ஸம்ஸ்கிருத விரோதம்

ஸம்ஸ்கிருத விரோதம்

ஒரு ஊரிலே ஏழைகள் 'பஞ்சம், பணம் வேணும்' என்று சீஃப் மினிஸ்டருக்கு, முதன் மந்திரி என்கிறார்களே அவருக்கு... இல்லை, இப்போது அதை முதலமைச்சர் என்று ஆக்கியிருக்கிறார்கள். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது!ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சி என்பதாக இப்போது ஒரு 'நல்ல' கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது!அடித்துத் துரத்தும் தலைவர்களில் ஆரம்பித்து இப்படித் தனித் தமிழ் முழக்கம் செய்பவர்களில் எத்தனை பேருக்குத் தமிழிலக்கியத்தில் - தெய்வ ஸம்பந்தமான இலக்கியம் கூடாது என்றே வைத்துவிட்டாலும், 'ஸெக்யுலர் லிட்ரேசரா'கவே வைக்கப்பட்ட தமிழிலக்கியத்தில் திருக்குறள், திருக்குறள் என்கிறார்களே, அதில்கூடப் பரிச்சயம் இருக்கிறது என்று பார்த்தால், ஒரு பெர்ஸென்ட், இரண்டு பெர்ஸென்ட் தேறுமா என்பதே ஸந்தேஹம் என்று தெரிகிறது. ஆனாலும் ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்த வேண்டும் என்று மட்டும் அநேகமாக நூறு பெர்ஸன்ட்காரர்களும் முஸ்தீபாக இருக்கிறார்கள்!அந்த ஸம்ஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்துத் துரத்தினதாக நினைக்கிற இடங்களிலும் இவர்களுக்கே தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது!'அமைச்சர்' ஸமாசாரம் இப்படித்தான். 'மந்திரி (என்ற சொல்) ஸம்ஸ்க்ருதம். அது கூடாது' என்று 'அமைச்ச'ராக்கினால் அந்த 'அமைச்ச'ரும் 'அமாத்யர்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையின் திரிபுதான்! 'த்த', 'த்ய' என்பவை தமிழில் 'ச்ச' என்று மாறும். 'தகரத்துக்குச் சகரம் போலி' என்று புலவர்கள் விதியே காட்டுவார்கள். மைத்துனன் - மச்சினன், பித்தன் - பிச்சன் இத்யாதி பார்க்கிறோம். பேச்சு வழக்கிலே, 'வைத்து', 'புளித்து' என்ற மாதிரி உள்ள வார்த்தைகளை யெல்லாமே, 'வெச்சு', புளிச்சு' என்றெல்லாந்தானே சொல்கிறோம்? அந்த ரீதியில் தான் சப்தங்கள் மாறி மாறி ஸம்ஸ்க்ருத அமாத்யரே தமிழில் முதலில் அமர்த்தராகி அப்புறம் அமைச்சரானது

ஸமீபத்தில் 'மனிதநேயம்' என்று ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் 'மனிதாபிமானம்' என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் 'அபிமானம்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல்தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது ஏனென்றால், 'நேயம்' என்பதும் ஸம்ஸ்கிருத 'ஸ்நேஹ'த்தின் திரிபுதான்!ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள். அந்த ப்ராக்ருத பாஷையில் தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்தரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே 'ஸ்நேஹம்' என்பது 'நேயம்' என்று தான்வரும். அது போகட்டும், 'மனிதநேயம்' என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதுவும் ஸம்ஸ்கிருத 'மநுஷ்ய'வின் திரிபுதானே? இதே மாதிரிதான் 'நீதிபதி' என்பதிலும் 'cF' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையை அப்படியே வைத்துக் கொண்டு, 'பதி' மட்டுந்தான் ஸம்ஸ்கிருதம் என்று நினைத்து விரட்டிவிட்டு 'நீதியரசர்' என்று போடுவதாகத்

தெரிகிறது. இந்த 'அரச' என்பதும், இன்னும் 'அரைய', 'இராய' என்கிறதெல்லாமுங்கூட 'ராஜ' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையின் திரிபுகள்தான். 'மன்னன்', கோ' என்கிறவைதான் 'ராஜா'வுக்கான சுத்தத் தமிழ் வார்த்தைகள்... ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற கார்யங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன!....


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அப்பர் ஸ்வாமிகளுடன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  திருவள்ளுவரின் உதாஹரணம்
Next