அத்வைதமும் அநுக்ரஹ பாவமும்

அத்வைதமும் அநுக்ரஹ பாவமும்

அத்விதீயமாக இருக்கும் அவ்யக்த ஸித்தியும் அந்த நிலையிலுள்ள பரஹ்மவித்யா குருவின் அநுக்ரஹத்தால் சிஷ்யருக்குக் கிடைக்கும். அதுதான் உச்சாணியான லட்சிய ஸித்தி. ஸர்வமும் அடிபட்டுப்போன முடிவான நிலை.

அப்படியென்றால் ஸர்வத்திலும் வியாபிக்கிற விஷ்ணு நிலையை ஏன் சொல்ல வேண்டும்?

இங்கேதான் கருணை, ப்ரேமை என்பது வருகிறது. ஸர்வமும் அடிபட்டுப்போன அத்விதீய vFF அடைந்த ஒரு மஹான் அப்படியே தம் பாட்டுக்கு ஸமாதியில் இருந்து கொண்டிருக்காமல் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு உபதேசிக்கிறார் என்றால் 'ஸர்வ'த்துக்கு இறங்கி வந்து விட்டாரென்றுதான் அர்த்தம். எதனால் இறங்கினார் என்றால் ப்ரேமையினாலே, கருணையினாலே தான் பெற்ற இன்பம் வையகமும் பெறணும் என்ற கருணையினாலதான் இறங்கி வந்து உபதேசிக்கிறார்.

இறங்கத்தான் செய்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. மனோநாசம் பூர்ணமாகப் பண்ணி ப்ரஹ்மாநுபவம் பெற்றுவிட்ட ஒருவர் அப்புறம் அந்த நிலையிலிருந்து இறங்குவது என்பதே இல்லை.

ஆனாலும், ஏன் - எப்படி என்று தெரியாது, இதுவரை யாரும் அதை விளக்கிச் சொல்லவும் இல்லை - ஸர்வம் அடிபட்டுப் போன நிலைக்குப் போனவர்கள், அந்த நிலையில் இருந்துகொண்டே, நிலை குலையாமலே ஸர்வத்தையும் பார்த்துப் பரம கருணைகொண்டு அதை நல்வழிப்படுத்தணும் என்று நினைத்து குரு வேஷம் போட்டுக் கொண்டு உபதேசித்தருப்பதை நிறையப் பார்க்கிறோம். ஆசார்யாள், சுகாசார்யாள் உள்படப் பல ப்ரம்ம நிஷ்டர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஏன், எப்படி என்றால் தெரியாது!அம்பாள் கார்யம்!

கொட்டிக் கொட்டிக் குளவியாக்குகிறதில் ஸத்குருவானவர் ஸத்தான சிஷ்யனுக்கு அத்வைத ஸித்தி தருவதோடு த்வைத லோகத்தில் இருக்கிற பெருவாரி ஜனங்களை லோக ரீதியான வாழ்க்கையிலே தர்மமாக நடக்கப் பண்ணி நல்வழிப்படுத்தவும் செய்கிறார்.

மறுபடி சொல்கிறேன். குரு லோக ஸம்பந்தப் பட்டிருப்பதால் அவருக்கு அஸலே த்வைத த்ருஷ்டி வந்து விட்டதாகாது. அத்வைதமான ஒன்றையே த்வைத ப்ரபஞ்சத்திற்குள்ளேயும் கண்டு கொள்கிற த்ருஷ்டியோடு தான் குரு கார்யலோகத்தில் இறக்கியிருக்கிற மாதிரி இருப்பது. வாஸ்தவத்தில் இறங்கவில்லை, இறங்கின மாதிரி நமக்குத் தோன்றுகிற நிலை. இது நம்முடைய தோற்றந்தான் .அவருடைய உள்ளாநுபவத்தில் இறக்கம் - ஏற்றம் எதுவும் கிடையாது. (ப்ரபஞ்சம் என்கின்ற) தத்வத்தை அஸலே (ப்ரஹ்மத்தினின்று வேறாகப் பிரிந்த) த்வைதமாகப் பார்க்காமல் அதிலும் அத்வைத ப்ரஹ்மமே ஊடுருவி இருப்பதை - வியாபித்திருப்பதை - அதாவது ப்ரஹ்மமே விஷ்ணுவாக எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதை அநுபவ பூர்வமாகக் கண்டுகொண்டு அவர் குரு வேஷம் போட்டுக் கொண்டு உபதேசிப்பது. அந்தக் கருணையில் ஒரு

பெரிய ஆனந்தம் உண்டு. த்வைத ஆனந்தமும் அத்வைத ஆனந்தமும் 'இப்படி' என்று சொல்ல முடியாமல் கலந்த ஆனந்தம்!அத்வைத அஸ்திவாரத்திலேயே எழும்பின ஆனந்தம். அதாவது உச்ச லட்சியம் நழுவாமலே உண்டான ஒரு வர்ணனாதீதமான ஆனந்தம்!

இதுவும் அவரால் சிஷ்யர்களுக்கு அநுக்ரஹிக்கப் படுகிறது. சிஷ்யரும் குருவாக ஆகி லோகோபகாரமாக உபதேசம் பண்ணும்படி அவர் செய்வதில் இப்படி உள்ளே அத்வைத சாந்தம், வெளியிலே த்வைதம் மாதிரி லோகத்திற்குத் தெரிகிற அநுக்ரஹ க்ருத்யம் என்று ஆகிறது. அப்படித்தான் மஹாவிஷ்ணு லோக பரிபாலனம் பண்ணுவது. இது (குருசெய்வது) சிஷ்யலோக பரிபாலனம்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவின் தன்மையால் சீடன் பெறும் பயன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவாகத் திருமால்
Next