அப்பர் ஸ்வாமிகளுடன்

அப்பர் ஸ்வாமிகளுடன்

ஸம்பந்தரை விக்நேச்வரருடன் ஸம்பந்தப்படுத்தும் இன்னும் இரண்டு ஸம்பவங்களில் அப்பர் ஸ்வாமிகளும் ஸம்பந்தப்பட்டிருக்கிறார்.

அந்த இரண்டு தேவாரகர்த்தாக்களும் ஸமகாலத்தவர்கள். ஸம்பந்தருக்கு அப்பர் 'ஸீனியர் கான்டெம்பரரி'. இரண்டுபேருக்கும் பரஸ்பரம் அபார ப்ரியமும் மரியாதையும். சேர்ந்து சேர்ந்தே அநேக க்ஷேத்ரங்களுக்குப் போயிருக்கிறார்கள். அந்த ஊர்களில் இருந்த ஜனங்களுக்கு அப்படியரு பெரிய பாக்யம், சிவ பக்தியிலேயே ஊறிப் பழுத்த பழம் அப்பர், பிஞ்சிலேயே பழுத்த ஸம்பந்தமூர்த்திகள் இரண்டு பேரையும் சேர்தது தர்சிக்கும்படியாக!

அந்த மாதிரி அவர்கள் திருவீழிமிழலை என்ற மஹாக்ஷேத்ரத்திற்குச் சேர்ந்து போனார்கள். அவர்கள் வந்ததில் ஊராருக்கு ரொம்பவும் ஸந்தோஷந்தான். ஆனாலும் அந்த ஸந்தோஷத்தைக் கொஞ்சம் பங்கப்படுத்துவதாக அப்போது அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது.

தன-தான்யம் என்கிறது (வழக்கம்) . தான்யத்திற்கு இந்த மாதிரிப் பஞ்சம் வந்தாலும், தனஸம்ருத்தி (செல்வச் செழிப்பு) இருந்தால் வெளியூர்களிலிருந்து தான்யங்கள் கொள்முதல் செய்து கொண்டு ஸமாளித்து விடலாமோன்னோ? அதனால், ஜனங்களின் கஷ்டத்தைப் பார்த்து மனஸுருகிய அந்த இரண்டு பேரும் ஈச்வரனிடம் பொன் கேட்டுப் பிரார்த்தித்தார்கள். பொன்னாசையைத் தள்ளின இரண்டு பேரும் லோகோபகாரத்திற்காக அப்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்வாமியும் இரண்டு பலிபீடங்களில் அவர்களுக்குப் பொன் வைத்தார். 'படிக்காசு' என்ற நாணய ரூபத்தில் பொன்னை வைத்தார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சம்பந்தருடன் சம்பந்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஸம்ஸ்கிருத விரோதம்
Next