மறுமைக்கு மஹா உபகாரம்:திருத்தலங்கள்

மறுமைக்கு மஹா உபகாரம் திருத்தலங்கள்

இம்மைக்கான இவற்றைத் தருவதோடு மட்டும் நிற்காமல் காவேரி மறுமைக்கும் பரமோபகாரம் பண்ணியிருக்கிறாள். எப்படியென்றால் River V alley Civilization என்கிறபடி ஒரு பெரிய நதியை ஒட்டிய கரைகளில்தான் கஷ்டமில்லாமல் வயிற்றுக்கானது கிடைத்துவிடுவதால் ஜனங்கள் விச்ராந்தியாக உசந்த சிந்தனைகளில் ஈடுபட்டு ஒரு பெரிய நாகரிகத்தை உண்டாக்க நிரம்ப வசதி ஏற்பட்டிருக்கிறது. அப்படி நம்முடைய கலாசாரம் உன்னதமாக ரூபமாவதற்குக் காவேரியே உபகாரம் பண்ணியிருக்கிறாள். காவேரி என்றால் முடிவாக அவளைப் பாயவிட்ட விக்நேச்ரவரர்தான்.

இந்த தேசத்தினுடைய ஆத்மிக பாரம்பர்ய விசேஷத்தினால் இங்கே ஒரு கலாசாரம் உண்டாகிறதென்றால் அது ஏதோ கண்ணுக்கு, காதுக்கு மாத்ரம் சில்பம், சித்ரம், நாட்டியம், கானம் என்று முடிந்து போகாமல் இவற்றின் வழியாக ஆத்மாவை உசத்திக் கடைத்தேற்றுவதாகவே இருக்கும். இங்கேதான் காவேரி - via காவேரி, விக்நேச்வரம் - நம்முடைய மறுமைக்கும் பரமோபகாரம் பண்ணுவது. நம்முடைய சில்பம், சித்ரம், ஆடல், பாடல் முதலான எல்லாக் கலைகளும், ஸயன்ஸ்களுங்கூடத்தான், அர்ப்பணமாயிருப்பது கோவிலில்தானே? .அப்படிப்பட்ட கோவில்கள் தமிழ் நாட்டிலுள்ளது போல வேறே ஒரு நாட்டிலும் இல்லை, தமிழ் நாட்டிலும் மிகப் பெருவாரியான கோவில்கள் காவேரியின் கரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில்தான். குறிப்பாக, சோணாடு என்கிற சோழ நாட்டில்தான்.

அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர், ஆகிய மூவர் தேவாரம் பாடிய ஷேத்ரங்களைப் 'பாடல் பெற்ற ஸ்தலங்கள்' என்பார்கள். அப்படி மொத்தம் 274. அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி, 90 ஸ்தலங்கள், சோழ நாட்டின் காவேரிக்கு வடக்கு- தெற்குக் கரைகளில் இருக்கிறவைதான்!ஆழ்வார்கள் பெருமாள் மேல் திவ்யப்பரபந்தம் பாடின க்ஷேத்ரங்களை 'திவ்ய தேசம்' என்பார்கள். அப்படி 108. அதில் சைவ க்ஷேத்ரங்கள் அளவுக்குச் சோழநாட்டில் இல்லாவிட்டாலும், அந்தக் காலத்தில் சோழ நாடு, பாண்டி நாடு, மலை நாடு - அதுதான் மலையாளம் என்கிற சேரநாடு -- தொண்டை நாடு, நடு நாடு, வடநாடு என்று பிரித்திருந்ததில் மற்ற எந்த நாட்டையும் விட மிக அதிகமாக சோணாட்டிலேயே இருக்கின்றன. 108-ல் நாற்பது திவ்யதேசம் காவேரி வடகரை, தென்கரைகளில். அடுத்தாற்போல் வரும் தொண்டை நாட்டில் அதில் ஏறக்குறைய பாதியான இருபத்திரண்டுதான்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இம்மைக்குப் பேருபகாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வைஷ்ணவரின் 'கோயில்':விநாயகர் அருள் விளையாடல்
Next