அரசு போஷணை:ஹிந்து மதமும் பிற மதங்களும்

அரசு போஷணை:ஹிந்து மதமும் பிற மதங்களும்

எல்லா மதங்களின் வளர்ச்சிக்காகவும் நம் நாட்டு அரசாங்கம் பொருட்செலவு மேற்கொள்ள வேண்டுமென கூறியது குறித்து ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இதனை ஹிந்து மதம் தவிர்த்த மற்ற மதஸ்தர்களும் நடுநிலையிலிருந்து கவனித்து ஏற்க வேண்டுமென விரும்புகிறோம்.

அம் மதங்களில் முக்கியமாகவுள்ள இரண்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திலிருந்து பொருளுதவி தேவைப்படாது எனும் அளவுக்கு அள்ளிச் சொரிந்து கொண்டேயிருக்க அதற்கென்றேயான ஸ்தாபனங்கள் இருப்பது உலகறிந்த உண்மை. ஸ்தாபன ரீதியில் அமைக்கப்பட்டவை அவை, ஓர் அரசாங்கம் போலவே செயற்படுபவை. முற்காலத்தில் அரசாங்க முறைமையே பிற நாடுகளிலும் தமது அரசை விஸ்தரிப்பதாக இருந்தது போல, இன்றைக்கும் அம்மதங்கள் பிற மதத்தினரையும் தம்மதமாக்கி, அதை விஸ்தரிக்கப் பலவித உபாயங்களைக் கைக்கொண்டிருப்பதையும் உலகு அறியும். இன்றுள்ள நிலையில் மதம் வளருவதற்கு மட்டுமின்றி, ஏராளமாகச் செலவிடவும் அவை பெரும் வசதி பெற்றிருப்பதும் யாவரும் அறிந்த யதார்த்த உண்மையே.

இத் தேசத்தின் மிகவும் பெரும்பாலான ஹிந்து மதத்தவரே இங்கு மாறுபட்டு நிற்பவர். அவர்களது அவல நிலைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு பிற மதஸ்தர்கள் புது ஆலயங்கள் கட்டுவதற்கும், பழுதற்ற அவர்களது பழைய ஆலயங்களைப் புதப்பிப்பதற்கும் நிதியத்திற்காக வேண்டுகோள் விளம்பரங்கள் செய்வதாக நாம் பார்ப்பதேயில்லை. ஹிந்துக்கள் விஷயத்திலோ ஒரு சிறிய கோயிலுக்கும் கூட நீண்ட காலம் வேண்டுகோள் விடுப்பதையும் பார்க்கிறோம். ஸ்தாபனம், தனி மனிதர் என இருவகைப்பட்ட பக்கபலமும் ஹிந்து மதத்திற்கு இல்லாததையே இது காட்டுகிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அரசு புரிய வேண்டிய மத போஷணை, அதனால் அரசு பெறும் லாபம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஹிந்து மதத்தின் நிறுவன அமைப்பு:பண பலமும் ஆள் பலமும் இல்லாதது.
Next