தேவாரத்தில் விநாயகர்

தேவாரத்தில் விநாயகர்

விக்நேச்வரரைப் பற்றி வருகிற இரண்டு தேவாரக் குறிப்புகளை விஷயம் தெரிந்தவர்கள் விசேஷித்துச் சொல்வார்கள். ஒன்று அப்பர் வாக்கு. மற்றது ஸம்பந்தருடையது.

சமணனாயிருந்த பல்லவ ராஜா தன் மாதிரியே சமணராயிருந்து விட்டு அப்புறம் சைவராகி விட்ட அப்பர் ஸ்வாமிகளைப் பல விதத்தில் ஹிம்ஸைப்படுத்திக் காளவாயில் போட்டான், கல்லைக் கட்டி ஸமுத்ரத்திலே போட்டான், அப்புறம் அதெல்லாம் பலிக்கவில்லை என்பதைப் பார்த்துத் தானும் அவரை நமஸ்காரம் பண்ணி வைதிக மதத்திற்குத் திரும்பி விட்டான் என்று கதை கேட்டிருப்பீர்கள். அதிலே காளவாய்க்கும் கல்லைக் கட்டிப் போட்டதற்கும் நடுப்புற (நடுவில்) விஷம் கொடுத்ததாகவும், அவர் மேலே மதயானையை ஏவி விட்டதாகவும் இருக்கிறது. அப்படி மதயானையை ஏவினபோது அவர் பாட்டுக்குக் கொஞ்சங்கூட பயப்படாமல், "அஞ்சுவது யாதென்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை" என்று பதிகம் பாடிக் கொண்டு தீரமாக நின்றார். மத்தகஜம் வேகமாக வருகிறபோது கஜஸம்ஹார மூர்த்தியான ஸ்வாமியை, 'வேழம் உரித்த நிலை' என்று ஸ்துதித்துக் கொண்டு நின்றார் கஜானனரைப் பற்றியும் அந்தப் பதிகத்தில்தான் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்!

"பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே

கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறு."

"அந்தக் களிறு எந்த ஈச்வரனின் பரிவாரத்தில் இருக்கிறதோ, அந்த ஈச்வரனின் "தமர் நாம்", அதாவது, "தம்மவர் நாம்", அதாவது ஈச்வரனே, "இவர்கள் என்னுடைய மநுஷர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் படியான அடியார் நாங்கள் ஆகவே நாங்கள் ராஜா ஏவி விட்டிருக்கிற இந்த மதத் களிறானாலும் ஸரி, வேறே என்ன உத்பாதமானாலும் ஸரி, அஞ்சுவது யாதொன்றுமில்லை!" என்று பாடினார்.

மதயானை அவரைப் பிரதக்ஷிண நமஸ்காரம் பண்ணிவிட்டு ஏவினவனையே தாக்குவதற்குப் பாய்ந்தது. அவன் ஓட்டம் பிடித்தான்.

"கணபதி என்னும் களிறு" பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறாரென்றால்:நம்மில் ஒவ்வொருத்தரும் நூறாயிரம் ஆசைகளை வைத்துக் கொண்டு, ஒன்று பூர்த்தியானால் இன்னொன்று என்று ஸதா பரபரக்கிற, படபடக்கிற சஞ்சல மனஸுக்காராளாக இருக்கிறோம். இதைத்தான் "பல பல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனம்" என்றார். ஸாதாரணமாகச் சொல்வது, ஆசாபூர்த்திக்கு ஏற்படும் இடையூற்றை அகற்றி அது நிறைவேற அநுக்ரஹிக்கிறவரே விக்நேச்வரர் என்பது. ஆனால் அப்பர் ஸ்வாமிகளோ அப்படிச் சொல்லாமல் ரொம்ப 'ஹை லெவ'லுக்குக் கொண்டு போய் விடுகிறார். நல்ல விஷயஜ்ஞரான புலவர்கள் எப்படி அர்த்தம் பண்ணுவார்களோ, எனக்குத் தோன்றுகிற அர்த்தம் இப்படித்தான். என்னவென்றால்:ஆசைப் பூர்த்தி என்று போனால் அதற்கு முடிவேயிருக்காது. ஒன்று பூர்த்தியாச்சென்றால் இன்னொன்று என்று அது போய்க் கொண்டேதான் இருக்கும். முடிவிலே அத்தனை ஆசைகளும் ஸம்ஸார பந்தத்தை மேலும் மேலும் இறுக்குகிறவைதான். கணபதி இதற்குத்தான் அநுக்ரஹிக்கிறாரென்றால் அதொன்றும் சிறப்பில்லை என்று அப்பர் நினைத்திருக்கிறார். அவர் அபிப்ராயத்தில் -

