சான்றோர்
ஒரு ரிஷியின் தியாகம்
ஏரண்டகர் : பெயர்க்காரணம்
ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ''ஏரண்டம்''என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ''விளக்கெண்ணெய் சாமியார்''என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரிஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுககு ஒன்றுதான்.
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்தபெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில், ஸ்வாமிமலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்?எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது - ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொலவார்கள். சிவ தீ¬க்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் 'கொட்டை கட்டி'என்பார்கள். இந்தக் கொட்டை, மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.
இன்னொரு கொட்டை, வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டைமுத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ''நல்ல ருசி, நல்ல வாசனை''என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.
லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும்தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும்போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளககெண்ணெய்யாகத்தான் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். 'பல் விளக்குவது', 'பாத்திரம் விளக்குவது'என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது. ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கி விட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளை தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது.
கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங் காடாகத்தான் இருந்ததாம். ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேச்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம் காடு ஊராயிற்று. புண்ய ஸ்தலமாயிற்று. ஆமணக்கின் கீழ் இருந்து ஸ்வாமி வந்ததால் அதற்கு கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.
இந்த ஊரில்தான் அந்த KS பஹ§ காலமாகத் தபஸ் பண்ணிக்கொண்டிருந்தார். அதனால் 'கொட்டையூர்க்காரர் என்றே அர்த்தம் தருகிற 'ஏரண்டகர்'என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த பெயர் அவருக்கு இன்னொரு விதத்திலும் பொருந்திவிட்டது. ஆமணக்கு எப்படி தன்னையே பிழிந்து கொண்டு எண்ணெய்யாகி ஜனங்களுக்கு உபகரிக்கிறதோ அப்படித் தன்னையே லோகோபகாரமாக இந்த ஏரண்டக ரிஷியும் தியாகம் செய்துகொண்டார். அந்தக் கதையைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். உயிர்த் தியாகிகள், Martyrs என்று ஏதேதோ சொல்கிறார்களே, அந்தத் தத்வம் ஸமீப காலத்து தேச பக்தியில் தான் தோன்றியதென்றில்லை;ததீசியிலிருந்து எத்தனையோ மஹரிஷிகள்கூட ஆதியிலிருந்து ஜனஸமூகத்தின் க்ஷேமத்துக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட நினைத்துத்தான் ஏரண்டகர் கதை ஆரம்பித்தேன்.