம் என்றால் அதுவே அவன் கடமையுந்தான் என்று ஆகிறதோல்லியோ? கடமைகளையே நியமம் என்று சாஸ்த்ரபூர்வமாக

வகுத்துக் கொடுத்தார்கள். 'கட்டுப்பாடு' என்பது அதன் நேர் அர்த்தம். ரூல், 'இப்படிப் பண்ணு, இப்படிப் பண்ணாதே' என்று கட்டுப்படுத்துகிறது. கடமையும் அப்டித்தான் 'கடமையிலிருந்து மீறக்கூடாது' என்கிறோம். 'மீறுவது என்றதால் 'கட்டுக்கு அடங்கி இருக்க வேண்டும்' என்பது தொக்கி நிற்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குரு:முடிவான லக்ஷ்யத்திற்கும் இடைநிலைகளுக்கும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஆசார்யாள் விதிக்கும் ஆசாரியக் கடமை.
Next