'அநுபவத்தில்' என்று சொல்லணும் - கணபதி என்ன பண்ணுகிறார்? ஆசைகளினால் ஸதா பதறிக் கொண்டிருக்கும் நம் மனஸில் பிள்ளையார் 'கலமலக்கிட்டுத் திரிகிறா'ராம். அப்படியென்றால் ஒரே கலக்காகக் கலக்கிக் கொண்டு உத்ஸாஹமாகச் சுற்றுகிறார் என்று அர்த்தம். ஏற்கெனவே ஆசைகளால் பதைத்துத் கலங்கிப் போயிருக்கிற மனஸை அவர் எதிர்த்திசையில் போட்டுக் கலக்குகிறார். கலக்கல், அதற்கு எதிர்க்கலக்கல், revolution -ம் அதற்கு எதிரான counter revolution -ம் என்றால் என்ன ஆகும்? முதலாவதை இரண்டாவது சமனம் பண்ணி, கலக்கம் எல்லாம் அடங்கி equilibrium என்கிற ஸமநிலையான பரம சாந்தநிலை உண்டாகும். மனஸ் அப்படி சாந்தமாக அடங்கி விட்டால் அதுதான் மோக்ஷம். ஒரு களிறு - ஆண் யானை - எத்தனை சக்தியோடு ஒரு சுழலக்குள்ளே நுழைந்து கலக்கு கலக்கு என்று கலக்கி விளையாடி கம்பீரமாக ஸஞ்சாரம் பண்ணுமோ, அப்படி நம்முடைய ஆசைச் சுழல்மயமான மனஸுக்குள்ளே பரமக்ருபையோடு விக்நேச்வரர் புகுந்து எதிர்ச் சுழலாகச் சுழற்றிக் கொண்டு வெற்றிநடை போட்டுத் திரிகிறாராம்!இது அப்பர் சொல்வது.

ஸம்பந்தமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறாரென்றால்:விக்நேச்வரர் பல வேறு ஸந்தர்ப்பங்களில் பல வேறு அவஸரங்களாக (கோலங்களாக) அவதரித்திருக்கிறார். அவற்றிலே ஒன்றில், படி என்கிற பெண் யானையாக அம்பாள் ஒரு ரூபம் கொண்டிருந்தாள். அந்தக் காலத்தில், ஸ்வாமி (சிவபெருமான்) தன்னுடைய அடியார்களுடைய இடர்களைத் தானே கடிந்து போக்கிவிடாமல் அதற்கென்றே 'ஆதரைஸ்' ஆன ஒரு விக்ன நிவாரண மூர்த்தியைத் தன்னுடைய பிள்ளயாகப் பெற்று, அந்த பிள்ளை மூலம் நடத்தணும் என்று லீலையாக ஒரு ஸங்கல்பம் பண்ணினார். உடனே அவர் ஆண் யானையாகி, பிடியாயிருந்த அம்பாளோடு அப்படி ஒரு புத்ரோத்பத்தி பண்ணினார். இந்த விருத்தாந்தத்தைத்தான் ஸம்பந்தர், வலிவலம் என்று திருவாரூர்கிட்டே மூவரும் பாடின க்ஷேத்ரம் இருக்கிறது, அங்கே பாடின தம்முடைய பதிகத்தில் சொல்லியிருக்கிறார்.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே

வலிவலத்தில் தானதர்ம வள்ளல்களாக 'மிகு கொடை வடிவனிர்' இருப்பதை ஸம்பந்தமூர்த்தி பார்த்தார். உடனே அவருக்குப் பரமேச்வரன் லோகம் பூரவாவுக்குமாக அளித்திருக்கிற பெரிய கொடை ஒன்றைச் சொல்லத் தோன்றிற்று. என்ன கொடை என்றால், அடியார் இடர்கடியவே அவர் கணபதியை வரவழைத்தாரே, அதுதான்

'தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளி'னாரே, அதுதான்

விக்நேச்வரருக்குப் பல நாமாக்கள் இருந்தாலும் அப்பர் பாடல், ஸம்பந்தர்

பாடல் இரண்டிலும் கணபதி என்ற நாமாவே வருகிறது. பிள்ளையார் மந்த்ரங்களில் முக்யமானவற்றிலும் அந்தப் பேர்தான் இருக்கிறது. பிள்ளையார் மதத்தின் பெயரும் 'காணபத்யம்' என்று அந்தப் பேரை வைத்தே இருக்கிறது.

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமி இந்த இரண்டு பேரைப் போலப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடவில்லை. பரமேச்வரனையே ரொம்பவும் நிந்தா ஸ்துதி செய்த 'வன்றொண்டர்' அல்லவா அவர்? பிள்ளையாரையும் அப்படித்தான் இறக்கியிருக்கிறார்!ஒரு இடத்தில் "கணபதியேல் வயிறுதாரி" என்று. இன்னொரிடத்தில் கணக்கு வழக்கில்லாமல் தின்று கொண்டு தொப்பையை வளர்க்கிறதைத் தவிர வேறே ஒன்றும் தெரியாத கணபதி என்ற அர்த்தத்திலே 'எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி, ஒன்றறியான்' என்று சொல்கிறார். இங்கேயும் இரண்டு இடத்திலேயும் கணபதி நாமாதான் இரண்டிலுமே பெருந்தீனிக்காரர் என்று அவருக்கு வசவு!

இப்படி அவர் சொன்னார் என்றுதான் பிள்ளையார், "பெருந்தீனிக்காரன்னுதானே சொன்னே? அப்படியே இருக்கட்டும். ஒளவை படைக்கற பெருந்தீனி முழுசையும் ஸாவகாசமா மொக்கிவிட்டும், ஒனக்கு முந்தி அவ கைலாஸத்துல சேரும்படிப் பண்றேனா, இல்லியா, பார்" என்று கடைசியில் பண்ணிக்காட்டினார் போலிருக்கிறது! ஆனாலும் அவர் ஸுந்தரருக்கு நிறைய அநுக்ரஹங்களும் பண்ணித்தான் இருக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தேவார கர்த்தர் இருவருக்கு அருள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சுந்தரருக்கு அருள்
Next