தேவார கர்த்தர் இருவருக்கு அருள்

'முதலமைச்சர்' என்கிற வார்த்தை பற்றிய வாதம் ஒரு த்ருஷ்டாந்தத்திற்காக ஆரம்பித்தேன். ஒரு ஊரில் பஞ்சம் என்று முதலமைச்சருக்கு ஊரார் பெடிஷன் கொடுத்தால், அவர் கஷ்ட நிவாரணத்துக்காகப் பணம் பண்ணுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவரேயா பணத்தை எடுத்துக் கொண்டு போய் விநியோகம் செய்கிறார்? ஒரு ஸ்பெஷல் ஆபீஸர் போட்டு அவர் மூலந்தானே செய்கிறார்? அப்படி, திருவீழிமிழலையில் பஞ்சம் என்று அப்பர், ஸம்பந்தர் பெடிஷன் கொடுத்து ஈச்வரன் படிக்காசு கொடுத்த போது அதற்கு ஸ்பெஷல் ஆபிஸராகப் பிள்ளையாரையே போட்டு அவர்களுக்கு விநியோகிக்கச் செய்தார். அப்பா ஸொத்தை மூத்த பிள்ளையும் அருள் மனஸோடு அவர்களுக்குக் கொடுத்தார். இரண்டு பீடங்களில் மேலண்டையில் படிக்காசு வைத்தற்குப் பக்கத்திலேயே 'படிக்காசுப் பிள்ளையார்' என்று பேர் வைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார்

இன்னொரு ஸம்பவம். லால்குடிக்குக் கிட்டே அன்பில் என்று ஒரு ஊர். தேவாரத்தில் அதை அன்பில் ஆலந்துரை என்று சொல்லியிருக்கிறது. அப்பரும் ஸம்பந்தரும் அந்த க்ஷேத்ரத்திற்குக் கிளம்பினார்கள். வழியிலே கொள்ளிடம் குறுக்கிட்டது. ஒரே வெள்ளம் பரிசலா, படகா ஒன்றுமே போக முடியாத வெள்ளம் இப்படி ஆச்சே என்று அவர்கள் அக்கரையில் நின்று கொண்டே ஸ்வாமியிடம் முறையிட்டார்கள். அப்போது ஸ்வாமி கேட்டுக் கொள்கிறதற்கு முன்னாடி அங்கேயிருந்த பிள்ளையார்தான், "வெள்ளச் சத்தத்தோட யாரோ ப்ரலாபிக்கிற குரலும் கேக்கறாப்ல இருக்கே" என்று காதை அந்தப் பக்கம் கொஞ்சம் சாய்த்து உன்னிப்பாகக் கேட்டார். 'செவி சாய்க்கிறது' என்பதை நிஜமாகவே பண்ணினார் மஹா பக்தர்களான அப்பர் - ஸுந்தரர்களின் குரல் என்று தெரிந்து கொண்டார். உடனே அப்பாவுக்கு 'ரிலே', 'ரெகமன்டேஷன்' எல்லாம் பண்ணினார். அப்பாவும் உடனே வெள்ளம் வடியும்படிப் பண்ணி அவர்களைக் கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டார். அன்பிலாலந்துறையில் 'செவிசாய்த்த விநாயகர்' என்றே அந்தப் பிள்ளையார் விக்ரஹ ரூபத்தில் அழகாகக் காதைச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஸம்ஸ்க்ருதம் தமிழ் வேரோடேயே சேர்ந்தது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  தேவாரத்தில் விநாயகர்
Next